Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
இந்தி எதிர்ப்பு போராட்டம்: நள்ளிரவில் அண்ணா கைது - தேசிய கொடியை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 
இந்தி ஆட்சிமொழி ஆக்கப்படும் 26.1.65 குடியரசு தினத்தை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்போவதாக, தி.மு.கழகம் அறிவித்தது, இந்தியா முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். "இந்தியைத் திணிக்கமாட்டோம்" என்று பிரதமர் சாஸ்திரியும், மற்ற மந்திரிகளும் கூறினார்களே தவிர, "இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தை அகற்ற மாட்டோம்" என்று நேரு கொடுத்த உறுதிமொழிக்கு சட்ட வடிவம் கொடுக்க முன்வரவில்லை.
 
"குடியரசு தினத்தை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக தி.மு.கழகத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து, அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும்" என்று முதல் அமைச்சர் பக்தவச்சலம் அறிவித்தார். "துக்க நாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டோம்" என்று போலீசார் கூறினர். பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி தி.மு.கழகம் கொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
குடியரசு தினம் நெருங்க நெருங்க, பதற்றமும், பரபரப்பும் அதிகமாயின. "தி.மு.கழகத்தினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?" என்று பக்தவச்சலத்திடம் நிருபர்கள் கேட்டனர். "தகுந்த நடவடிக்கை எடுப்போம். ஆனால் என்ன நடவடிக்கை என்பதை இப்போது கூற முடியாது" என்று பக்தவச்சலம் பதிலளித்தார்.
 
விடிந்தால் குடியரசு தினம். நள்ளிரவு 1.30 மணிக்கு அண்ணா கைது செய்யப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரை மைதானம் அருகேயுள்ள, முன்னாள் நகரசபை தி.மு.க. உறுப்பினர் ஒருவர் வீட்டில் அண்ணா தங்கியிருந்தார். போலீசார் நள்ளிரவு 1.30 மணிக்கு அங்கு சென்று, அவரை கைது செய்தனர்.
 
அவருடன் இருந்த மதியழகன், அரங்கண்ணல், இரா.செழியன், காஞ்சி மணிமொழியார், அ.பொ.அரசு, சிவி.ராஜகோபால், இரா.சம்பந்தம் மற்றும் சில தி.மு.க.பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர். சென்னையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் என்.வி. நடராசன், நாஞ்சில் மனோகரன், சத்தியவாணிமுத்து, நடிகர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அவர்களுடைய வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.
 
இரா.நெடுஞ்செழியன் ரெயிலில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். மதுரை போய்ச்சேர்ந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். கருணாநிதி குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, காரில் கோவைக்கு சென்று கொண்டு இருந்தார். கரூரில் போலீசார் அந்தக் காரை மடக்கி, அவரைக் கைது செய்தனர்.
 
அவருடன் காரில் பயணம் செய்த தி.மு.க. பிரமுகர் குளித்தலை முத்துகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார். திருச்சியில் அன்பில் தர்மலிங்கமும், சேலத்தில் பாராளு மன்ற உறுப்பினர் க.இராசாராமும் கைதானார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார்கள். 
 
தி.மு.கழகத்தினர் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு விட்டபோதிலும், பல்வேறு இடங்களில் இந்தியை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கடற்கரையில் இந்திப் புத்தகங்களை எரிக்கப் போவதாக மாணவர்கள் அறிவித்து இருந்தார்கள். மாணவர்கள் பிற்பகல் 2 மணியில் இருந்து கடற்கரையில் கூட ஆரம்பித்தார்கள்.
 
கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 150 இரும்புத் தொப்பி போலீசாரும், 150 சாதாரண போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தார்கள். மாலை 5 மணிக்கு சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கூடியதும், கூட்டம் துவங்கியது. கூட்டத்துக்கு சட்டக்கல்லூரி மாணவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். 
 
மாநிலக்கல்லூரி மாணவர் ராஜாமுகமது பேசுகையில், சென்னை கோட்டை முன்பாக உண்ணாவிரதம் இருக்க மாணவர்கள் திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். சீனிவாசன் என்ற மாணவர் பேசுகையில், "குடியரசு தினத்தன்று நடைபெறும் "தேசிய மாணவர் படை" (என்.சி.சி.) அணிவகுப்பில் கலந்து கொள்ள மாட்டோம்" என்று அறிவித்தார் மேலும் பல மாணவர்கள் பேசினார்கள்.
 
அதன் பிறகு, இந்தி புத்தகங்கள் எரிக்கப்பட்டன. முதலில் அனைத்து மாணவர் மன்ற தலைவர் எம்.எம்.ராமன் இந்தி புத்தகங்களை தீ வைத்துக் கொளுத்தினார். மாணவர்கள் "இந்தி ஒழிக" என்று குரல் எழுப்பினார்கள். பிறகு ரவிச்சந்திரன் (சட்டக் கல்லூரி), நா.வளவன் (தியாகராயராயர் கல்லூரி), துரைபாண்டியன் (பச்சையப்பன் கல்லூரி), தியாகராஜன் (சட்டக்கல்லூரி), மகேசுவரன் (சட்டக்கல்லூரி) ஆகியோரும் இந்திப் புத்தகங்களை எரித்தார்கள்.
 
"அடுத்த (1966) ஆண்டு ஜனவரி மாதத்துக்குள், தேசிய மாணவர் படையினருக்கு விதிக்கும் கட்டளைகளை இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், தேசிய மாணவர் படையில் சேரமாட் டோம்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பின் கூட்டம் கலைந்தது.
 
கூட்டத்தினர் கடற்கரையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பெல்ஸ் ரோடும், வாலாஜா ரோடும் சந்திக்கும் இடத்தில் சில இந்திப் புத்தகங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். அப்போது அந்த வழியாக சில பஸ்கள் வந்து கொண்டு இருந்தன. அந்த பஸ்களை மாணவர்கள் வழிமறித்தார்கள். "வேறு வழியாக பஸ்களை ஓட்டுங்கள்.
 
இல்லையேல் கொளுத்துவோம்" என்று மாணவர்கள் கூறினார்கள். அதனால், அந்த பஸ்கள் வேறு வழியாக சென்றன.   அந்த இடத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றை அறுத்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினார்கள். அருகில் இருந்த ஒரு கம்பெனியில் ஒரு தேசியக்கொடி பறந்து கொண்டு இருந்தது.
 
அதை இறக்க வேண்டும் என்று மாணவர்கள் வற்புறுத்தினார்கள். கம்பெனி நிர்வாகி மறுத்ததால், உள்ளே புகுந்து கொடியை அப்புறப்படுத்த முயன்றார்கள். ஆனால், கம்பெனியை சேர்ந்தவர்கள் அந்த மாணவர்களை வெளியே தள்ளி கதவை மூடிக் கொண்டனர். மாணவர்களை தொடர்ந்து, போலீஸ் லாரிகளில் போலீசார் வந்து கொண்டு இருந்தார்கள்.
 
அவர்கள் மாணவர்களை கலைந்து போகும்படி கூறினார்கள். மாணவர்கள் அதற்கு மறுத்து, காங்கிரஸ் கொடிகளை அறுப்பதில் ஈடுபட்டனர். எனவே போலீசார் தடியடி நடத்தினார்கள். தடியடி நடத்தியபின் மாணவர்கள் கலைந்து ஓடினார்கள்.   இந்த கலவரத்தின் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன.
மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை