Logo
சென்னை 17-04-2014 (வியாழக்கிழமை)
முற்றுகை போராட்டத்தில் வாலிபருக்கு அடி-உதை: திருமாவளவனின் தனிச்செயலாளர் கைது
சென்னை, செப். 23-

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடந்த 21-ந்தேதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு  போராட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் ஸ்டெர் லிங் ரோட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தலைமையில்  200 நிர்வாகிகள் திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் லயோலா சப்வே அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காலை 10.30 மணி போராட்டத்துக்காக முன் கூட்டியே அப்பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் காலை நேரங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு சென்ற மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  

இந்த நேரத்தில் அங்கு கூடி இருந்த பத்திரிகையாளர்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கேட்டு செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள் பற்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர் என்ற    வாலிபர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுந்தரை சரமாரியாக அடித்து உதைத்தனர். 

வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை மீட்டு பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சுந்தர் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது தொல். திருமாவளவனின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவேரா மற்றும் சிலர் தாக்குதலில்  ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளஞ்சேகுவேரா கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் அவர் சைதாப்பேட்டையில் வைத்து போலீசில் சிக்கினார். அவதூறாக  பேசி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் சேகுவேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு  வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 4 பேரை தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.

இதற்கிடையே இளம் சேதுவாரா புழல் சிறைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், சுபாஸ்சந்திர போஸ், ரவிச்சந்திரன், சிறுத்தை வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறைவாசல் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இளம் சேதுவாராவை விடுதலை செய்யக் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் வீடு தீக்கிரை

அருணாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் வீடு தீக்கிரையானது. டம்போரிஜோ தொகுதியின் காங்கிரஸ் ....»