கிருத்திகை விரதம் || karthigai viratham
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
கிருத்திகை விரதம்

மாதம் தோறும் கிருத்திகை விரதங்கள் வருகின்றன. ஒரு சில மாதங்கள் இரண்டு கிருத்திகைகள் வருவதுண்டு. இதனை "உபரி கிருத்திகை' என்பார்கள். கிருத்திகைகளில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை நாள்கள் காட்சியும் மாட்சியுமுடையனவாகும். கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
 
மறுநாள் காலையில் காலைக் கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் பெறலாம் என்பது ஐதீகம்.  ஆறுமுகனின் ஆறு படை வீடுகளிலும், ஏனைய தலங்களிலும், மற்றும் சைவ சமயம் சார்ந்த சபைகளிலும் தை கிருத்திகை, தனி மகத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.  
 
"அபிஷேகத்துக்குப் பழநி! அலங்காரத்துக்குச் செந்தூர்' என்பார்கள். திருச்செந்தூரில் தை கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வருவார். மாலை மதி நிலவில், சாலவும் அழகுடன் கடற்கரை ஓரமாக உலா வரும் அவரை ""அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து அலைவாயுகந்த பெருமாளே'' என்று அருணை வள்ளல் திருப்புகழில் துதி செய்தருளினார்.
 
 தை மாதம் திருவண்ணாமலையில் "ஊடல் உற்சவம்' நிகழும். அப்போது தை கிருத்திகை நாளில், திருவண்ணாமலை குமரன் கோயிலுக்கு அருணாசலேசுவரர் எழுந்தருளும் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலை குமரன் கோயில், அந்நகர் வடக்கு வீதியில் உள்ளது. திருவண்ணாமலை குமரன் கோயிலில், தை கிருத்திகை அன்று அபிஷேக ஆராதனைகள் பெருமளவில் நிகழ்கின்றன. ஆறுமுகன் அடியார்கள் திருக்கூட்டம், அன்று அலைகள்போலத் தொடர்கின்றன.  
 
காஞ்சிபுரம் ஒரு "சோமாஸ்கந்த' தலமுமாகும். காமாட்சி- ஏகாம்பரநாதர் கோயில்களுக்கிடையே "குமரக் கோட்டம்' எனும் தனிக்கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அங்கு பாம்பன் சுவாமிகளுக்கு முருகன் கருணை புரிந்த "மயூரநாதர்' முன்பு அன்று "பஞ்சாமிருத வண்ணம்' (ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய வண்ணங்கள்) பாராயணம் செய்யப் பெறும்.
 
பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் என ஐந்து அருமையான திருமஞ்சனங்களும் நடைபெறுகின்றன. அன்றைய தினம் பக்தகோடிகளுக்கு அன்னதானம் செய்யப்படுகின்றது. ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, தூண்டு சுடராகப் பொலியும் தை கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் - சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட்டு அருளும் பொருளும் பெறுவோமாக!