கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தில் இருந்து வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் வெளியேறினார்கள் || karnataka andhra maharastra north east state workers out
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தில் இருந்து வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் வெளியேறினார்கள்
கர்நாடகா, ஆந்திரா, மராட்டியத்தில் இருந்து வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் வெளியேறினார்கள்
பெங்களூர், ஆக. 17-

வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் பூர்வீக போடோ பழங்குடி இன மக்களுக்கும் வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் திடீர் மோதல் ஏற்பட்டது.

அந்த மோதல் கோக்ரஜார், சிரங், துப்ரி மற்றும் பக்சா மாவட்டங்களில் பரவி மிகப்பெரும் கலவரமாக வெடித்தது. இரு தரப்பினரும் கிராமங்களுக்குள் புகுந்து கொலை, கடத்தல், தீவைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். கலவரத்தில் 77 பேர் பலியான நிலையில், சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

ராணுவம் ரோந்து சென்றதால் அந்த 4 மாவட்டங்களில் பதற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி கொண்டிருந்தது. சுமார் 1 1/2 லட்சம் பேர் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய நிலையில் சுமார் 3 லட்சம் பேர் மட்டும் தொடர்ந்து முகாம்களில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோக்ரஜார், பக்சா மாவட்டங்களில் மீண்டும் திடீரென வன்முறை வெடித்தது. அந்த 2 சம்பவங்களிலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து புதன்கிழமை கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் மாநிலங்களில் திடீரென எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். தகவல்கள் பரவியது.

அந்த தகவல்களில் அசாம், மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப்படும் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து மும்பை, பெங்களூர், புனே நகரங்களில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற பீதி பரவியது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மற்றும் இணையத்தளங்கள் மூலம் இந்த தாக்குதல் பீதி காட்டுத் தீ போல பரவியது. அந்த சமயத்தில் மைசூர், பெங்களூர், புனே நகரங்களில் அடுத்தடுத்து வடகிழக்கு மாநில மக்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால் பீதி அதிகரித்தது.

இதற்கிடையே எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல், ரம்ஜான் முடிந்ததும் தென்இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநில மக்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற புதிய பீதி கிளப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வடகிழக்கு மாநில மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறி தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அசாம் மக்கள் பெங்களூர் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பீதியை கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்த நிலையில் தென் இந்திய நகரங்களில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் மகன், மகள்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் பெங்களூர், புனே, ஐதராபாத், சென்னை நகரங்களில் வசிக்கும் தங்கள் மகன், மகள் மற்றும் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு உடனே புறப்பட்டு வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று தெரிவித்தனர்.

இதனால் பெங்களூர், புனே, ஐதராபாத், சென்னை நகரங்களில் வேலை பார்த்து வரும் மற்றும் படித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் கூட்டம், கூட்டமாக ரெயில் நிலையங்களுக்கு வந்தனர். 20-ந் தேதிக்குள் கிடைக்கும் ரெயிலை பிடித்து ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இதனால் 300 பேர் பயணம் செய்யவேண்டிய ரெயில்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடித்து, பிடித்து ஏறிச் சென்றனர்.

பெங்களூரில் தொடங்கிய இந்த தாக்குதல் பீதி கடந்த 3 நாட்களில் தென் இந்தியா முழுவதும் பரவி விட்டது. புனே ஐதராபாத், சென்னையில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் ஒரு வருடன் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதால் பீதி மேலும் மேலும் பரவி விட்டது. இதனால் தங்கள் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பயத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு ரெயில் நிலையங்களில் ஒன்று திரண்டு தஞ்சம் அடைந்து விட்டனர்.

இந்த பீதியை தணிக்க வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள் கர்நாடகா, ஆந்திரா முதல்- மந்திரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். இதையடுத்து பெங்களூர், புனே, ஐதராபாத் ரெயில் நிலையங்களுக்கு சென்ற மந்திரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார், உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம். போகாதீர்கள். இங்கேயே இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் தாக்குதல் பீதியில் உறைந்துள்ள வட கிழக்கு மாநில மக்கள் அந்த வேண்டுகோள்களை ஏற்க மறுத்து விட்டனர். தங்கள் ஊருக்கு புறப்பட்டு செல்வதில் தீவிரமாக உள்ளனர். பீதியில் உள்ள மக்களை சாந்தப்படுத்த இயலாததால், பெங்களூர், புனே, ஐதராபாத், சென்னையில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த புதன், வியாழன் இரு நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி விட்டனர். இன்று 3-வது நாளாக வடகிழக்கு மாநில மக்கள் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறுவதால், இந்த பீதியை தணிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

பெங்களூர், ஐதராபாத் நகரங்களில் வாழும் வடகிழக்கு மாநில மக்களிடம், பாதுகாப்பு தருகிறோம். பயப்படாதீர்கள் என்ற வாக்குறுதியை போலீசார் அளித்து வருகிறார்கள். என்றாலும் உடனடியாக பீதி தணியுமா? என்ற கேள்விக்குறி கர்நாடகா, ஆந்திராவில் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், நாமக்கல் ஆகிய நகரங்களில் லட்சக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் உள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக கொங்கு மண்டலத்தில் வடகிழக்கு மாநில மக்கள் அதிகமாக உள்ளனர். இவர்களிடமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். தகவல்கள் பரவியுள்ளது.

இந்த தகவல்களால் சென்னையில் உள்ள வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் எந்த பதற்றமும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அன்பாக பழகக்கூடியவர்கள். எனவே சென்னையை எங்கள் சொந்த பூமி போன்ற உணர்வுடன் இருந்து வருகிறோம் என்று வடகிழக்கு மாநில மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

ஆனால் சென்னையில் உள்ள வடகிழக்கு மாநில தொழிலாளர்களிடம் தாங்கள் தாக்கப்படலாம் என்ற பீதி நிலவுகிறது. எனவே தொழிலாளர்கள் மட்டும் உடனடியாக புறப்பட்டு செல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர். அவர்களிடம் அமைதி ஏற்படுத்தி பீதியை தணிக்க தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதால் பெங்களூர், புனே, ஐதராபாத், விசாகப்பட்டினம் நகரங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் தற்காலிக புகலிடம் தேடி சென்னை வரத் தொடங்கி உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

வெள்ள அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் புதிய வசதி: மத்திய அரசுடன் இணைந்து வழங்குகிறது கூகுள்

பெங்களூரு, பிப்.10 சென்ற ஆண்டு புயல் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் 'சைக்ளோன்' வசதியை அறிமுகம் செய்த ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif