சி.பா.ஆதித்தனார் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார் || S P Adithanar arreste for security law
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
சி.பா.ஆதித்தனார் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார்
சி.பா.ஆதித்தனார் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார்

 
தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதித்தனார் தீவிரமாக ஆதரித்தார். "உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு" என்ற லட்சியத்துக்காக பாடுபட்டு வந்தார். அவரை கைது செய்ய அன்றைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து 1965 அக்டோபர் 9 ந்தேதி, சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் ஆதித்தனாரை ரகசிய போலீஸ் கமிஷனர் எம்.ஆர்.ராமனும் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் கைது செய்தனர்.
 
கைது செய்யப்படும்போது மனைவி கோவிந்தம்மாள் வீட்டில் இருந்தார். ஆதித்தனாருக்கு அரை மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் அவர் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அவரை போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு போலீசார் கொண்டு போனார்கள். பின்னர், இரவு 8.20 மணிக்கு "நீலகிரி எக்ஸ்பிரஸ்" மூலம் அவரை கோவைக்கு கொண்டு சென்றார்கள்.
 
அங்கு, கோவை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.   பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆதித்தனாரை கைது செய்யும்படி அரசாங்கம் உத்தர விட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அரசு உத்தரவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
 
"தமிழ்நாட்டில் பொது ஒழுங்கையும், அமைதியையும் நிலை நாட்டவும், இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாமல் தடுக்கவும் ஆதித்தனாரை காவலில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் கருதுகிறது. ஆகவே, அவரை எங்கு கண்டாலும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் காவலில் வைக்கவேண்டும் என்று இந்திய பாதுகாப்பு சட்டம் 30 வது பிரிவின் கீழ் உத்தரவிடப்படுகிறது."
 
மேற்கண்டவாறு அரசாங்க உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
 
ஆதித்தனார் கைது செய்யப்பட்டது பற்றி, சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினா எழுப்பியபோது, சுதந்திரத் தமிழ்நாடு கேட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக முதல் அமைச்சர் பக்தவச்சலம் பதில் அளித்தார். கோவை சிறையில், தனி "கொட்டறை"யில் ஆதித்தனார் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
 
தனி "கொட்டறை"யில் வைக்கப்பட்டு இருப்பதை ஆதித்தனார் ஆட்சேபித்தார். ஆனால், அந்த ஆட்சேபனையை அரசாங்கம் ஏற்காததால், அவர் தொடர்ந்து தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். 91 நாட்கள் சிறையில் இருந்த ஆதித்தனாரை விடுதலை செய்ய அரசாங்கம் 7.1.66 அன்று உத்தரவு பிறப்பித்தது.
 
அதன்படி, கோவை மத்திய சிறையில் இருந்து காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து `முத்தமிழ்க்காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் கைது செய்யப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னால், அனைத்துக்கட்சி தலைவர்களையும் கூட்டி "இந்தி எதிர்ப்பு மாநாடு" நடத்தியவர் கி.ஆ.பெ.விசுவநாதம். தி
 
ருச்சி பெரிய சவுராஷ்டிர தெருவில் உள்ள விசுவநாதம் வீட்டுக்கு போலீசார் சென்றார்கள். விசுவநாதம் இருந்த மாடிக்குச் சென்றார்கள். "உங்களை கைது செய்து இருக்கிறோம்" என்று விசுவநாதத்திடம் போலீசார் கூறினார்கள். "எந்த சட்டப்படி கைது செய்து இருக்கிறீர்கள்?" என்று விசுவநாதம் கேட்டார்.
 
"பாதுகாப்பு சட்டப்படி!" என்று போலீசார் தெரிவித்தார்கள். சில புத்தகங்களையும், படுக்கையையும் எடுத்துக்கொண்டு விசுவநாதம் கிளம்பினார். இதற்குள் விசுவநாதம் வீட்டைச் சுற்றி ஆண்களும், பெண்களும் திரளாகக் கூடிவிட்டனர். போலீஸ் லாரியில் ஏறிக்கொண்ட விசுவநாதம், "தமிழ்" என்று குரல் எழுப்ப, கூடியிருந்தவர்கள் "வாழ்க" என்று முழக்கம் செய்தார்கள்.
 
கோட்டை போலீஸ் நிலையத்துக்கு விசுவநாதம் கொண்டு போகப்பட்டார். மறுநாள், திருச்சி மாவட்ட மாஜிஸ்திரேட்டு முன் விசுவநாதம் ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடக்கோரி, 12 வக்கீல்கள் மனு கொடுத்தார்கள். அதை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து, கி.ஆ.பெ.விசுவநாதம் காவலில் வைக்கப்பட்டார்.
 
அரசுக்கு எதிராக மக்களை தூண்டும்படி அறிக்கை வெளியிட்ட தாக, விசுவநாதம் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார்.
 
சிறையில் இருந்தபோது, விசுவநாதத்தின் மகள் மணிமேகலையின் திருமண நிச்சயதாம்பூலம் நடந்தது. அதில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. 2 மாத சிறை வாசத்துக்குப்பின், விசுவநாதம் விடுதலை செய்யப்பட்டார்.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif