காமராஜருக்கு உடல் நலக்குறைவு: தூக்கம் இன்றி அவதி || kamarajar was not well not sleeping
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
காமராஜருக்கு உடல் நலக்குறைவு: தூக்கம் இன்றி அவதி
காமராஜருக்கு உடல் நலக்குறைவு: தூக்கம் இன்றி அவதி


பொதுவாக, காமராஜர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டது இல்லை. ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பின், அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. காமராஜருடன் நெருக்கமாக இருந்தவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள்.

பத்திரிகைகள் தணிக்கைக்கு உள்ளாயின. இந்த சூழ்நிலை குறித்து, காமராஜர் வேதனைப்பட்டார். தன்னை சந்திக்க வந்தவர்களிடம், நாட்டு நிலை பற்றிய தன் கவலையைப் பகிர்ந்து கொண்டார். "நெருக்கடி நிலை" பற்றி ஆலோசிக்க, தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் 1975 ஜுலை 2_ந்தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு காமராஜர் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. காமராஜர் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும், பலவீனமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்கும்படி, காமராஜரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். 4ந்தேதி இரவு, சரியான தூக்கம் இன்றி காமராஜர் அவதிப்பட்டார்.

மறுநாள் காலை, படுக்கையில் உட்கார்ந்தபடி காலை உணவு அருந்தினார். காமராஜருக்கு உடல் நலம் இல்லை என்பதை அறிந்ததும், முதல் அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர் நெடுஞ்செழியனும் காமராஜர் வீட்டுக்குச்சென்று, உடல் நலம் விசாரித்தனர். தமிழக கவர்னர் கே.கே.ஷா, காமராஜர் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தார்.

மத்திய நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் ஓ.வி.அளகேசன் ஆகியோரும் காமராஜர் வீட்டுக்குச்சென்று உடல் நலம் விசாரித்தனர். காமராஜருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. மற்றபடி உடல் நிலை திருப்திகரமாகவே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொண்டைக்கட்டு காரணமாக, பார்வையாளர்களுடன் அதிகம் பேசவேண்டாம் என்று காமராஜரிடம் டாக்டர்கள் கூறினார்கள்.

"நெருக்கடி நிலை"யைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த இந்திரா காந்தி, காமராஜரை ஒன்றும் செய்யவில்லை. தன்னைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தவர் காமராஜர் என்ற நன்றி உணர்வு அவருக்கு இருந்தது. அவர், காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதினார். "நீங்கள் உடல் நலம் இல்லாமல் இருப்பதாக அறிந்தேன்.

விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். பிறந்த நாள் ஜுலை 15ந்தேதி காமராஜர் பிறந்த நாளாகும். உடல் நலம் குன்றியிருந்ததால், தமது 72வது பிறந்த நாளை மிக எளிய முறையில் கொண்டாடினார். அன்று காலை 8.15 மணிக்கு, வீட்டு வராந்தாவுக்கு மெல்ல நடந்து வந்தவர், பலவீனமாகவே காணப்பட்டார்.

காலை முதலே, காங்கிரஸ் தொண்டர்கள் கையில் மாலையுடன் காமராஜர் வீட்டுக்கு வந்தவண்ணம் இருந்தனர். காலை 9 மணிக்கு, காமராஜர் பிறந்த நாள் "கேக்" வெட்டினார். முதல் துண்டை, தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஏ.எல்.அண்ணாமலைக்கு வழங்கினார். காமராஜர் களைப்புடன் காணப்பட்டார்.

ஏராளமானவர்கள் மாலைகளுடன் கூடியிருந்தபோதிலும், அரை மணி நேரத்துக்கு மேல் அவரால் மாலைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. பிறந்த நாளையொட்டி, காமராஜருக்கு இந்திரா காந்தி வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். காலை 11 மணிக்கு காமராஜரை நிருபர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உடல் நலம் பற்றி விசாரித்தனர். "பசி இருக்கிறது. ஆனாலும் களைப்பாக இருக்கிறேன். நாளை முதல் வெளியே உலாவச் செல்லலாம் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்" என்று காமராஜர் தெரிவித்தார். அக்டோபர் 1ந்தேதி சிவாஜி கணேசன் பிறந்த நாள்.

காமராஜர் உடல் நலக்குறைவுடன் இருந்தாலும், அதைப்பொருட்படுத்தாமல் சிவாஜி வீட்டிற்கு சென்று, நேரில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பினார்.
மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

amarprakash160600.gif
amarprakash160600.gif