குடியாத்தம் தொகுதியில் காமராஜர் வெற்றி || kamarajar won in gudiyattam
Logo
சென்னை 28-08-2015 (வெள்ளிக்கிழமை)
குடியாத்தம் தொகுதியில் காமராஜர் வெற்றி
குடியாத்தம் தொகுதியில் காமராஜர் வெற்றி

 
காமராஜர் முதல் அமைச்சராக பதவி ஏற்றபோது, அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் விரும்பி இருந்தால், மேல் சபை உறுப்பினராக ஆகி இருக்கலாம். அல்லது காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய ஒரு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.யை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுலபமாக வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆகி இருக்கலாம்.
 
இதையெல்லாம் காமராஜர் விரும்பவில்லை. ஏற்கனவே காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். குடியாத்தம் தொகுதி, "கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை" என்று கருதப்பட்ட தொகுதியாகும். அங்கு காமராஜர் போட்டியிட்டது, அனைவருக்கும் வியப்பளித்தது. காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டியிட்டார்.
 
(அப்போது கம்யூனிஸ்டு கட்சி பிளவு படாமல் ஒரே கட்சியாக இருந்தது.)   தேர்தலில் காமராஜரை ஆதரித்து ஈ.வெ.ரா.பெரியார் பிரசாரம் செய்தார். "காமராஜர் பச்சைத் தமிழர். அவர் முதல் அமைச்சராக இருந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்" என்று பெரியார் கூறினார். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததற்காக காமராஜருக்கு ஆதரவு தெரிவித்த பேரறிஞர் அண்ணா, "குலக்கொழுந்தே! குணாளா!" என்று பாராட்டி எழுதினார்.
 
கம்யூனிஸ்டு கட்சி நீங்கலாக, எல்லா கட்சிகளும் காமராஜரை ஆதரித்தன.   1954 ஆகஸ்டு மாதத்தில் (முதல் அமைச்சராக பதவி ஏற்ற 4 மாத காலத்தில்) நடைபெற்ற குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அவருக்கு 64,344 ஓட்டுகளும், கம்யூனிஸ்டு வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,132 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது 38,212 ஓட்டு வித்தியாசத்தில் காமராஜர் வென்றார்.
 
குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், காமராஜரின் புகழ் மேலும் பரவியது.   காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது, 1955 ஜனவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 60 வது (பொன் விழா) மாநாட்டை சென்னையை அடுத்த ஆவடியில் முன்னின்று நடத்தினார். மாநாடு நடந்த இடத்துக்கு "சத்தியமூர்த்தி நகர்" என்று பெயரிடப்பட்டது.
 
இந்த மாநாட்டில்தான், "சோசலிசபாணி" சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை அபுல்கலாம் ஆசாத் முன் மொழிந்தார். காமராஜர் வழிமொழிந்தார். அவர் பேசுகையில், "செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் குவிந்து விடக்கூடாது. எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
 
புரட்சியில் ஈடுபடாமலேயே அமைதியான முறையில் சோசலிச சமுதாயத்தை அமைக்கலாம்" என்று குறிப்பிட்டார். காமராஜர் பேச்சை கூட்டத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மாநாட்டில் பிரதமர் நேரு பேசுகையில், "தென்னாட்டிற்கு வரும்போதுதான், இந்தியாவின் ஒற்றுமையை உணர முடிகிறது.
 
இந்திய கலாச்சாரம் இங்கு வலுவாக வேரூன்றி உள்ளது. இந்திய மக்களில், தமிழ் நாட்டினர் சிறப்பானவர்கள்" என்று குறிப்பிட்டார். "இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற அரும்பணியாற்றிய முதல் அமைச்சர் காமராஜருக்கு என் நன்றி" என்று நேரு குறிப்பிட்டபோது, கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
tamil_matrimony_60.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

amarprash.gif