வெளிநாடுகளில் பல கோடிக்கு விற்பனை செய்த சாமி சிலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை: சுபாஷ் கபூரை 14 நாட்கள் காவலில் எடுக்கிறார்கள் || foreign sales statue seized subash kaboor arrest police custudy
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
வெளிநாடுகளில் பல கோடிக்கு விற்பனை செய்த சாமி சிலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை: சுபாஷ் கபூரை 14 நாட்கள் காவலில் எடுக்கிறார்கள்
வெளிநாடுகளில் பல கோடிக்கு விற்பனை செய்த சாமி சிலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை: சுபாஷ் கபூரை 14 நாட்கள் காவலில் எடுக்கிறார்கள்
சென்னை, ஜூலை.15-

ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. யாரும் கண்டுகொள்ளாமல் சிதிலமடைந்து கிடந்த இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு விலைமதிப்பில்லாத சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

நடராஜர், அம்மன், முருகன், அஸ்டதேவர், தீபலட்சுமி போன்ற சாமி சிலைகள் உள்பட மொத்தம் 18 சிலைகளை ஒரு கும்பல் மூட்டை கட்டி எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சிலைகளை கொள்ளையடித்ததாக கேரளாவை சேர்ந்த பிரபல சிலை கடத்தல் ஆசாமி சஞ்சீவி அசோகன் போலீசில் சிக்கினார். இவருடன் ஸ்ரீராம், மாரிச்சாமி, பிச்சுமணி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சஞ்சீவி அசோகன் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். வரதராஜ பெருமாள் கோவிலில் கடத்தப்பட்ட 18 சிலைகளையும், கப்பல் மூலமாக ஜெர்மனியில் உள்ள சுபாஷ் கபூர் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவர் சர்வதேச அளவில் சாமி சிலைகளை இதே பாணியில் திருடி விற்பனை செய்து வருகிறார் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சுபாஷ் கபூரையும் குற்றவாளியாக சேர்த்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். கோர்ட்டில் கைது வாரண்டு வாங்கிய போலீசார் இதனை வைத்து, அவரை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை நாடினார்கள்.

சுபாஷ்கபூரை கைது செய்ய அனைத்து நாடுகளிலும் உள்ள விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜெர்மன் விமான நிலையத்தில் வைத்து சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டார்.

சிலை தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக நடத்திய கடுமையான போராட்டத்துக்கு பின்னர் நேற்று அதிகாலையில் சுபாஷ் கபூர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுபாஷ் கபூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அரியலூர் கோர்ட்டில் நாளை போலீசார் மனு தாக்கல் செய்கிறார்கள். 14 நாட்கள் காவலில் வைத்து சுபாஷ் கபூரிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்க உள்ளனர். போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதும் சுபாஷ் கபூரிடம் 18 சாமி சிலைகள் குறித்து தீவிரமாக விசரணை நடத்தப்பட உள்ளது.

இந்த சாமி சிலைகள் அனைத்தையும் வெளிநாடுகளில் உள்ள தனது கேலரியில் வைத்து சுபாஷ்கபூர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் அனைத்தையும் பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சிலைகள் அனைத்தும் தற்போது எங்கு, யாரிடம் உள்ளன என்பது பற்றிய விவரங்களை திரட்டும் போலீசார் சுபாஷ் கபூரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நாளை (16-ந்தேதி) மீண்டும் அரியலூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்துச் செல்லப்படும் சுபாஷ் கபூர் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான சஞ்சீவி அசோகன் உள்பட 7 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராகிறார்கள். கடத்தல் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif