டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: 35 பேர் பலி || delhi coming from chennai Tamil Nadu Express train fire accident 25 persons died
Logo
சென்னை 10-10-2015 (சனிக்கிழமை)
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: 35 பேர் பலி
டெல்லியில் இருந்து சென்னை வந்த
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: 35 பேர் பலி
நெல்லூர், ஜூலை. 30-

டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. அந்த ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று (திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு அந்த ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த ரெயில் நெல்லூர் அருகே தீ விபத்தில் சிக்கியது. இன்று அதிகாலை 4.10 மணிக்கு அந்த ரெயில் நெல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று விட்டு சென்னை நோக்கிப் புறப்பட்டது.

ரெயில் மெல்ல வேகம் எடுத்துக் கொண்டிருந்த போது எஸ்-11 என்ற பெட்டியில் திடீரென தீ பிடித் தது. அந்த பெட்டியின் கழிவறை அருகே இருந்த மின் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறிகள் தெறித்ததால் தீ பிடித்துக் கொண்டது. கண் இமைக்கும் நேரத்துக்குள் தீ புகை அந்த பெட்டி முழுவதும் பரவியது.

தீ பிடித்த பெட்டியில் 72 பயணிகள் இருந்தனர். அதிகாலை என்பதால் சுமார் 30 பயணிகள் விழித்திருந்தனர். புகை மூட்டம் ஏற்பட்டதைக் கண்டு அவர்கள் அலறினார்கள். வாசல் அருகே இருந்த பயணிகள் காயங்களுடன் தப்பிய நிலையில், மற்ற பயணிகள் அந்த பெட்டிக்குள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக 3 அடுக்கு மேல் படுக்கைகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகளால் தப்பி வெளியில் வர முடியவில்லை. கடுமையான தீ மற்றும் புகையால் அவர்கள் நிலை குலைந்து போனார்கள். தங்களைக் காப்பாற்றக் கோரி பயணிகள் அலறினார்கள்.

இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தீ வேகமாக பரவி எஸ்-11 பெட்டி உள்பகுதி முழுவதும் பரவி விட்டது. ரெயிலில் இருந்த ஊழியர்கள் மிக வேகமாக செயல்பட்டு அந்த பெட்டியை தனியாக துண்டித்தனர். இதனால் மற்ற பெட்டிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

தீ விபத்து பற்றி அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், அவசர கால மீட்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்து பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டியின் 2 பக்க கதவுகளும் தீயில் பாதிக்கப்பட்டு ஜாம் ஆகி விட்டதால் திறக்க முடியாமல் போய் விட்டது.

மீட்புப் படையினர் எவ்வளவோ போராடியும் கதவுகளை திறக்க இயலவில்லை. இதன் காரணமாக பயணிகள் தீயில் கருகி அந்த பெட்டிக்குள்ளேயே துடி துடித்து உயிரிழந்தனர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற மரண ஓலத்துடன் பெரும்பாலான பயணிகளின் கடைசி மூச்சு அடங்கியது.

இதற்கிடையே கதவை திறக்க முடியாத மீட்பு படையினர் கியாஸ்- கட்டர்கள் மூலம் பெட்டியை உடைத்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது. அதற்குள் பயணிகளை தீ எரித்து விட்டது. கருகி கிடந்த உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. அந்த உடல்களை கணக்கெடுத்ததில் 35 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. பல பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியபடி கிடந்தனர்.

அவர்களை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்த ரெயில் பெட்டி யில் 72 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அதில் 26 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். 11 பேர் உயிர் தப்பினார்கள். எனவே 35 பேர் பலியாகி இருக்கலாம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளும் முன் பதிவு செய்யாமல் விஜயவாடா, நெல்லூரில் ஏறிய பயணிகளும் இருந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் பட்டியலில் இல்லாத குழந்தைகளும் பயணம் செய்து உள்ளனர். எனவே சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. பெட்டியில் கருகி கிடக்கும் பிணங்களை முழுவதும் மீட்டபின்புதான் சாவு எண்ணிக்கை முழுமையாக தெரியும். ரெயில் நெல்லூரில் இருந்து புறப்பட்டதும் இடையில் எங்கும் நிற்காமல் சென்னை வந்து விடும் என்பதால் பயணிகள் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது தொழில் மற்றும் வியாபார விஷயமாக சென்னைக்கு வந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

ரெயில் விபத்தில் சிக்கிய உறவினர்கள் சென்னையில் விசேஷ ரெயிலில் நெல்லூர் சென்று உள்ளார்கள். அவர்கள் அங்கு சென்ற பிறகு தான் இறந்தவர்கள் பற்றி மேலும் விவரம் தெரிய வரும். ரெயிலில் தீ பிடித்த தகவல் அறிந்ததும் நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். பிறகு அவர்கள் எஸ்-11 பெட்டி தவிர மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை புறப்பட்டு செல்ல ஏற்பாடுகள் செய்தனர். அந்த ரெயில் சிறிது நேரத்தில் சென்னை புறப்பட்டு பகல் 11.35 மணிக்கு சென்ட்ரல் வந்தடைந்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சீனாவில் நகரும் மின் படிக்கட்டில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

பெய்ஜிங், அக். 10–சீனாவின் தென்மேற்கில் உள்ள சாங்குயிங் நகரில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. அதில் பயணம் ....»