பெரியார் அறிவித்த கிடு கிடு போராட்டம் || periyar announced struggled
Logo
சென்னை 26-10-2014 (ஞாயிற்றுக்கிழமை)
பெரியார் அறிவித்த கிடு கிடு போராட்டம்
பெரியார் அறிவித்த கிடு கிடு போராட்டம்

 
காமராஜர் பச்சைத் தமிழர் என்று கூறி அவர் ஆட்சியை பெரியார் ஆதரித்தது, காமராஜருக்கு கூடுதல் பலமாக இருந்தது. பெரியார், காமராஜரை ஆதரித்தபோதிலும் காங்கிரசை ஆதரிக்கவில்லை; மத்திய அரசையும் ஆதரிக்கவில்லை. இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்தார். இந்நிலையில், இந்தித் திணிப்பை எதிர்த்து "கிடு கிடு" போராட்டம் நடத்தப்போவதாக பெரியார் அறிவித்தார்.
 
அந்தப் போராட்டம் என்ன என்பதை அறிவிக்காமல் "சஸ்பென்ஸ்" ஆக வைத்திருந்தார். திராவிடர் கழகத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 17.7.1955 ல் திருச்சியில் நடந்தபோது, கிடு கிடு போராட்டம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. ஆகஸ்டு 1 ந்தேதி, தமிழ் நாடெங்கும் இந்திய தேசியக் கொடி எரிக்கப்படும்" என்று பெரியார் அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.
 
நாள் நெருங்க, நெருங்க நாடு முழுவதும் பதற்றம் அதிகமாகியது. காமராஜரைப் பிடிக்காத காங்கிரஸ்காரர்கள், பிரதமர் நேருவுக்கு தந்திகளும், கடிதங்களும் அனுப்பினார்கள். "காமராஜரை ஆதரிக்கும் பெரியார், காங்கிரசை எதிர்க்கிறார். இப்போது தேசிய கொடியை எரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இதில் நீங்கள் தலையிட வேண்டும்" என்று வற்புறுத்தினார்கள்.
 
இதைத்தொடர்ந்து காமராஜருடன் நேரு டெலிபோனில் பேசினார். "உங்கள் நண்பர் நாயக்கர், இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்து இருக்கிறாரே. அதைத் தடுக்கக்கூடாதா?" என்று கேட்டார். "நீங்கள் இதுபற்றி கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று காமராஜர் பதிலளித்தார். அத்துடன் "நாயக்கர் எனக்கு நண்பர்தான்.
 
ஆனால், இந்திக்கு அல்ல!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். நேருவும் சிரித்து விட்டார்.   கொடி எரிப்பு போராட்டத்துக்கு இன்னும் ஒரு நாள்தான் இருந்தது. கொந்தளிப்பான சூழ்நிலையில் காமராஜர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
 
"இந்திய ïனியனின் அரசாங்க மொழியாக இந்தி இருக்கும் என்றாலும், நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள மக்கள் மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படும் என்று அர்த்தமில்லை. எந்த மாநிலத்தின் அலுவல்களுக்கும் இந்தியை கட்டாயமாக அமுல் நடத்தவேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
 
இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் பொறுப்பு, மாநில சட்டசபைகளிடம்தான் விடப்பட்டுள்ளது. இந்தியைத் தென்னாட்டின் மீது சுமத்தும் எண்ணம் கிடையாது என்றும், இந்தி ஏகாதிபத்தியம் தங்களை மூழ்கடித்துவிடும் என்று தென்னாட்டினருக்கு பயம் இருந்தால், அதை கைவிட்டு விடவேண்டும்" என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
 
தமிழ் மொழி பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்த மாநில அரசு, யாருக்கும் பின்வாங்கிய தல்ல. இந்தி பேசாத மக்கள் நலன்களை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கமோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று உறுதி கூறுகிறேன்.
 
இப்பொழுது நான் கூறுவதை முன்னிட்டு, திரு.நாயக்கரும், அவரைச் சேர்ந்தவர்களும் ஆகஸ்டு 1 ந்தேதி நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுவது உசிதம் என உணர்வார்கள் என்று உண்மையாகவே நம்புகிறேன். இந்திய தேசியக்கொடி நமது தேசிய கவுரவத்தின் சின்னம். அதைக் கொளுத்தும்போதோ, அல்லது வேறு வகையில் அதை மாசுபடுத்தும்போதோ, எந்த அரசாங்கமும் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்து விடாது.
 
எனவே, இந்த வேண்டுகோளுக்குப்பிறகும், `துரதிர்ஷ்டவசமாக' இந்த இயக்கத்தில் தேசியக் கொடியை கொளுத்தவோ, மாசுபடுத்தவோ அல்லது அவமதிக்கவோ முற்பட்டால், அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
 
இத்தகைய வருந்தத்தக்க நிகழ்ச்சிக்கு அவசியமே இராது என்றுதான் நம்புகிறேன். அவசியம் ஏற்பட்டால், தேசியக் கொடிக்கு அவமானம் ஏற்படாமல் தடுக்க உறுதியான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்காது."
 
இவ்வாறு காமராஜர் அறிக்கை விடுத்தார்.  
 
இதைத்தொடர்ந்து, கொடி எரிப்பு போராட்டத்தை பெரியார் வாபஸ் பெற்றார். இதுபற்றி பெரியார் விடுத்த அறிக்கை வருமாறு:-
 
"திராவிடர் கழகத் தீர்மானம் சம்பந்தமாக, சென்னை அரசாங்க முதல் அமைச்சர் திரு.காமராஜர் அவர்களது அறிக்கையைப் பார்த்தேன். தமிழ் நாட்டவர் மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து, "கொடியைக் கொளுத்த வேண்டாம்" என்று விரும்புவதாக உணருகிறேன்.
 
சர்க்கார் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் இந்த வாக்குறுதியை அமல் நடத்துவதில், "இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை" என்று மக்கள் தெளிவாக கருதும்படி அரசாங்கம் நடந்து கொள்ளுமா அல்லது இவ்வளவு நாள் நடந்து கொண்டது மாதிரி ஒன்றுக்கொன்று (அறிக்கைக்கும் செய்கைக்கும்) சம்பந்தம் இல்லாத மாதிரி நடந்து கொள்ளுமா என்பதை நடைமுறையில் தெரிந்து கொள்ள வேண்டி இருப்பதால், முதல் அமைச்சர் விருப்பப்படி கொடி கொளுத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்கிறேன்.
 
ஆகஸ்டு 1 ந்தேதி யாரும் கொடியை கொளுத்த வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி, கொடி கொளுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிக்கையில் தெரியப்படுத்தி இருப்பது பற்றி நாமோ, பொதுமக்களோ எவ்வித ஆச்சரியமும் படத்தேவை இல்லை. "அரசாங்கத்தின் கொடி"யை மக்கள் கொளுத்தினால், அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் என்று எந்த பைத்தியக்காரனும் நினைத்துக் கொண்டிருக்கமாட்டான்.
 
அடக்கு முறையின் கடைசி எல்லையையும், தண்டனையின் கடைசி எல்லையையும் எதிர்பார்த்துத்தான் திராவிடர் கழகம், கொடியை கொளுத்த தீர்மானித்தது. ஆதலால் அந்த சொற்களுக்காக, அறிவாளிகளுக்கு நான் சமாதானம் ஏதும் சொல்லத் தேவை இல்லை. 
 
வீண் கவுரவத்தைப் பார்க்காமல் மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தை மனமாரப் பாராட்டுவதுடன், உறுதிமொழிக்கு ஏற்ப நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன்."
 
இவ்வாறு பெரியார் தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
 
கொடி எரிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த பதற்றமும், கொந்தளிப்பும் ஒருவாறு அடங்கியது.
மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

Maalaimalar.gif
Maalaimalar.gif