1965 ஜனவரி, பிப்ரவரியில் தமிழ்நாட்டை குலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம் || hindi opposed demonstration in tamilnadu
Logo
சென்னை 28-02-2015 (சனிக்கிழமை)
1965 ஜனவரி, பிப்ரவரியில் தமிழ்நாட்டை குலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்
1965 ஜனவரி, பிப்ரவரியில் தமிழ்நாட்டை குலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்
காமராஜரை அடுத்து தமிழக முதல்-அமைச்சராகப் பதவி ஏற்ற எம்.பக்தவச்சலம், அரசு நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் உள்ளவர். 'பைல்'களைத் தேங்க விடமாட்டார். உடனுக்குடன் முடிவு எடுப்பார். சட்டசபையில், எதிர்க்கட்சியினரின் பேச்சை கூர்ந்து கவனிப்பார்.
 
விவாதத்துக்குப் பதில் அளிக்கும்போது, எதிர்க்கட்சியினர் எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் பதில் அளிப்பார். புள்ளி விவரங்கள் அவர் விரல் நுனியில் இருக்கும். அப்படிப்பட்ட திறமைசாலிக்கு, 1965 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற 'இந்தி எதிர்ப்புப் போராட்டம்' பெரும் சோதனையாக அமைந்தது.
 
தமிழகம் அதற்கு முன்போ, பின்போ கண்டிராத அளவுக்கு வன்முறைச் சம்பவங்களும், தீக்குளிப்பு நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. ஏறத்தாழ 18 நாட்கள் சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல், 'உள் நாட்டுப்போர்' என்று நினைக்கும் அளவுக்கு, இந்திக்கு எதிராக மாணவர்கள் விஸ்வரூபம் எடுத்துப் போராடினர்.
 
இந்தியைத் திணிக்கப் பலமுறை முயன்று தோல்வி அடைந்த மத்திய அரசு, 1965 ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்) முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்று அறிவித்தது. அவ்வளவுதான். தமிழகம் போர்க்களம் ஆகியது.  
 
தி.மு.கழகத்தின் செயற்குழு கூட்டம் 1965 ஜனவரி 8-ந்தேதி நடந்தது. ஜனவரி 26-ந்தேதி (குடியரசு தினம்) முதல், இந்தி ஆட்சி மொழியாகும் என்று மத்திய அரசு அறிவித்தால் அன்று நாடெங்கும் கறுப்புக்கொடி ஏற்றி, துக்க நாளாக கடைப்பிடிப்பது என்றும், கறுப்புச் சின்னம் அணிவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
 
அன்றைய தினம் தமிழ் நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடைபெறும் என்றும், சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணா பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.தடை விதிக்கப்பட்டால் தடையை மீறுவேன் என்று நிருபர்களிடம் அண்ணா கூறினார்.
 
ஜனவரி 19-ந்தேதி, திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை 'முத்தமிழ்க்காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம் நடத்தினார். மாநாட்டுக்கு பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். மதுரை மில் அதிபரும், 'தமிழ்நாடு' பத்திரிகை ஆசிரியருமான கருமுத்து தியாகராஜ செட்டியார் தமிழ்க்கொடி ஏற்றி வைத்தார். அனைவரையும் வரவேற்று கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பேசினார்.
 
இந்த மாநாட்டில் ராஜாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
 
இந்தி ஆட்சி மொழி ஆகிற ஜனவரி 26-ந்தேதி தி.மு.கழகத்துக்கு எப்படி துக்க நாளோ, அதுபோல் எனக்கும் துக்க நாள். சொல்லப்போனால், தி.மு.கழகத்தினரை விட எனக்கு 2 மடங்கு துக்கம் இருக்கிறது. இந்தி திணிக்கப்படுகிற 26-ந்தேதியை மட்டும் தி.மு.கழகம் துக்க நாளாகக் கொண்டாடுகிறது. என்னைக் கேட்டால், இந்த ஆண்டு முழுவதும் துக்க நாள்தான். கறுப்புக்கொடி தேவையே இல்லை. ஜனவரி 26-ந்தேதி காங்கிரஸ்காரர்கள் ஏற்றி வைக்கும் மூவர்ணக் கொடியே துக்கக் கொடி தான்.
 
இந்திய அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவு, இந்தியை ஆட்சி மொழி ஆக்கும்படி கூறுகிறது. அந்தச் சட்டத்தை தீயிட்டு கொளுத்துவதால், வெறும் காகிதம்தான் எரியும். எனவே அதை கடலில் எறியவேண்டும். இந்த நல்ல காரியத்தை செய்ய அரசாங்கம் முன் வராது. எனவே, அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கவேண்டும். விருப்பப்படி எல்லாம் சட்டத்தைத் திருத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்தித் திணிப்பு சட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? காங்கிரஸ்காரர்களுக்கு, நாட்டை ஆளத்தகுதி இல்லை. எனவே, அவர்களை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும்.
 
ஆங்கிலத்தை விரட்டி விட்டு இந்தியைத் திணிக்க நினைக்கிறார்கள். எல்லா மொழிக்காரர்களுக்கும் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை நீக்கினால் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து
 
இவ்வாறு ராஜாஜி கூறினார்.
 
மாநாட்டில் 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனார், முஸ்லிம் லீக் தலைவர் இஸ்மாயில் சாகிப், தி.மு.க. தலைவர்களில் ஒருவரான இரா.நெடுஞ்செழியன், பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த தலைவர் மூக்கையா தேவர் ஆகியோர் பேசினார்கள். மாநாட்டு அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் நன்றி கூறினார்.
மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

amarprakash160600.gif
amarprakash160600.gif