சென்னை அண்ணா சாலையில் அண்ணா உருவச்சிலை: ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார் || anna statue in chenni anna salai ramaswamy mudaliar opened
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
சென்னை அண்ணா சாலையில் அண்ணா உருவச்சிலை: ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார்
சென்னை அண்ணா சாலையில் அண்ணா உருவச்சிலை: ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார்

 
சென்னையில், இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு 1968 ஜனவரி 1 ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம், சென்னையில் அண்ணா உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விழாவைக்காண, லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று கல்வி அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் பேசினார்.
 
"அறிஞர் அண்ணாவின் சிலை திறப்பு விழா வுடன் புத்தாண்டு தொடங்குவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்" என்று அவர் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து, அண்ணா உருவச் சிலையை ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார். (ஏ.ராமசாமி முதலியாரும், ஏ.லட்சுமண சாமி முதலியாரும் உலகப்புகழ் பெற்ற இரட்டையர்கள்.
 
மூத்தவரான ராமசாமி முதலியார், தொழில் அதிபர். இளையவர் லட்சுமணசாமி முதலியார், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நீண்ட காலம் இருந்தவர்) சிலையை திறந்து வைத்துப் பேசுகையில் ராமசாமி முதலியார் கூறியதாவது:-
 
"அண்ணா அவர்களின் சிலையைத் திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதல்_அமைச்சர் அண்ணா, எனக்கு உடன் பிறவா தம்பி ஆவார். அவருக்கு இணையாக பேச்சாற்றல் கொண்டவர்கள் யாரும் இல்லை. தமிழில் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் அவர் சிறந்து விளங்கினார். சிலர் சிறப்பாகப் பேசுவார்கள்.
 
ஆனால் பேச்சில் நல்ல கருத்து இருக்காது. ஆனால், அண்ணாவின் பேச்சில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் இருக்கும். "அண்ணா" என்ற சொல், இன்று தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படும் சொல்லாக உள்ளது. அதற்குக் காரணம், அவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் ஆற்றி வருகிற தொண்டுதான்.
 
தமிழகத்தின் வரவு - செலவு (பட்ஜெட்) திட்டத்தை அருமையாகத் தயாரித்திருந்தார். வரவு - செலவு திட்டம் எவ்வாறு சிறப்பாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அது ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது. அண்ணா, என்னுடைய தம்பியைப் போன்றவர் என்றாலும், அவரை "தலைவர்" என்றே அழைக்கிறேன்.
 
இதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறி வாற்றல், வாதத்திறமை ஆகியவை என்னை அவ்வாறு சொல்ல வைக்கின்றன. அண்ணாவை யாராலும் அசைக்க முடியாது. மொழிப் பிரச்சினையில் அவர் "ஆங்கிலமும், தமிழும் போதும்" என்ற இருமொழித் திட்டத்தை வலியுறுத்திக் கூறி வருகிறார்.
 
எந்தக் காரணத்தைக்கொண்டும், இந்தித் திணிப்பை அவர் அனுமதிக்க மாட்டார். எனவே, மொழிப்பிரச்சி னைக்குத் தீர்வு காணும் பொறுப்பை, அண்ணாவிடம் மாணவர்கள் விட்டு விடவேண்டும்."
 
இவ்வாறு ராமசாமி முதலியார் கூறினார்..
 
சிலையைத் தயாரித்து வழங்கியவர் எம்.ஜி.ஆர். சிலையை அரசு ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்தார். சிலை செய்த சிற்பி பிள்ளைக்கும் கருணாநிதி மாலை அணிவித்தார். சிலையைப் பெற்றுக்கொண்ட கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-....
 
"அண்ணாவுக்கு சிலை அமைக்க சென்னை மாநகராட்சி முதலில் முயற்சி எடுத்தது. ஆனால், தனக்கு சிலை வேண்டாம் என்று அண்ணா மறுத்துவிட்டதால், சிலை அமைப்பு முயற்சி தொடக்கத்திலேயே நின்று விட்டது. அதன்பின், உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, ஆன்றோர், சான்றோர்களின் சிலைகளை அமைக்க முடிவு எடுத்தபோது, அண்ணாவின் சிலையை அமைக்க ஆசைப்பட்டோம்.
 
நானும், நாவலரும் அண்ணாவை சந்தித்து எங்கள் விருப்பத்தை சொன்னபோது, அண்ணா எங்களைக் கடிந்து கொண்டதுடன், "சிலை வேண்டாம்" என்று மீண்டும் மறுத்துவிட்டார். அதன் பிறகு, நானும், எம்.ஜி.ஆரும் அண்ணாவை சந்தித்து, சிலை வைக்க அனுமதி கேட்டு தொல்லை கொடுத்தோம்.
 
எங்கள் முயற்சிகள் தோல்வியே அடைந்தன. இதனால், நாங்கள் அண்ணாவுக்குத் தெரியாமலேயே "உலகத் தமிழ் மாநாட்டின்போது அண்ணாவின் சிலையும் திறக்கப்படும்" என்று அறிவித்தோம். இந்த அறிவிப்பைக் கண்டதும் அண்ணா அவர்கள் எங்கள் மீது கோபப்பட்டார். அந்தக் கோபம் குழந்தையின் மீது தாய் கொள்ளும் கோபம் என்று கருதி, நாங்கள் கடமையிலேயே கண்ணாக இருந்தோம்.
 
"அண்ணாவின் சிலை சரியாக அமையவில்லை" என்று சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. இதைக் காரணம் காட்டி, "சிலை ஏற்பாட்டை நிறுத்திவிடுங்கள்" என்று, அண்ணா கூறினார். ஆனால், நாங்கள் எங்கள் முயற்சியை கைவிட வில்லை. இதற்கிடையே, சென்னை நகரசபைக்காக செய்யப்பட்ட அண்ணாவின் சிலை தயாரிக்கப்பட்டு இருந்தது.
 
அண்ணாவிடம் எதுவும் கூறாமல், அந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றோம். அங்கு போனதும், விஷயத்தை அண்ணா அறிந்து கொண்டு எங்களைக் கடிந்து கொண்டார். இவ்வாறு அண்ணாவுடன் பலநாள் போராடி வென்ற பிறகுதான், இந்த சிலை இங்கே திறக்கப்படுகிறது.
 
இந்த சிலையில், அண்ணாவின் வலது கை ஆள் காட்டி விரல் சுட்டிக்காட்டுவதுபோலவும், இடது கையில் ஒரு புத்தகம் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. அண்ணாவின் சுட்டு விரல் அசைவுக்கு இந்த நாடே காத்திருக்கிறது என்பதையும், அண்ணாவின் கையில் இந்த நாடு இருக்கிறது என்பதையும் காட்டும் வகையில் சிலை இவ்வாறாக வடிவமைக்கப்பட்டுள்ளது."
 
இவ்வாறு கருணாநிதி கூறினார்..
 
விழாவில் தமிழக அமைச்சர்கள், சபாநாயகர் சி.பா. ஆதித்தனார், மேல்_சபை தலைவர் மாணிக்கவேலர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன், இலங்கை திருச்செல்வம், மேயர் அபிபுல்லாபேக், உலகத் தமிழ் மாநாட்டுக்கு வந்துள்ள தலைவர்கள், சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். விழாத் தொடக்கத்தில், சிதம்பரம் ஜெயராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடினார்.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif