இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது: 18 நாள் யுத்தம் முடிந்தது || Anti Hindi Protest stoped 18 fight closed
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது: 18 நாள் யுத்தம் முடிந்தது
இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது: 18 நாள் யுத்தம் முடிந்தது

 
தமிழ்நாட்டில், "உள்நாட்டுப் போர்" போல 18 நாட்கள் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், 12.2.1965 அன்று வாபஸ் பெறப்பட்டது. மாணவர் இந்தி எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலாளர் பெ.சீனிவாசன் இதுபற்றி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
 
"முன் அறிவித்தபடி, போராட்ட திட்டத்தின் கடைசி கட்டமாக கடை அடைப்பு (அர்த்தால்) நடந்தது. மாணவர் இந்தி எதிர்ப்பு போராட்ட செயற்குழுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், ராமன் முதலியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்கள். எனவே, சிறைக்கு வெளியே இருக்கும் மாணவர் பிரதிநிதிகள், அடுத்து என்ன செய்வது என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
 
ஆங்கிலம் நிரந்தரமாக நீடிப்பதற்கு சட்டம் இயற்றப்பாடுபடுவதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் பக்தவச்சலம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். சிறையில் உள்ள மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், மாணவர்கள் மீதுள்ள வழக்குகள் கைவிடப்படும் என்றும் பரிபூரணமாக நம்புகிறோம்.
 
இந்த நம்பிக்கையின் அடிப்படையில், போராட்டத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்கிறோம். இந்த முடிவை சென்னையிலும், வெளியூர்களிலும் உள்ள மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம். சிறையில் உள்ள மாணவர்கள் விடுதலையானவுடன் இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு கூடி, மேற்கண்ட முடிவை அதிகாரபூர்வமாக ஏற்கும் என்று எதிர்பார்க்கிறோம்."
 
இவ்வாறு சீனிவாசன் அறிவித்தார்.
 
இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னால், பம்பாய், நாகபுரி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு 12 விமானங்களில் ராணுவத்தினர் கொண்டு வரப்பட்டனர். சென்னையில் நிலைமை மோசமாக இருந்ததால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு போலீசுக்கு உதவியாக இவர்கள் கொண்டு வரப்பட்டனர்.
 
"வன்முறை கட்டுக்கு அடங்காவிட்டால், வன்முறை கூட்டத்தை நோக்கி சுடுங்கள்" என்று போலீசாருக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் சிங்காரவேலு உத்தரவிட்டார். "தேவையானால் எந்த நேரத்திலும் ராணுவத்தினரை எங்கள் உதவிக்கு அழைப்போம்" என்று அவர் சொன்னார்.   கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காமராஜர், சென்னை திரும்பினார்.
 
அவருடன் மத்திய மந்திரி சஞ்சீவ ரெட்டியும் வந்தார். இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேராக முதல் மந்திரி பக்தவச்சலம் வீட்டுக்கு சென்றார்கள். ஏற்கனவே, டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் அங்கு வந்திருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட நிலைமை குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தினர். ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. பிறகு காமராஜர் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் கூறியதாவது:-
 
"நிலைமைகளை முதல் மந்திரி பக்தவச்சலம் கவனித்து வருகிறார். தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். என்னை இங்கு வரச்சொன்னார்கள். வந்தேன். நிலைமை அமைதி ஆகும் வரை, முதல் மந்திரிக்கு உதவியாக இருப்பேன்.
 
2 நாட்களுக்கு முன் சுப்பிரமணியம் என்னுடன் பேசினார். ஆனால் ராஜினாமா பற்றி எதுவும் கூறவில்லை. கேரளாவில் நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது, போன் வசதி இல்லாததால் அவர் ராஜினாமா பற்றிய விவரம் தெரியவில்லை."
 
இவ்வாறு காமராஜர் கூறினார்.
 
மத்திய அரசு வானொலி இலாகா மந்திரி இந்திரா காந்தி சென்னை வந்து பக்தவச்சலத்தை சந்தித்துப் பேசினார். போராட்டம் நிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு 12 ந்தேதி இரவில் வெளியாயிற்று. அதற்கு முன்னதாக பல ஊர்களில் கலவரங்கள் நடந்தன.
 
போராட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகும், அதுபற்றிய தகவல் போய்ச் சேராததால் சில ஊர்களில் வன்முறை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்கனவே, திருப்பூரில் 2 போலீஸ் அதிகாரிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள் அல்லவா? மதுரைக்கு சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூரில் 2 போலீசார் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
 
அங்கு, தபால் நிலையத்தை தாக்கிய கூட்டத்தினர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 2 பேர் காயம் அடைந்தார்கள். கலைந்து சென்ற கூட்டம், மீண்டும் வந்து தபால் நிலையத்துக்குள் புகுந்து சூறையாடியது. இதனால் போலீசார் இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடத்தினர். கலைந்து ஓடியவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்கள்.
 
அங்கு 5 போலீசார் மட்டும் இருந்தார்கள். கூட்டத்தினர் போலீஸ் நிலையத்தை சூழ்ந்து கொண்டு கல் வீசினார்கள். எனவே, அங்கிருந்த போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். 3 பேர் குண்டு பாய்ந்து செத்தார்கள். பலர் காயம் அடைந்தார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர், போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தார்கள்.
 
போலீஸ் காரர்களை ஓட ஓட விரட்டினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களின் கையில் 3 போலீஸ்காரர்கள் சிக்கினார்கள். அவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். 3 போலீஸ்காரர்களில் 2 பேர் அதே இடத்தில் செத்தார்கள். ஒருவர் குற்றுயிராக கிடந்தார். போலீஸ் நிலையத்தின் முன் ஒரு போலீஸ் லாரி நின்று கொண்டிருந்தது.
 
அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். லாரி எரிந்து கொண்டிருந்தபோது, கொலை செய்யப்பட்ட 2 போலீஸ் காரர்களின் பிணங்களையும் தீயில் தூக்கி எறிந்தார்கள். இருவருடைய பிணங்களும் தீயில் கருகின. கொல்லப்பட்ட போலீஸ்காரர்களில் ஒருவர் பெயர் ராமச்சந்திர சிங். வயது 40.
 
இவர் தலைமை போலீஸ்காரர். மற்றொரு போலீஸ்காரர் பெயர் தேவராஜ். 45 வயதான இவர், திறமையான சேவைக்காக 37 பரிசுகள் பெற்றவர். மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். படுகாயம் அடைந்த போலீஸ்காரர் பெயர் முத்துசாமி. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.   போலீஸ்காரர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தி.மு.கழகத்தை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் எம்.ராஜாங்கம் கைது செய்யப்பட்டார்.
 
இவர், உத்தமபாளையம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். போலீஸ்காரர்களை அடித்துக்கொல்ல பொதுமக்களைத் தூண்டியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக மொத்தம் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
(போலீஸ் காவலில் ராஜாங்கம் சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. மதுரை சிறைக்கு கொண்டு போகப்பட்ட அவர், சில நாட்களில் மரணம் அடைந்தார்.) போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றபின், தமிழ்நாட்டில் அமைதி திரும்பியது. ரெயில்கள், பஸ்கள் வழக்கம்போல ஓடின.
 
பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.   18 நாள் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் பல ஊர்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் மொத்தம் 63 பேர் பலியானார்கள். ஒவ்வொரு ஊரிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
 
குமாரபாளையம் 15
பொள்ளாச்சி 10
புதுச்சேரி 10
கோவை 4
திருச்செங்கோடு 4
திருப்பூர் 4
கரூர் 3
பேரணாம்பட்டு (வ.ஆ.) 3
ஜோலார்பேட்டை 2
திருச்சி 2
திருவொற்றியூர் 2
சென்னை 1
ஆற்காடு 1
சென்னிமலை 1
வெள்ளகோவில் 1
மொத்தம் 63
 
அன்றைய மாணவர்கள், இன்றைய தலைவர்கள்!இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவ தலைவர்களில் பலர், பிற்காலத்தில் அரசியலில் முன்னணி தலைவர்களாக உருவானார்கள். போராட்டக்குழுவின் செயலாளரான பெ.சீனிவாசன், பின்னர் தி.மு.க.வில் சேர்ந்தார்.
 
1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். தி.மு.க. ஆட்சியின்போது, சட்டசபை துணை சபாநாயகராக பதவி வகித்தார். காளிமுத்து, தமிழக சட்டசபை சபாநாயகர். வைகோ, மறுமலர்ச்சி தலைவர். ராஜாமுகமது, துரைமுருகன் ஆகியோர் அமைச்சர்களானார்கள்.
 
ம.நடராசன், "தமிழ் அரசி", "புதிய பார்வை" இதழ்களின் ஆசிரியரானார். எஸ்.துரைசாமி, பெரியார் திராவிட கழகத்தின் வழக்கறிஞர். நா.காமராசன், புகழ் பெற்ற கவிஞர். எல்.கணேசன், மறுமலர்ச்சி தி.மு.க.வின் தலைவர்களில் ஒருவர்.
 
போராட்டக்குழுவின் தலைவராக இருந்த ரவிச்சந்திரன், சேலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். எம்.எல்.ராமன் (நீலமலை ராஜா) நீலகிரியில் தோட்ட அதிபராக உயர்ந்தார். நாவளவனும், மற்றும் பலரும் வெவ்வேறு துறைகளில் சாதனை புரிந்தனர்.
Newbharath.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

MudaliyarMatrimony_300x100px.gif