சம்பா சாகுபடி: மேட்டூர் அணை செப்டம்பர் 17 ந்தேதி திறப்பு ஜெயலலிதா அறிவிப்பு || mettur dam will open sep 17 jayalalitha order
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
சம்பா சாகுபடி: மேட்டூர் அணை செப்டம்பர் 17-ந்தேதி திறப்பு- ஜெயலலிதா அறிவிப்பு
சம்பா சாகுபடி: மேட்டூர் அணை செப்டம்பர் 17-ந்தேதி திறப்பு- ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை,ஆக.24-
 
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் 23.8.2012 வரை மேட்டூர் அணைக்கு 95.480 டி.எம்.சி. அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்க வேண்டும். மத்திய நீர் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, இடர்பாடு காலப் பங்கீட்டின்படி கணக்கிட்டாலும் கூட 43.837 டி.எம்.சி. அடி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெறும் 9.187 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் பெறப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டிற்குத் தேவையான நீரை காவிரியிலிருந்து விடுவிப்பது குறித்து காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்று 18.5.2012 அன்று பிரதமரை நான் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்தேன். இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில், காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, இது குறித்து மத்திய அரசின் கருத்தினை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
 
எனினும் காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப்படுவதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காத சூழ்நிலையில், காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தினை உடனே கூட்டுமாறு பிரதமருக்கு மீண்டும் 23.8.2012 அன்று கடிதம் எழுதியுள்ளேன்.
 
தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீரை கர்நாடகம் விடுவிக்காததாலும், காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டி காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தாதன் காரணமாகவும், மேட்டூர் அணையில் 38.813 டி.எம்.சி. அடி தண்ணீரே உள்ளதாலும் இன்று வரை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட இயலவில்லை.
 
இதன் காரணமாக தமிழ்நாட்டின் குறுவை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இருப்பினும், டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக 1,60,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்தச் சூழ்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடி செய்வதற்கு தண்ணீர் விடுவது குறித்தும், மேட்டூர் அணையை திறந்துவிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சம்பா சாகுபடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன உத்திகள் குறித்தும் எனது தலைமையில் 23.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர்,  பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், வேளாண்மைத் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீரின் அளவை கருத்தில் கொண்டும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் என்பதை எதிர்நோக்கியும், சம்பா பயிர் காலம் முழுவதும் நெற்பயிருக்கு தண்ணீர் தேவை என்பதை கருத்தில் கொண்டும், 17.9.2012 முதல் மேட்டூர் அணை சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்படும் என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
 
 மேட்டூர் அணை 17.9.2012 முதல் பாசனத்திற்காக திறந்து விடப்படுவதால், இந்த இடர்ப்பாடு காலத்தில் சம்பா சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய உத்திகளை கையாள வேண்டியது அவசியமாகிறது. 
 
எனவே, சம்பா சாகுபடியில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
1. நேரடி விதைப்பு மூலமும், சமுதாய நாற்றங்கால் தயாரிப்பு மூலமும் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படலாம். அதன் மூலம் சம்பா நெற்பயிரின் காலஅளவு சுமார் 15 முதல் 21 நாட்கள் குறையும்.
 
2. நேரடி விதைப்பு மேற்கொள்ளப்படும் வயல்களில் களை அதிகம் ஏற்படும் என்பதாலும், மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும், உழவு மேற்கொள்வதற்கு ஏதுவாக ஏக்கர் ஒன்றுக்கு 240 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.  இதற்கென முதல் கட்டமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தேவைக்கேற்ப கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்படும். 
 
3. நேரடி விதைப்பு செய்யப்படும் இடங்களில் சரியான பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க ஏதுவாக, விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் வேளாண்மை பொறியியல் துறை 50 விழுக்காடு மானியத்தில் அவற்றை வாடகைக்கு அளிக்கும். இதற்கென 10.8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
 
4. வேளாண்மை பொறியியல் துறையில் தற்போதுள்ள விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகளை அதிகப்படுத்தும் வகையில், 22.50 லட்சம் ரூபாய் செலவில் 30 விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகள் உடனடியாக வாங்கப்படும்.
 
5. களை நீக்குவதற்காக ஏக்கருக்கு 400 ரூபாய் என்ற அடிப்படையில், 50 விழுக்காடு மானிய விலையில்  களைக்கொல்லி மருந்துகள் வழங்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
6. டெல்டா மாவட்டங்களில் 384 கிராமங்களில் முழுமையான திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும்.  இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு முழுமையான திருந்திய நெல் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும்.
 
7. திருந்திய நெல் சாகுபடி கிராமங்களில், திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்வதற்காக, துல்லிய சமன்படுத்தும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் வாடகைக்கு வழங்கப்படும். இதற்கென 15.12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
8. விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் 50 விழுக்காடு மானிய விலையில் வாடகைக்கு அளிக்கப்படும்.  இதற்கென 1 கோடியே 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
9. விவசாயிகள் நடவு செய்யும் இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியம் அளிக்கப்படும்.  இதற்கென 2 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
 
10. வேளாண் பொறியியல் துறை டிராக்டர்கள் மற்றும் நடவு செய்யும் இயந்திரங்களை வாங்கும் வகையில், 3 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
11. சம்பா பயிரின் கால அளவை குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக சமுதாய நாற்றங்கால் திட்டம் என்ற முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
இதன்படி, பம்புசெட்டுகள் வைத்துள்ள முன்னோடி விவசாயிகளின் வயல்களில் அரசு செலவில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டு அந்த நெல் நாற்றுகள் விவசாயிகளுக்கு விலை ஏதுமின்றி விநியோகிக்கப்படும்.  இதற்கென நெல் நாற்றங்கால்கள் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு சான்றளிக்கப்பட்ட விதைகள்,  சாகுபடி செலவிற்காக ஏக்கர் ஒன்றுக்கு 12,000 ரூபாய், ஊக்கத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 3,000 ரூபாய் ஆகியவை வழங்கப்படும்.  ஆரம்ப கட்டமாக 10,000 ஏக்கரில் சமுதாய நாற்றங்கால் அமைக்கப்படும்.  இதற்கென 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 
12. நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடி உரம்
25 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும். இதற்கென 11 கோடியே
25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 
13. நெற் பயிரின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், துத்தநாக சல்பேட், ஜிப்சம், நுண்ணூட்ட உரக் கலவை, உயிர் உரங்கள் ஆகியவை 75 விழுக்காடு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 11 கோடியே
20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 
14. இந்த புதிய உத்திகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் மேற்கொள்ள உரிய பயிற்சி அளிக்கவும் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  இந்தப் புதிய நடவடிக்கைகளுக்காக, மொத்தம் 53 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 
எனது அரசு மேற்கொள்ளவுள்ள இந்த நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளின் நலன்கள் காக்கப்படுவதோடு, தேவையான உணவு தானிய உற்பத்தி கிடைப்பதற்கும் வழிவகை ஏற்படும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பிரதமர் மோடி-சோனியா சந்திப்பில் பேசப்பட்டது என்ன?: அருண் ஜெட்லி பேட்டி

பிரதமர் மோடி- சோனியா சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து மத்திய மந்திரி அருண் ஜெட்லி ....»