2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணிசாமி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி || 2g spectrum case subramani swamy petition rejected
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணிசாமி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
2ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணிசாமி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
புதுடெல்லி, ஆக. 24-
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேர் கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டில் நடந்து வருகிறது.
 
இதற்கிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டினார். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தார்.
 
அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்கள். அப்போது சுப்பிரமணிய சுவாமி கோர்ட்டில் ஆஜராகி சில ஆவணங்களை தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) அந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் தீர்ப்பளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் ஆதாயம் அடைந்தார் என்பதை உறுதிபடுத்துவதற்கு எந்த ஆவண ஆதாரமும் இல்லை.
 
ப.சிதம்பரம் தன் மந்திரி பதவிக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கும் எந்தவித ஆதாரமும் இல்லை. ஆ.ராசாவையும், தொலைத்தொடர்பு அதிகாரிகளையும் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக சந்தித்துப் பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக சந்தேகத்தின் பேரில், ப.சிதம்பரம் மீது கிரிமினல் சதி குற்றச்சாட்டை சுமத்த இயலாது.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் சிதம்பரத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கூறியுள்ளது. அந்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு விரும்பவில்லை. ப.சிதம்பரத்தை விசாரணைக்கு சேர்க்க கோரும் சுப்பிரமணிய சுவாமி வாதத்துக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. எனவே சுப்பிரமணிய சுவாமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்.
 
இவ்வாறு நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தனர்.
 
சுப்பிரமணிய சுவாமி போலவே மத்திய பொது நல மையம் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷனும் சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரத்துக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரத்தின் பங்கு என்ன என்பது விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
 
ஆனால் இதற்கும் ஆதாரம் இல்லை என்று கூறி, பிரஷாந்த் பூஷன் மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சேர்க்க சுப்பிரமணிய சுவாமி தீவிரமாக முயன்றார். இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவை முதலில் சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தற்போது சுப்ரீம்கோர்ட்டும் அவர் மனுவை நிராகரித்து விட்டது.
 
இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ப.சிதம்பரம் எந்த தவறும் செய்யவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இது ப.சிதம்பரத்தையும் அவரது ஆதரவாளர் களையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மீது மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக சுப்பிரமணிய சுவாமி கூறினார். சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மீது மறு ஆய்வு மனு கொடுக்க முடிவு செய்துள்ளேன். நான் சதி பற்றி எதுவும் பேசவில்லை. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பற்றி மட்டுமே பேசினேன். இது ஒரு கெட்ட தீர்ப்பு. என் அப்பீல் மனு மீது நான் முழுமையாக எனது வாதங்களை எடுத்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்கவில்லை.
 
நான் கோர்ட்டில் சொல்லாத சில விஷயங்களை கூறி, நீதிபதிகள் அதை அடிப்படையாக வைத்து தீர்ப்பு கொடுத்துள்ளனர். நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு பற்றி மட்டுமே நான் பேசினேன். ஆனால் கோர்ட்டு அதை தொடவே இல்லை.
 
எனவேதான் மறு ஆய்வு மனு செய்ய உள்ளேன்.
 
இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
 
சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி நாராயணசாமி உடனடியாக பதிலடி கொடுத்தார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுப்பிரமணிய சுவாமி எப்போதும் இது மாதிரி மனு தாக்கல் செய்வதை வழக்கில் வைத்துள்ளார். எனவே இந்த வழக்கிலும் சுப்பிரமணிய சுவாமி மனுவுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
 
காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை சுப்பிரமணிய சுவாமி கெடுக்க முயல்கிறார். தொடர்ந்து அவர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் அவரை நாங்கள் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மூலமாகவும் எதிர்கொள்வோம்.
 
சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு செய்தாலும் அதுவும் தள்ளுபடி ஆகிவிடும். ஏனெனில் ப.சிதம்பரம் மீது எந்த புகாரும், வழக்கும் இல்லை.
 
இவ்வாறு மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மனு: சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif