தென் சென்னை பாராளுமன்ற இடைத்தேர்தல் முரசொலி மாறன் வெற்றி || south chennai parliament by election murasoli maran won
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
தென் சென்னை பாராளுமன்ற இடைத்தேர்தல் முரசொலி மாறன் வெற்றி
தென் சென்னை பாராளுமன்ற இடைத்தேர்தல் முரசொலி மாறன் வெற்றி

 
1967 பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் அண்ணா வெற்றி பெற்றார். அவர் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்றதால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.  
 
இந்தத் தேர்தலில், தி.மு.க. சார்பில் முரசொலி மாறன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சி.ஆர்.ராமசாமி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் 8.11.97 அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. ஓட்டு விவரம் வருமாறு:-
 
மொத்த ஓட்டுகள் 5,83,721
பதிவான ஓட்டுகள் 3,86, 728
முரசொலி மாறன் (தி.மு.க.) 2,41, 304
சி.ஆர்.ராமசாமி (காங்) 1,35,596
ராஜரத்தின நாயக்கர் (சுயே) 1,623
அப்துல் காதர் (சுயே) 1,344
சீனிவாசன் (சுயே) 1,100
அங்கண்ண செட்டியார் (சுயே) 574
வைத்தியநாதன்(சுயே) 238
செல்லாதவை 4,949
 
சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் ஜாமீன் தொகை (டெபாசிட்) இழந்தனர். காங்கிரஸ் வேட்பாளரை விட, முரசொலி மாறன் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி பொதுத் தேர்தலில் ஓட்டு வித்தியாசம் 82 ஆயிரம்.
 
பொதுத் தேர்தலில் தென் சென்னையில் பதிவான மொத்த ஓட்டுகளில், 59 சதவீத ஓட்டுகளை அண்ணா பெற்றார். இப்போது 63 சதவீத ஓட்டுகளை மாறன் பெற்றுள்ளார். காங்கிரசுக்கு பொதுத் தேர்தலில் 39 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இப்போது, 35 சதவீத ஓட்டுகள் தான் கிடைத்துள்ளன.   தேர்தல் முடிவு குறித்து முதல் அமைச்சர் அண்ணா ஒரு அறிக்கை விடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
 
" தென் சென்னை தேர்தலில் தி.மு.கழகத்துக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததன் மூலம், அவர்கள் தி.மு.க. ஆட்சியில் மன நிறைவு அடைந்துள்ளனர் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். தி.மு.கழகத்துக்கு ஆதரவளித்த மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தி.மு. கழகம் எப்போதும் மக்கள் பக்கமே இருக்கும். அவர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கும். மக்களின் ஒத்துழைப்பின் மூலமும், பெரியோர்களின் ஆலோசனை மூலமும் , நேர்மையான நிர்வாகம், சமூக நீதி, பொருளாதார மேம்பாடு, சமநிலை ஆகியவற்றை அளித்திட தி.மு.கழகம் உறுதி பூண்டு இருக்கிறது என்பதை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தி.மு.க.ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் தவறாக எண்ணினார். தன் முழு பலத்தையும் இந்தத் தேர்தலில் பயன்படுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தை தானே முன்னின்று நடத்தினார்.
 
அப்படி இருந்தும், தென் சென்னை வாக்காளர்கள் தி.மு. கழகத்திடம் உள்ள நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் முன்பை விட அதிக அளவில் இந்த தேர்தலில் எடுத்துக் காட்டி உள்ளனர். தி.மு.கழகத்துக்கு மக்கள் எவ்வளவு பக்கபலமாக இருக்கிறார்கள் என்பதை இப்போது அவர் புரிந்து கொண்டு இருப்பார் என்று நான் கருதுகிறேன்",
 
இவ்வாறு அண்ணா கூறி உள்ளார்..  
 
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் முதல்-அமைச்சர் அண்ணா வீட்டுக்கு மாறன் சென்றார். அண்ணாவுக்கு மாலை அணிவித்து வணங்கினார். அண்ணாவின் மனைவி ராணி அம்மாளுக்கும் அவர் மாலை அணிவித்தார். மாறனின் வெற்றிக்கு அண்ணா பாராட்டு தெரிவித்து திருக்குறள் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
 
மாறனுக்கு ராணி அம்மாள் இனிப்பு வழங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அத்தாட்சி பத்திரத்தை அண்ணாவிடம் மாறன் கொடுத்து, அவர் காலில் விழுந்து வணங்கினார். பொதுப்பணி அமைச்சர் மு.கருணாநிதி, அரங்கண்ணல் எம்.எல்.ஏ. ஆகியோர் மாறனுடன் வந்திருந்தனர்.
 
அண்ணா வீட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நவுரோஜி ரோட்டில் உள்ள சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி வீட்டுக்கு மாறன் சென்றார். ராஜாஜியை வணங்கி மாலை அணிவித்தார். மாறன் வெற்றிக்கு ராஜாஜி மகிழ்ச்சி தெரிவித்தார். "என் வெற்றிக்கு உங்கள் பேச்சு மிகவும் உதவியது" என்று மாறன் கூறினார்.
 
அதற்கு ராஜாஜி "உங்கள் வெற்றிக்கு இந்திரா காந்தி, மொரார்ஜிதேசாய் ஆகியோரும் காரணம் ஆவார்கள். அவர்கள் இந்தியைப்பற்றி அப்படியெல்லாம் தவறாகப் பேசியதும் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்!" என்றார். பிறகு ராஜாஜி "உங்கள் தி.மு.க. ஆட்சியை யாரும் அசைக்க முடியாது. ஆகவே யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து பணியாற்றி முன்னேறுங்கள்.
 
மக்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்" என்று கூறினார். மாறனுக்கு ராஜாஜி இனிப்பு வழங்கினார். அதை மாறன் வாங்கி சாப்பிட்டார். பிறகு மாறன் ராஜாஜியிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.   எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக விஜயா ஸ்டூடியோவுக்கு மாறன் சென்றார். அப்போது, அங்கு "ரகசிய போலீஸ்" படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்தார்.
 
மாறன் வந்திருப்பதை அறிந்து, அவரிடம் சென்றார். எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்க மாறன் முயன்ற போது, அந்த மாலையை எம்.ஜி.ஆர். வாங்கி மாறனுக்கே அணிவித்தார். "மகத்தான வெற்றி பெற்று இருக்கிறீர்கள். உங்களுக்கு என் பாராட்டு" கூறினார். பின்னர் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஓர்அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தாவது:-
 
"இந்திய துணைக்கண்டமும், வெளிநாடுகளும் கூட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்த தென் சென்னை பாராளுமன்ற இடைத் தேர்தலில் லட்சம் ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்று தி.மு. கழகம் வென்று விட்டது. இது இடைத் தேர்தல் தான் ஆனாலும், முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 1967 பொதுத் தேர்தலின் போது "மக்கள் போதையில் இருந்தார்கள்.
 
அதனால் தான் காங்கிரசை தோற்கடித்து விட்டார்கள். இப்போது மக்கள் நிதானித்து கொண்டார்கள். இனி காங்கிரசை வெல்ல யாராலும் முடியாது" என்று காங்கிரசார் கூறி வந்தார்கள். ஆனால் தாங்கள் போதையினால் தி.மு.கழகத்தை தேர்ந்து எடுக்கவில்லை என்பதை இந்த தேர்தல் வெற்றி மூலம் மக்கள் நிரூபித்து விட்டார்கள்.
 
"ஆட்சியில் காங்கிரஸ்இல்லாததால் தொழிலில் வளர்ச்சி இல்லை. சட்டமும், அமைதியும் காப்பாற்றப் பட வில்லை" என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அந்த பொய்ப்பிரச்சாரத்தை உடைத்து எறிந்து விட்டு தி.மு.கழகத்தின் ஆட்சியை வாழ்த்தி வரவேற்கும் முறையில் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.
 
இந்த தீர்ப்பு இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் எதிர்கால நிலையை உணர்த்தும் மிகச்சிறந்த முன் அறிவிப்பு ஆகும். இத்தகைய மகத்தான வெற்றியை அளித்த தென் சென்னை வாக்காள பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே நேரத்தில் மிகச்சிறந்த வெற்றியின் சின்னமாக விளங்கும் தம்பி மாறனுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
 
இவ்வாறு அறிக்கையில் எம்.ஜி.ஆர்.குறிப்பிட்டு இருந்தார்..
 
தேர்தல் முடிவு பற்றி ஈ.வெ.ரா.பெரியார் இந்திக்கு உள்ள கடும் எதிர்ப்பை "எடுத்துக்காட்டுகிறது" தென் சென்னை தேர்தல் முடிவு பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா பெரியார் ஓரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
 
தென்சென்னையில் தி.மு.கழக வேட்பாளர்முரசொலி மாறன் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்ககூடிய செய்தி. காங்கிரசை படு தோல்வி அடையச் செய்து தி.மு.கழகத்தை வெற்றி அடையச் செய்தது தி.மு.க ஆட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
 
இதன் மூலம் தி.மு.கழக ஆட்சியின் பலம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் "இந்தி வேண்டும்" என்ற அடிப்படையில் போட்டியிட்டார். தி.மு.கழக வேட்பாளார் இந்தி வேண்டாம் என்ற நோக்கத்துடன் போட்டியிட்டார். அதாவது இப்போது நடந்த தேர்தல் "இந்தி வேண்டுமா, வேண்டாமா?" என்ற அடிப்படையிலேயே நடைபெற்றது.
 
மாறன் வெற்றி அடைந்ததால் இந்தி வேண்டாம் என்பதை மக்கள் திட்டவட்டமாக கூறி விட்டார்கள். இதில் இருந்து மக்கள் இந்தியை வெறுக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இந்தி பிரச்சினை இத்தோடு நில்லாமல் இன்னும் எந்தெந்த விதங்களில் மாற்றங்களை கொடுக்குமோ என்பது போகபோகத்தான் தெரியும். தென் சென்னை வாக்காளர்களுக்கு என்னுடைய மன மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு ஈ.வெ.ரா. பெரியார் குறிப்பிட்டு இருந்தார்.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif