காமராஜர் தமிழக முதல் அமைச்சர் ஆனார் || kamarajar was tamilnadu chief minister
Logo
சென்னை 14-10-2015 (புதன்கிழமை)
காமராஜர் தமிழக முதல் அமைச்சர் ஆனார்
காமராஜர் தமிழக முதல் அமைச்சர் ஆனார்

 
சி.சுப்பிரமணியத்தை முதல் அமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருந்த ராஜாஜி கோஷ்டியினருக்கு, "முதல் அமைச்சர் பதவியை ஏற்க காமராஜர் சம்மதித்துவிட்டார்" என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது. எனினும், காமராஜரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தை நிறுத்த அவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி, மார்ச் 30ந்தேதி முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்க சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடினார்கள்.
 
காமராஜர் பெயரை வரதராஜீலு நாயுடு முன்மொழிந்தார். என்.அண்ணாமலைப்பிள்ளை வழிமொழிந்தார். சி.சுப்பிரமணியத்தின் பெயரை, பக்தவச்சலம் முன் மொழிந்தார். டாக்டர் கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார். வாக்கெடுப்பு நடந்தது. காமராஜருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. காமராஜர் புதிய முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
1954 ஏப்ரல் 13 ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவர் பெயரை முன்மொழிந்த பக்தவச்சலம் ஆகியோரையும் தன் மந்திரிசபையில் காமராஜர் சேர்த்துக்கொண்டார்.
 
மற்றும் மாணிக்கவேலர், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, "ராமநாதபுரம்ராஜா" சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஏ.பி.ஷெட்டி, பரமேசுவரன் ஆகியோரும் மந்திரிசபையில் இடம் பெற்றனர். ராஜாஜி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற எல்லோரும் காமராஜர் மந்திரிசபையில் இடம் பெற்றனர்.
 
எட்டு பேர் மட்டுமே கொண்ட மந்திரிசபையை காமராஜர் அமைத்தது, அகில இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியது. முதல் அமைச்சராக பதவி ஏற்றதும், தன் அரசியல் குரு சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு காமராஜர் சென்றார். சத்திய மூர்த்தி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சத்திய மூர்த்தியின் மனைவி பால சுந்தரம்மாளிடம் வாழ்த்து பெற்றார். நிருபர்களிடம் பாலசுந்தரம் மாள் கூறியதாவது:-
 
"தேசப்பணியில் என் கணவருடன் காமராஜர் 20 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்தார். மக்கள் பணிக்காக தன் வாழ் நாளையே அர்ப்பணித்தார். காங்கிரசை பலப்படுத்த என் கணவருக்குத் துணையாக இருந்து, அயராது பாடுபட்டார். காமராஜர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகி இருப்பதன் மூலம், என் கணவர் கண்ட கனவு பலித்து விட்டது."
 
இவ்வாறு பாலசுந்தரம்மாள் கூறினார்.
 
காமராஜர் முதல் அமைச்சரானதை பெரும்பாலான பத்திரிகைகள் வரவேற்றன. ஒரு சில பத்திரிகைகள், "ராஜாஜி வகித்த பதவியை மற்றவர்கள் வகிப்பது எளிதல்ல. காமராஜருக்கு அரசியல் அனுபவம் அதிகம் உண்டு என்றாலும், அமைச்சரவை அனுபவம் இல்லை. அவர் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை எதிர்காலம் தான் நிர்ணயிக்கும்" என்று எழுதின.
 
ஆனாலும், அனைவரும் வியக்கத்தக்க முறையில் காமராஜர் ஆட்சி புரிந்தார். காமராஜர் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை, ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்தது தான். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்க, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை, 50 ஆக ராஜாஜி குறைத்திருந்தார்.
 
இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்ணை மீண்டும் 150 ஆக காமராஜர் உயர்த்தினார். இவ்வாறு காமராஜர் செய்த சீர்திருத்தங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அரசியலில், ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவர், காமராஜர்.
 
மிகவும் படித்தவரும், ராஜதந்திரியும், மேலிடத் தலைவர்களிடம் செல்வாக்கு பெற்றவருமான ராஜாஜியின் எதிர்ப்பையும் சமாளித்து முன்னேறி, முதல் அமைச்சர் ஆனார். எனினும், ராஜாஜி கோஷ்டியினரை வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்து சென்றார். "எதிரிகளை ஒழிக்க நினைப்பதை விட, அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது சிறந்தது" என்பது காமராஜரின் கொள்கை.
 
அதனால்தான் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரை மந்திரிகளாக்கியதுடன், முக்கிய இலாகாக்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். காமராஜரின் சிறிய மந்திரிசபை, "சிறந்த மந்திரிசபை" என்று விரைவிலேயே பெயர் எடுத்தது.
tamil_matrimony_60.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

VanniarMatrimony_300x100px_2.gif