இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, பாதுகாப்பு சட்டப்படி கருணாநிதி கைது || anti hindi struggle karunanidhi arrested for Security law
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, பாதுகாப்பு சட்டப்படி கருணாநிதி கைது
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, பாதுகாப்பு சட்டப்படி கருணாநிதி கைது

 
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக, தி.மு.கழகத்தின் முன்னணி தலைவரான மு.கருணாநிதி, பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில், "உள்நாட்டுப்போர்" போல 18 நாட்கள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் 12.2.65 அன்று நிறுத்தப்பட்டது. அதற்கு நான்கு நாட்கள் கழித்து (16ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு) கருணாநிதி கைது செய்யப்பட்டார். கருணாநிதியின் வீடு, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது.
 
நள்ளிரவு 11.45 மணிக்கு அங்கு போலீசார் வந்தார்கள். சென்னை நகர போலீஸ் உதவி கமிஷனர் ராமன் தலைமையில், மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் ஒரு வாடகைக்காரில் வந்து இறங்கினார்கள். அப்போது கருணாநிதி வீட்டில் இல்லை. வெளியே போயிருந்தார். அவர் வருகைக்காக போலீசார் அங்கேயே காத்திருந்தனர்.
 
வெளியே சென்றிருந்த கருணாநிதி, இரவு 12 மணிக்கு வீடு திரும்பினார். அவர் வந்ததும், "உங்களை கைது செய்திருக்கிறோம்" என்று உதவி கமிஷனர் தெரிவித்தார். "அப்படியானால், நான் படுக்கையுடன் கிளம்பட்டுமா?" என்று கருணாநிதி கேட்டார். "சரி. புறப்படுங்கள்" என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.
 
உள்ளே சென்ற கருணாநிதி, படுக்கையுடனும், ஒரு பெட்டியுடனும் வந்தார். அவரை போலீசார் கைது செய்து காரில் ஏற்றி, அழைத்துச் சென்றார்கள். "இந்திய பாதுகாப்பு சட்ட"த்தின் கீழ் கருணாநிதி கைது செய்யப்பட்டு இருப்பதாக நிருபர்களிடம் முதல் அமைச்சர் பக்தவச்சலம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கருணாநிதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு போகப்பட்டார்.
 
அப்போது இரவு 12 மணி. அவரிடம் 1 மணி நேரம் விசாரணை நடந்தது. அதன் பிறகு தூங்கச்சென்ற கருணாநிதியை, அதிகாலை 4 மணிக்கு தட்டி எழுப்பி, மீண்டும் போலீஸ் லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு போனார்கள். அங்கு ஆயுதப்படை போலீஸ் முகாமில் காவலில் வைக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், டாக்டர் வந்து சிகிச்சை அளித்தார். அதன் பின், மதுரை மத்திய சிறையில் கருணாநிதி காவலில் வைக்கப்பட்டார். 18 ந்தேதி அதிகாலை மீண்டும் போலீஸ் லாரி மூலம் பாளையங்கோட்டைக்கு கொண்டு போகப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 
 
பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் இருந்த கருணாநிதியை, பேரறிஞர் அண்ணா சென்று பார்த்தார். கருணாநிதி எழுதிய சில கட்டுரைகளுக்காக, அவர் மீது பாதுகாப்பு சட்டப்படி இன்னொரு வழக்கை அரசாங்கம் தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணைக்காக அவரை பாளையங்கோட்டையில் இருந்து 4.4.1965 அன்று ரெயில் மூலம் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
 
8 ந்தேதி அன்று அவர் எழும்பூர் பிரதம மாகாண மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர். வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், சென்னை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு சட்டத்தின் "30 (1) பி" பிரிவை திடீரென்று அரசாங்கம் ரத்து செய்தது. அந்த பிரிவின் கீழ்தான் கருணாநிதி கைது செய்யப்பட்டிருந்தார்.
 
அந்த விதி ரத்தானதால், 15.4.1965 அன்று கருணாநிதி விடுதலை செய்யப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு சட்டப்படி "முரசொலி" மாறன் கைது செய்யப்பட்டார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள "மேகலா பிக்சர்ஸ்" அலுவலகத்தில், மாலை 6 மணிக்கு அவரை போலீசார் கைது செய்தனர்.
 
பிறகு அவரை போலீஸ் காரில் ஏற்றி, முரசொலி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சோதனை நடத்தி, சில பழைய பிரதிகளைக் கைப்பற்றினார்கள். பிறகு மாறன், போலீஸ் கமிஷனர் ஆபீசுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு அங்கு காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
 
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது முரசொலியில் வெளியான சில செய்திகள், படங்கள், கட்டுரைகளையொட்டி, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாறன் கைது செய்யப்பட்டதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குன்றக்குடி அடிகளாருக்கு தண்டனை ரூ.500 அபராதம் அல்லது 6 வாரம் ஜெயில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, தடையை மீறி ஊர்வலம் போனதாகத் தொடரப்பட்ட வழக்கில், குன்றக்குடி அடிகளாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
 
1965 பிப்ரவரியில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடந்தன. போராட்டத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் குன்றக்குடியிலும் தடை உத்தரவு போடப்பட்டது.
 
இந்த தடை உத்தரவை மீறி, பிப்ரவரி மாதம் 12 ந்தேதி ஊர்வலம் போனதாக குன்றக்குடி அடிகளார் மீது அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. அவருடன் ராஜகோபால், ராஜன், அருணாசலம், ஆறுமுகம் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். 
 
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் சப் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டை குன்றக்குடி மடாதிபதி மறுத்தார். "நான் தடையை மீறவில்லை" என்று கூறினார். இந்த வழக்கில் 31.7.65 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
 
குன்றக்குடி அடிகளாரும், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட ராஜ , ராஜகோபாலன், அருணாசலம், ஆறுமுகம் ஆகிய 4 பேர்களும், காலை 11.45 மணிக்கு கோர்ட்டில் வந்து நின்றார்கள். சரியாக 11.50 மணிக்கு மாஜிஸ்திரேட்டு ரத்தினமுத்து தீர்ப்பு கூறினார்.
 
குன்றக்குடி மடாதிபதிக்கு ரூ.500 அபராதமும் கட்டத்தவறினால் 6 வார ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்ற 4 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதமும், கட்டத்தவறினால் 5 வார ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
"குன்றக்குடி அடிகளாரையும், மற்றவர்களையும் குற்றவாளிகள் என்று தீர்மானித்து இந்த தண்டனையை விதிக்கிறேன்" என்று தீர்ப்பில் மாஜிஸ்திரேட்டு குறிப்பிட்டார். அபராதத் தொகையை அடிகளாரும், மற்றவர்களும் கட்டினார்கள்.
 
தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக குன்றக்குடி அடிகளார் அறிவித்தார். அபராதம் கட்டிய பிறகு, மடாதிபதி காரில் ஏறிப்புறப்பட்டார். போலீஸ் தடையை மீறியதாக மடாதிபதி ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டது இதுவே முதல் தடவை.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif