மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: ராமதாஸ் கைதாகி விடுதலை || lock to tasmac shop protest ramadass arrest and release
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: ராமதாஸ் கைதாகி விடுதலை
மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்: ராமதாஸ் கைதாகி விடுதலை
சென்னை, ஜூலை. 17-
 
பூரண மது விலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை பா.ம.க. இன்று நடத்தியது. சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது:-
 
மது என்றால் என்ன என்பதை தெரியாமல் இருந்த தமிழகத்தில்1971-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி மதுக்கடைகளை திறந்தார். அப்போது தள்ளாத வயதில் இருந்த மூதறிஞர் ராஜாஜி நேரில் சென்று மதுக்கடைகளை திறக்காதீர்கள். இது எதிர் காலத்தை பாதிக்கும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர் சொன்னதையும் கேட்கவில்லை. பெரியார், அண்ணா சொன்னதையும் கேட்கவில்லை.
 
மக்களை காப்பதா? மதுவை விற்று மக்களை கொல்வதா? என்ற என்னுடைய 22 ஆண்டுகால கேள்விக்கு திராவிட கட்சிகள் இன்னும் பதில் சொல்லவில்லை. அரசியல் சட்டத்தில் கூட உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகள், போதை பொருட்களை, மருத்து தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று உள்ளது. அந்த அரசியல் சட்டத்தையும் திராவிட கட்சிகள் மதிக்கவில்லை.
 
எல்லா மதங்களும் மது கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது. அதையும் கேட்கவில்லை. வழிகாட்டிய அரசியல் தலைவர்கள் சொன்னதையும் கேட்க வில்லை. வருவாய் நோக்கிலேயே வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வருகிறார்கள்.
 
இந்த ஆண்டு மதுக்கடைகள் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இதன் மூலம் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு களாலும், நோய் தாக்குதல்களிலும் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
 
வாக்குகளை பெறுவதற்காக ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றன. மதுவால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரேயடியாக மதுக்கடைகளை மூட முடியாது என்கிறார்கள். அப்படியானால் படிப்படியாக மூடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். மும்பையில் ஒரு பகுதியை சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்து போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். அதே சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்தவேண்டும்.
 
இன்னும் 6 மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோல் வீதிக்கு வரமாட்டோம். வருகிற டிசம்பர் மாதம் இரவோடு இரவாக மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவோம்.
 
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பா.ம.க. மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வக்கீல் பாலு, மாவட்ட தலைவர்கள் கன்னியப்பன், ஏழுமலை, வி.ஜெ. பாண்டியன், நிர்வாகிகள் எஸ்.கே. சங்கர், மாம்பலம் வினோத், காமராஜ், சரவணன், மொசைக் ராஜ், ரமணி, முத்துக்குமார், ஆனந்த் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது ஆனார்கள். மதுவால் கணவர்களை இழந்த 15 பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
 
அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்துக்குப்பிறகு அனை வரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோல் அடையாறில் ஆவின் அருகே பா.ம.க. பகுதி செயலாளர் வடிவேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். ஈக்காட்டுத்தாங்கலில் லோகேஸ் தலைமையில் நடந்த போராட்டத்திலும் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
தென் சென்னை தெற்கு மாவட்டத்தில் 10 இடங்களில் நடந்த போராட்டத்தில் மொத்தம் 220 பேர் கைது ஆகினர். இதுபோல் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் நடந்த மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் கைது ஆனார்கள்.
 
இந்த போராட்டத்தையொட்டி அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif