நேருவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்: ஆங்கிலம் நீடிக்கும் ஜனாதிபதி அறிவிப்பு || Fulfill the nehru promise of freedom English and lasting President announcement
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
நேருவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்: ஆங்கிலம் நீடிக்கும் - ஜனாதிபதி அறிவிப்பு
நேருவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்: ஆங்கிலம் நீடிக்கும் - ஜனாதிபதி அறிவிப்பு

 
இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழியை நிறைவேற்றுவோம். ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேவை இல்லை" என்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
 
1965 பிப்ரவரி 17 ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:-
 
"ஆங்கிலம் நீடிக்கும் என்று நேரு உறுதிமொழி அளித்தார். அந்த உறுதிமொழியை பிரதமர் சாஸ்திரி மீண்டும் உறுதி செய்தார். இந்த உறுதிமொழியை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நாங்கள் நிறைவேற்றுவோம். தேச ஒற்றுமைக்கு இது அவசியம். இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழி ஆகிவிட்டது.
 
என்றாலும், ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும். இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை, ஆங்கிலம் இவ்வாறு துணை ஆட்சி மொழியாக நீடிக்கும். மக்கள் மனதில் உள்ள பயத்தை இது போக்கும் என்று நம்புகிறேன். அச்சம் நீங்கி, மக்கள் அவரவருடைய வழக்கமான வேலைகளை கவனிக்கத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
 
மொழிப் பிரச்சினை முழுவதையும் பாராளுமன்றம் நன்கு பரிசீலனை செய்யும். அதன் சட்ட, நிர்வாக அம்சங்களும் பரிசீலனை செய்யப்படும். முதல் அமைச்சர்கள் இதுபற்றி கூடிப்பேச இருக்கிறார்கள்.
 
இது எவ்வாறு இருப்பினும், தென்னாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மிகவும் வருந்துகிறது. பலாத்கார சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
 
இவ்வாறு ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
ஜனாதிபதியின் பேச்சு, ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படித்தார். பின்னர், இந்தி மொழி பெயர்ப்பை படிக்குமாறு துணை ஜனாதிபதி ஜாகிர் உசேனிடம் கேட்டுக்கொண்டார்.
 
ஆனால், ஜனாதிபதி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவதற்கு சம்யுக்த சோசலிஸ்டு, ஜனசங்கம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தக் கட்சிகளைச் சேர்ந்த 35 "எம்.பி."க்கள் சபைக்கு வராமல், ஜனாதிபதி பேச்சை புறக்கணித்தனர். ஜனாதிபதி பேச்சு பற்றி தமிழக முதல் அமைச்சர் பக்தவச் சலம் கூறியதாவது:-
 
"இந்தியுடன் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நிரந்தரமாக நீடிக்கவேண்டும். இதற்கு சட்டபூர்வமான ஏற்பாடு செய்யவேண்டும். இதுதான் என் கோரிக்கை. ஜனாதிபதியின் பேச்சு, என் கோரிக்கைக்கு வலிமை கொடுக்கிறது."
 
இவ்வாறு பக்தவச்சலம் கூறினார்.  
 
இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு காரணமான மாணவர் தலைவர்களில் பலர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.   இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர், அன்றைய மாணவர் தலைவரும், அன்றைய தமிழக சட்டசபை சபாநாயகருமான காளிமுத்து.
 
அவரும், இப்போது புகழ் பெற்ற கவிஞராக விளங்கும் நா.காமராசனும் அப்போது மதுரையில் தியாகராயர் கல்லூரியில் படித்து வந்தார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து, அரசியல் சட்டத்தை எரிக்க அவர்கள் முடிவு செய்தார்கள். அரசியல் சட்டத்தை எரிக்க விடாமல் தடுக்க, மாணவர் தலைவர்களை முன்கூட்டியே கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
 
அதை அறிந்த காளிமுத்துவும், காமராசனும், போலீசார் கண்ணில்படாமல் தலைமறைவானார்கள். ஆயினும் இவர்கள் 25.1.1965 ந்தேதி மதுரை திலகர் திடலில் அரசியல் சட்டத்தை எரிக்கப்போவதாக நோட்டீசு அச்சிட்டு விநியோகித்தனர். அறிவித்தபடி, அன்றைய தினம் இடைக்காட்டூர் கிராமத்தில் இருந்து மதுரைக்கு சென்றார்கள்.
 
போலீசார் கண்ணில் படாமல் சென்று, அரசியல் சட்டத்தை எரித்து, சாம்பலை காலால் மிதித்தனர். அவர்களை பாதுகாப்பு சட்டப்படி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நேரத்தில் மதுரை மேலமாசி வீதியில் சென்று கொண்டிருந்த மாணவர்கள், காங்கிரஸ்காரர் ஒருவரால் அரிவாளால் வெட்டப்பட்டனர்.
 
காளிமுத்து, காமராசனும் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியும், மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட நிகழ்ச்சியும் மதுரை மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தி எதிர்ப்பு போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. காளிமுத்து, காமராசன் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டபின் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள், எவ்வித விசாரணையும் இன்றி 40 நாட்கள் சிறை வைக்கப்பட்டு இருந்தனர். இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு செயலாளரான பெ.சீனிவாசன், பெங்களூரில் இருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தபோது, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
அவரை, எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு கொண்டு சென்று, தனி அறையில் ரகசியமாக சிறை வைத்தனர். 10 நாட்களுக்குப்பிறகு, இந்த தகவல் மாணவர்களுக்குத் தெரியவந்தது. சட்டக்கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாகத் திரண்டு வந்து, கமிஷனர் ஆபீசு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பெ.சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டார்.  
 
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் தொடங்க மாணவர் தலைவர்கள் திட்டமிட்டனர். இது, போலீசுக்கு தெரிந்தது. ஜுன் முதல் வாரத்தில் பெ.சீனிவாசன், ராஜா முகமது ஆகியோர் உள்பட 10 மாணவர் தலைவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
 
மறைந்த வழக்கறிஞர் மோகன் குமாரமங்கலம் (பிற்காலத்தில் மத்திய அமைச்சரவையில் அமைச்சரானவர்) சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த "ரிட்" மனு காரணமாக, மாணவர் தலைவர்கள் 2 மாத சிறைவாசத்துக்குப்பின் விடுதலை செய்யப்பட்டனர்.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif