மன்மோகன்சிங் ஆலோசனை: மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம் கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய இலாகா || manmohan singh discuss central cabinet soon change manmohan singh
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
மன்மோகன்சிங் ஆலோசனை: மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய இலாகா
மன்மோகன்சிங் ஆலோசனை:
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய இலாகா
புதுடெல்லி, ஜூலை.11-

மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டுள்ளார். பல்வேறு காரணங்களால் இது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் மன்மோகன்சிங் நிதி இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதற்கு முன் மத்திய மந்திரிகள் பலர் பதவி விலக நேரிட்டபோது அவர்களது பொறுப்புகளை மற்ற மந்திரிகள் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். ஆனால் முக்கியமான நிதி இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதால் பிரதமருக்கு பனிச்சுமை அதிகரிக்கிறது. எனவே நிதி இலாகாவை கவனிக்க விரைவில் புதிய மந்திரி நியமிக்கப்படுகிறார்.

தற்போது உள்துறை மந்திரியாக இருக்கும் ப.சிதம்பரத்தை நிதி மந்திரியாக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். ப.சிதம்பரம் ஏற்கனவே பலமுறை நிதி மந்திரியாக இருந்து திறம்பட கையாண்டுள்ளார். பிரணாப்முகர்ஜிக்கு முன்பும், ப.சிதம்பரம்தான் நிதி மந்திரியாக இருந்தார்.

உலக பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படாமல் கவனித்துக் கொண்டார். ஆனால் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்காக ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். உள்நாட்டு பாதுகாப்பில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறாமல் தடுக்க அவ்வப் போது மாநில அரசுகளை உஷார்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். இதேபோல் மேற்குவங்காளம், சத்தீஷ்கர், ஒடிசா மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடவடிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் திறமையான மந்திரியான ப.சிதம்பரத்தை மீண்டும் நிதி மந்திரியாக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார்.

பாராளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. அதற்குள் மத்திய மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ப.சிதம்பரம் மீண்டும் நிதி மந்திரியாக நியமிக்கப்படுகிறார். அவருக்குப் பதில் தற்போது மின்சாரத்துறை மந்திரியாக இருக்கும் சுஷில்குமார் ஷிண்டே உள்துறை மந்திரியாக நிய மிக்கப்படுவார் என்று தெரிகிறது.

மராட்டியத்தை சேர்ந்த இவர் அம்மாநில முதல்-மந்திரியாக ஏற்கனவே பொறுப்பு வகித்துள்ளார். அவரது நீண்ட அனுபவம் உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும் என்று பிரதமர் மன் மோகன்சிங் கருதுகிறார். அத்துடன் பாராளுமன்றத்தில் அவை முன்னவராகவும் சுசில்குமார் ஷிண்டே நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் முன்பு பிரணாப்முகர்ஜி இருந்தார். அவருக்குப்பதில் இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்புக்கு சுசில்குமார் ஷிண்டே பொருத்தமானவர் என்றும் சபையில் ஆளுங்கட்சி சார்பில் பதில் அளிக்க திறமையானவர் என்றும் மன் மோகன்சிங் கருதுகிறார்.

மந்திரிசபை மாற்றத்தின் போது கூட்டணி கட்சிகள் சார்பில் முக்கிய பொறுப்புடன் கூடிய மந்திரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் காலை வாரிவிட்ட நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. எனவே கூட்டணி கட்சிகளுக்கு புதிதாக மந்திரி பதவி அளிக்கப்படுகிறது.

தி.மு.க. சார்பில் மந்திரி சபையில் இடம் பெற்ற ஆ.ராசா உள்ளிட்டோர் பதவி விலகிய பிறகு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே மந்திரிசபை மாற்றத்தின்போது தி.மு.க.வுக்கு புதிய மந்திரி பதவி அளிக்கப்படும். இந்தமுறை ரெயில்வே, மின்சாரம் போன்ற முக்கிய இலாகாக்களை கூட்டணி கூட்சிகளுக்கு கொடுக்க மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். தற்போது ரெயில்வேயை திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி கவனித்து வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் பிளவு ஏற்பட்டதால் அந்த கட்சியின் நிலை இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவரது மகள் அகதா தொடர்ந்து மந்திரியாக நீடித்து வருகிறார். பீகார் தேர்தலில் தோற்ற லல்லுபிரசாத் யாதவ் மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார். அவரும் மீண்டும் மத்திய மந்திரிசபையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் லல்லுபிரசாத் யாதவ் மத்திய மந்திரியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.

2014-ம் ஆண்டு பாராளு மன்றத்திலும், அதற்கு முன்னதாக குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தல்களும் வருகிறது. தேர்தலை சந்திக்க தயாராகும் வகையில் மத்திய அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் முடுக்கிவிடும் வகையில் மத்திய மந்திரிசபை மாற்றம் இருக்கும். அதற்கு வசதியாக திறமையான மந்திரிகள் இடம் பெறுவார்கள். திறமையற்ற சில மந்திரிகள் நீக்கப்படுவார்கள என்று தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கூடுகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

அரசியலமைப்பு சட்ட வரைவை சரத்யாதவ் உருவாக்கியிருந்தால் பெண்களின் நிலைமை என்னவாயிருக்கும்: ஸ்மிருதி ராணி

அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் ஐக்கிய ஜனதா தாளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ் போன்றவர்கள் இருந்திருந்தால் ....»