மக்கள் நலனுக்காக என்னை சிறையில் அடைத்தாலும் கவலையில்லை: விஜயகாந்த் பேச்சு || dmdk vijayakanth speech virudhunagar
Logo
சென்னை 28-07-2015 (செவ்வாய்க்கிழமை)
மக்கள் நலனுக்காக என்னை சிறையில் அடைத்தாலும் கவலையில்லை: விஜயகாந்த் பேச்சு
மக்கள் நலனுக்காக என்னை சிறையில் அடைத்தாலும் கவலையில்லை: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர், ஆக. 4-

விருதுநகரில் தே.மு. தி.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அவர் கூறியதாவது:-

நான் விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டியில் பிறந்தவன். அங்கிருந்து மாட்டு வண்டியில் விருதுநகர் வந்து மாரியம்மன் கோவில் திருவிழாவினை பார்த்து செல்வோம். விருதுநகர் விருதுபட்டியாக இருந்தது. விருதுநகரில் உள்ள தியேட்டர்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து விட்டு மாட்டு வண்டிக்கு அடியில் படுத்து தூங்கியவன் நான்.

இந்த ஊர் புரோட்டோவுக்கும், சிக்கனுக்கும் பெயர் பெற்ற ஊர். இந்த மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. ஆனால் தற்போது முதல்- அமைச்சர் கொட நாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 2, 3 நாட்கள் ஓய்வு எடுப்பது என்பது தேவைதான். ஆனால் மாதக்கணக்கில் ஓய்வு எடுப்பது ஏன் என்று தெரியவில்லை. அங்கிருந்து தினசரி அறிக்கைகள் வெளிவருகிறது. இவை எல்லாம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை தான். அவை புதிய அறிவிப்புக்களாக வெளிவருகிறது.

அறிவிப்புகள் அறிவிப்புக்களாகவே இருக்கின்றன. செயல்படுத்தப்படுவதில்லை. முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற உடன் 3 மாதங்களில் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று கூறினார். மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஜூலை மாதத்திற்குள் மின் வெட்டு முற்றிலுமாக நீங்கி விடும் என்றார். ஆனால் தற்போது மின்வெட்டு மீண்டும் 5 மணி நேரமாக்கப்பட்டு உள்ளது.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலின் போது உடன்குடி மின் திட்டத்தை தனது நேரடி கண்காணிப்பிலேயே செயல்படுத்தப் போவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் அதிகாரிகள் சென்று பார்த்தார்களே தவிர, இது வரை பணிகள் ஏதும் தொடங்கப்பட வில்லை. போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக டி.வி.யிலேயே காட்டப்படுகிறது. ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டு, 2 ஆயிரம் தான் தருகிறீர்களா என போலீஸ் அதிகாரி கேட்கிறார். இது என்ன நியாயம்? நோ என்ட்ரி அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில் போலீசார் நிற்காமல் அதை தாண்டி நின்று கொண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்த உடன் காசு கேட்கும் அவல நிலை தொடர்கிறது.

சம்பள உயர்வு கேளுங்கள், அதற்காக போராடுங்கள், ஆனால் மக்களிடம் ஏன் இப்படி லஞ்சம் கேட்கிறீர்கள். முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று விட்டால் கொலை, கொள்ளை குற்றங்களை கண்டுபிடிப்பது யார்?

இதே விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் யாரையாவது பிடித்தார்களா? நாங்கள் காக்கிச் சட்டைக்கு மரியாதை கொடுக்கிறோம். உங்கள் சொல்லுக்கு கட்டுப் படுகிறோம், ஆனால் நீங்கள் லஞ்சம் வாங்காமல் மக்கள் நலனுக்காக பாடுபடுங்கள்.

மக்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் திட்டங்களை நிறை வேற்றினால் அவருக்கு சல்யூட் அடிப்பேன். தே.மு.தி.க. தொண்டர்களையும் சல்யூட் அடிக்கச் சொல்வேன். மக்கள் நலனுக்காக யார் பாடுபட்டாலும் அவர்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன். மக்கள் நலனே முக்கியமாகும். நான் மக்கள் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்.

இந்த விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். என்னை பிடித்து சிறையில் அடைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படுபவன் அல்ல. வெங்காயத்தையும், பழைய சோற்றையும் தின்று பழகியவன். கொசுக்கடிக் கெல்லாம் பயப்பட மாட்டேன். அங்கேயே படுத்துவிட தயாராக இருக்கிறேன். எனக்கு மக்கள் நலனே முக்கியம்.

தி.மு.க. தலைவர் டெசோ மாநாடு நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இவர் டெசோ மாநாடு எப்போது நடத்தினார் என்பது எனக்கு தெரியும். தற்போது இலங்கை தமிழர்கள் செத்து மடிந்த பின்பு கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார். இதனால் என்ன பயன்? காங்கிரசார் காமராஜர் ஆட்சியை கொண்டு வரப்போவதாக பேசுகிறார்கள். காமராஜர் உயிரோடு இருக்கும்போது காமராஜர் ஆட்சியை கொண்டு வராதவர்கள் இப்போது காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

விலைவாசி உயர்ந்து வருகிறது. தாய் மார்களுக்குத்தான் இது பற்றி நன்கு தெரியும். காலையிலேயே ரேஷன் கடைக்குச் சென்று வரிசையில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரிய வில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வைரமுனி, மாபா பாண்டியராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார். முன்னதாக நகர செயலாளர் விநாயகம் வரவேற்றார். 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விஜயகாந்த் கல்வி உதவித்தொகை மற்றும் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

விருதுநகர் சலவை தொழிலாளர் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், குந்தலப்பட்டி முதியோர் இல்லத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் மற்றும் வெம்பக்கோட்டை கிராமத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ரூ. 10 லட்சம் வரையிலான கல்விக்கடன் திட்டத்திற்கு அப்துல் கலாமின் பெயர்: டெல்லி அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக டெல்லியை சேர்ந்த ....»

MM-TRC-B.gif