சென்னை ஆஸ்பத்திரியில் அண்ணா அனுமதி: லண்டன் டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார் || anna admitted in chennai government hospitals london doctors came treatment
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
சென்னை ஆஸ்பத்திரியில் அண்ணா அனுமதி: லண்டன் டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார்
சென்னை ஆஸ்பத்திரியில் அண்ணா அனுமதி: லண்டன் டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார்

 
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 2.12.1968 அன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள அண்ணா தீர்மானித்தார். "நீங்கள் இந்த விழாவில் பேச வேண்டாம். அதிக நேரம் பேசினால் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படும்" என்று டாக்டர்கள் கூறினார்கள்.
 
"இருப்பது ஒரு உயிர்தான். அது போகப்போவது ஒரு முறைதான். அந்த உயிர் தமிழுக்காக நடைபெறும் இந்த விழாவில் போவதென்றால் போகட்டுமே" என்று கூறி விட்டு, விழாவில் அண்ணா கலந்து கொண்டார்.   இதன்பின் 1969 பொங்கல் நாளன்று, சென்னை தியாகராயநகரில் வாணி மகால் அருகே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழா நடந்தது.
 
கலைவாணர், அண்ணாவின் நெருங்கிய நண்பர். எனவே, டாக்டர்களின் கட்டளைகளையும் மீறி அந்த விழாவில் அண்ணா கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். அண்ணா கடைசியாகக் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுதான். கலைவாணர் உயிரோடு இருந்தபோது அவர் கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி அண்ணா படத்திறப்பு விழாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலகத்தமிழ் மாநாட்டுக்காக திரட்டப்பட்ட நிதியில் மீதியிருந்த தொகையைக் கொண்டு இந்த சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவுக்கு பொதுப் பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் வரவேற்றுப் பேசினார். எம்.ஜி.ஆர்., இந்தி நடிகர் திலீப்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
 
பட அதிபர்கள் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஏ.எல்.சீனிவாசன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிலையைத் திறந்து வைத்து பேசுகையில் அண்ணா கூறியதாவது:-.....
 
"மறைந்த நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இந்தத் தமிழர் திருநாளன்று சிலை திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். இது சில ஆண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும் என்றே பலர் கருதினாலும் நம்முடைய நண்பர் வாசன் அவர்கள் "அதற்கெல்லாம் ஒரு வேளை வரவேண்டும்" என்று குறிப்பிட்டார்கள்.
 
அவ்வாறு வேளை வரவேண்டும் என்று அவர்கள் சொன்னது, வெறும் வைதீகத்தில் சொன்னார்களென்று நான் கருதவில்லை. அவருடைய நண்பர்களாகிய நாங்களெல்லாம் அரசை ஆளுகின்ற அந்த நல்லவேளை வரவேண்டும் என்பது தான், அதற்கு உண்மையான பொருளாக இருக்க முடியுமென்று நான் கருதுகிறேன்.
 
இன்றைய தினம் அரசு நடத்துகின்ற திராவிட முன்னேற்றக் கழக தோழர்களிடத்திலேயும், புரட்சி நடிகர் ராமச்சந்திரன் சொன்னபடி எல்லாக் கட்சிகளிலுமுள்ள நல்லவர்களிடத்திலேயும் கலைவாணர் அவர்களுக்கு நெருங்கிய நட்பும், தொடர்பும் உண்டு.
 
முதல் முதல் ஒரு கலைஞர் எல்லா அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படத்தக்க நிலையைப் பெற்றது என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காலத்திலேதான் என்பதை நாம் அறிகின்ற நேரத்தில் அவருடைய சிறந்த சிறப்பியல்புகளை எண்ணி எண்ணி பெருமகிழ்ச்சியடைய நியாயமிருக்கிறது.
 
கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தம்முடைய தொண்டுகளைச் செய்யவேண்டும், அதற்கு இந்தக்கலை, ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
 
அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல் கலைத்துறைக்கே நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவைப் பாத்திரமென்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவை பாத்திரம். நடக்கின்றபொழுது இடறிக் கீழே விழுவார்கள்; அது நகைச்சுவைப் பாத்திரம்.
 
இப்படியிருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். அவருடைய சிலை திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில் அவரோடு நெருங்கிப்பழகிய என் போன்றோர்களுக்கு ஆயிரத்தெட்டு எண்ணங்கள், நெஞ்சத்திலே அலைமோதத்தான் செய்யும்.
 
அவைகளையெல்லாம் எடுத்து விளக்கிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. என்னுடைய உடல் நிலை அதற்குத் தகுந்ததாகவும் இல்லை. ஆனால் நெஞ்சத்திலே எண்ணி, எண்ணி இன்றல்ல என்றென்றும் நாம் மட்டும் அல்ல, நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ் மகனாக வாழ்ந்தவர் நம்முடைய கலைவாணர் அவர்கள்.
 
அவருடைய சிலையினை உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினர் அமைத்துக்கொடுத்திருப்பது மற்றொரு பொருத்த மானதாகும். அவர்கள் உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஒரு ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடிக் கொடுத்தார்கள். அதைப்போலவே அவர்கள் ஏற்றுக்கொண்ட இந்தச் சிலையமைப்பின் காரியத்தின் மூலம் அவர்கள் கலைத் துறைக்கு நிரந்தரமான ஒரு ஆக்கப்பணியை நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்கள்.
 
அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றுபோல் என்றென்றும் கலை உலகத்திலே உள்ளவர்கள், கலையுலகத்தாலே பயன் பெற்றவர்கள், சீர்திருத்த உலகத்தில் உள்ளவர்கள், சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றுவார்களென்பதில் எனக்கு ஒரு துளி ஐயப்பாடும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு, அவருடைய சிலையினை மகிழ்ச்சியோடும் பெருமிதத் தோடும் திறந்து வைக்கிறேன்."
 
இவ்வாறு அண்ணா கூறினார்.
 
மீண்டும் ஆஸ்பத்திரியில் சில நாட்களுக்குப்பின், மீண்டும் அண்ணாவுக்கு புற்று நோய் தொல்லை கொடுக்கத் தொடங்கியது. அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். அமெரிக்காவிலிருந்து டாக்டர் மில்லர் வரவழைக்கப்பட்டார்.
 
அவர் அண்ணாவைப் பரிசோதித்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார். 25 ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அண்ணாவின் வயிற்றில், புற்று நோய் ஏற்பட்டிருந்த பகுதியில் ரேடியம் ஊசிகள் வைக்கப்பட்டன. புற்று நோயை எரித்து அழித்து விடக்கூடியவை ரேடியம் ஊசிகள். "ரேடியம் ஊசிகள் மிகுந்த ஆற்றல் உள்ளவை.
 
அவை செயல்படும்போது, அண்ணா ஒரு வார காலம் மிகவும் சிரமப்படுவார். பிறகு குணம் அடைந்து விடுவார்" என்று கூறிவிட்டு, மில்லர் அமெரிக்கா திரும்பினார். அண்ணாவுக்கு ஓரளவுக்கு ஓவியம் வரையவும் தெரியும். அவர் நடத்திய "காஞ்சி" இதழில் அவ்வப்போது ஓவியம் வரைவார்.
 
30.8.1964 தேதியிட்ட "காஞ்சி" இதழில் அவரே வரைந்த ஓவியம் இது.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif