புதுடெல்லி, ஆக. 20-
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய கணக்கு தணிக்கை குழுவால் 3 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், நிலக்கரி சுரங்கங்களை முறையான ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்தது, டெல்லி விமான நிலைய மேம்பாட்டு திட்டம் மற்றும் மின்உற்பத்தி திட்டம் ஆகியவற்றினால் ரூ.3.06 லட்சம் கோடி அளவுக்கு தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்ததாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெருமளவில் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை மிஞ்சும் அளவில், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படும் சி.ஏ.ஜி. அறிக்கை, நாடு முழுவதும் அரசியல் வல்லுநர்களின் விவாதத்துக்குரிய பொருளாக மாறியிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் விடுமுறை முடிந்து நாளை பாராளுமன்றம் மீண்டும் தொடங்கும்போது சி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம் பிரச்சினையை உருவாக்கும். மக்களவையும், மாநிலங்களவையும் முதல் முறையாக இப்பிரச்சினையை எதிர்கொள்ள இருப்பதால், வழக்கம்போல் அனல்பறக்கும் விவாதங்கள், அவை ஒத்திவைப்புகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி, பெரும் நெருக்கடி கொடுக்க பா.ஜனதா உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர்.