Logo
சென்னை 18-04-2014 (வெள்ளிக்கிழமை)
மீதம் உள்ள தமிழர்களை காப்பதே கடமை: தனிஈழம் பற்றி தீர்மானம் கொண்டு வரமாட்டோம்- கருணாநிதி
சென்னை, ஜூலை. 16 -
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
டெசோ மாநாடு பற்றி சில கட்சிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. 12-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் நோக்கம் பற்றி ஏற்கனவே விளக்க புத்தகங்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
 
மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய மந்திரி சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத்யாதவ், லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நைஜீரிய நாட்டு மந்திரி மூசாஅகமது, ஐக்கிய நாடுகள் சபையின் சுவீடன் நாட்டு மனித உரிமை தூதர் மாலிக் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
 
அமெரிக்கா, கனடா, நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மன், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த தமிழ் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மாநாட்டின் பார்வையாளர்களாக இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி.க்கள் சம்பந்தன், சேனாதிராஜா, யோகேஸ்வரன், கஜேந்திர குமார், பொன்னம்பலம், சுமந்தன், சரவணபவன் ஆகியோர் உள்பட உலகம் முழுவதும் இருந்து தமிழ் அமைப்புகளின் பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
 
கேள்வி: இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதை வலியுறுத்தி டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?
 
பதில்: இப்போது அதுபற்றி எந்த முடிவும் எடுப்பதாக உத்தேசம் இல்லை. கடுமையான போரினால் பாதிக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாப்பதும் அவர்கள் வாழ்வை வளப்படுத்துவதும்தான் முக்கிய குறிக்கோள். அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் மாநாட்டில் தலைவர்கள் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
 
கே: இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?
 
ப: இந்த சமயத்தில் இது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டில் ஆயுத கலாசாரம் உருவாகக்கூடாது என்பது என் கருத்து. அந்த அடிப்படையில் இந்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.
 
கே: என் வாழ்நாளுக்குள் தனி ஈழம் காண்பேன் என்று கூறினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி தீர்மானமே போடப்போவதில்லை என்கிறீர்களே?
 
ப: அதை எப்போதும் சொல்வேன்.
 
கே: தனி ஈழ ஆதரவு தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததா?
 
ப: எந்த நெருக்கடியும் இல்லை.
 
கே: மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று உங்களை சந்தித்த போது டெசோ மாநாடு குறித்து பேசினாரா?
 
ப: அவர் சென்னை வந்ததால் என்னை சந்தித்தார். அப்போது அரசியல் எதுவும் பேசவில்லை.
 
கே: கே.கே. நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனி ஈழம் பற்றி பேசினீர்கள். இப்போது டெசோ மாநாட்டில் அதுபற்றி பேசமாட்டோம் என்கிறீர்களே?
 
ப: டெசோ மாநாட்டுக்கு பல தரப்பினரும் வருகிறார்கள். அவர்களின் கருத்து அறிந்து முடிவு செய்வதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை.
 
கே: பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும், விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறி வரும் நிலையில் இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை தேவையா?
 
ப: அதைபற்றி என்னை விட மாநில அரசுதான் அதிகமாக கவலைப்பட வேண்டும். நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
 
கே: தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துவீர்களா?
 
ப:- தனி ஈழம் வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும்.
 
கே:- மாநாட்டில் ஐ.நா. சபை நடவடிக்கை குறித்து தீர்மானம் வருமா?
 
ப:- அதுபற்றி எல்லாம் மாநாட்டுக்கு வருபவர்களை கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம்.
 
கே:- இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறதே?
 
ப:- இங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்பதே என் கருத்து. தி.மு.க.வை பொருத்தவரை இலங்கையில் ஆயுதப் போராட்டம் கூடாது என்பதே விருப்பம். அதற்கு காரணம் இலங்கை அரசிடம் ராணுவம் உள்ளது. போராளிகளை விட அவர்களுக்கு ஆயுத பலம் அதிகம். இறுதியில் அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல வந்தோம்.
 
கே:- காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனி ஈழத்தில் உடன்பாடு இல்லை. ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?
 
ப:- மாநாட்டின் நோக்கம் பற்றி என்னிடம் கலந்து பேசி விட்டு கருத்து தெரிவித்து இருக்கலாம். அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின்போது மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

விருதுநகர் தொகுதியில் வைகோவை ஆதரித்து விஜய் ரசிகர்கள் பிரசாரம்

விருதுநகர், ஏப். 18–விருதுநகர் தொகுதியில் வைகோவை ஆதரித்து நடிகர் விஜய் ரசிகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.பாரதிய ஜனதா ....»