Logo
சென்னை 23-04-2014 (புதன்கிழமை)
பெரியார் மரணம்: லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி


வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வெ.ரா.பெரியார், 1973 டிசம்பர் 24 ந்தேதி காலை 7.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடல், கார் ("வேன்") மூலம் மாலை 4 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பெரியார் உடல் வந்து சேருவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே, ராஜாஜி மண்டபத்தின் முன் பெரும் திரளான மக்கள், கண்களில் கண்ணீர் வடிய துயரத்துடன் கூடி நின்றனர்.

முதல் அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்தில் காத்திருந்தனர். பெரியார் உடலை வைப்பதற்காக, ராஜாஜி மண்டபத்தின் முன் புறத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையில் ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டு, மேலே வெள்ளை துணி விரிக்கப்பட்டு இருந்தது. மாலை 4 மணிக்கு, பெரியார் உடல் வைக்கப்பட்ட "வேன்" ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது.

பெரியார் உடல், வேனில் இருந்து இறக்கப்பட்ட போது, கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் கண் கலங்கினார்கள். திராவிட கழகத் தொண்டர்கள் கதறி அழுதார்கள். பெரியார் உடல் வந்த வேனில், மணியம்மை இருந்தார். அவர் கதறி அழுதபடி இருந்தார். அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் பெரியார் உடல் வந்த வேனுடன், வேறொரு காரில் வந்தனர்.

ராஜாஜி மண்டபத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார் உடல் வைக்கப்பட்டது. உடல் மீது, திராவிட கழக கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பெரியார் உடல் மீது முதலில் கருணாநிதி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து, அம்மையார், மாதவன், சாதிக் பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், ஓ.பி.ராமன், அன்பில் தர்மலிங்கம், ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். நடிகர் சிவாஜிகணேசன் மலர் வளையம் வைத்து விட்டு, பெரியார் காலடியில் தலை வைத்து கதறி அழுதார்.

ப.காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், ப.ராமச்சந்திரன், கருத்திருமன், அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர்., தமிழரசு கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம், இ.கம்யூனிஸ்டு தலைவர் ராமமூர்த்தி, பல்கலைக்கழக துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, தமிழ்நாடு கம்யூனிஸ்டு தலைவர் மணலி கந்தசாமி, மேல் சபை தலைவர் சி.பி.சிற்றரசு, பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவர், சென்னை செரீப் கே.எஸ்.நாராயணன், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மேயர் முத்து, திராவிட கழக பிரமுகர்கள், நடிகர்கள் எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, டி.கே.பகவதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர். பெண்கள் கறுப்பு சேலை அணிந்திருந்தனர். பெரியார் உடலைப் பார்த்ததும் பலர் "அய்யா, அய்யா" என்று கதறினர். ராஜாஜி மண்டபத்தின் முன்னால் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நீண்ட கியூ வரிசைகளில் நின்றனர். "கியூ"வின் நீளம் ஒரு மைல் தூரம் இருந்தது. அவர்கள் வரிசை யாகச் சென்று, பெரியாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பெரியார் உடல், ராஜாஜி மண்டபத்தில் உள்ள மேடை மீது வைக்கப்பட்ட போது, திராவிட கழக பொதுச் செயலாளர் வீரமணி மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வர்கள் ஓடி வந்து அவரை தூக்கிச் சென்று மயக்கம் தெளியச் செய்தனர். பெரியார் மறைவுக்கு பிரதமர் இந்திரா காந்தி அனுதாபம் தெரிவித்தார்.

முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பிய அனுதாபச் செய்தியில் இந்திரா காந்தி கூறி இருந்ததாவது:-

"பெரியார் மாறுபட்ட கருத்துக்களை கூறி வந்தாலும் ஒரு சிறந்த தலைவராக விளங்கினார். ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கு சவால் விட்டவர் அவர். அவருடைய தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

" மேற்கண்டவாறு இந்திரா காந்தி குறிப்பிட்டிருந்தார்.

முதல் அமைச்சர் கருணாநிதி விடுத்த செய்தியில் கூறியிருந்ததாவது:- பெரியார், தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்த பகுத்தறிவு சிங்கம் கடைசி மூச்சு வரையில் சமுதாயப்பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது.

இன்று தமிழ்நாடு தன்மான உணர்வோடு தலை தூக்கி நிற்பதற்கு காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது.

எங்களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப்பிரிவு பற்றி என்ன சொல்வது என்றே புரியாமல் திண்டாடுகிறேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்த புரட்சிக்காரரை இழந்து விட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடருவோம்."

இவ்வாறு கருணாநிதி கூறியிருந்தார்.
மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை