கல்வித் திட்டத்தை வாபஸ் பெற மறுத்து ராஜாஜி ராஜினாமா பதவியை விட சுயமரியாதையே முக்கியம் || Refused to rescind the resignation of Rajaji important education program
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
கல்வித் திட்டத்தை வாபஸ் பெற மறுத்து ராஜாஜி ராஜினாமா பதவியை விட சுயமரியாதையே முக்கியம்
கல்வித் திட்டத்தை வாபஸ் பெற மறுத்து ராஜாஜி ராஜினாமா பதவியை விட சுயமரியாதையே முக்கியம்


ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்தது. காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பகுதியினர், இத் திட்டத்தை கைவிடும்படி ராஜாஜியிடம் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், காமராஜரின் தீவிர ஆதரவாளருமான டாக்டர் வரதராஜீலு நாயுடு, "கல்வித் திட்டத்தை ராஜாஜி கைவிடவேண்டும். அல்லது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும்" என்று வற்புறுத்தியார்.

ராஜாஜி மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆந்திரா பிரிந்து சென்றபின் சென்னை சட்டசபையில் காங்கிரசுக்கு கணிசமான மெஜாரிட்டி பலம் இருந்தது. எனினும், காங்கிரசில் ஒரு பகுதியினர் ராஜாஜியை எதிர்த்து ஓட்டளிக்கத் தயாராகி விட்டனர். எனவே, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறக் கூடிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ராஜாஜிக்கு ஆதரவாக பிரதமர் நேரு ஒரு அறிக்கை வெளியிட்டார். முதல் மந்திரியாக ராஜாஜி நீடிக்கவேண்டும் என்ற தமது விருப்பத்தை அதில் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, ராஜாஜி எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரு தூதுக்குழுவாக டெல்லிக்கு சென்று, நேருவை சந்தித்தனர். "ராஜாஜியின் கல்வித் திட்டத்துக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது.

எனவே, கல்வித் திட்டத்தை ராஜாஜி வாபஸ் பெற்றால், அவரை நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம். பிடிவாதமாக கல்வித் திட்டத்தை திணித்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அழிந்துவிடும்" என்று கூறினார்கள். நிலைமையைப் புரிந்து கொண்ட நேரு, "உங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம்" என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக, "பதவியா, கல்வித் திட்டமா?" என்ற கேள்வி ராஜாஜி முன் எழுந்தது. ராஜாஜிக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தனக்கு சரி என்று தோன்றும் கருத்தை எப்போதுமே மாற்றிக்கொள்ள மாட்டார். எனவே, 24.3.1954 அன்று சட்டசபைக்கு வந்த ராஜாஜி, "எனக்கு உடல் நலம் இல்லை. எனவே முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று அறிவித்தார்.

கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்தபோது, "ஒவ்வொரு மனிதனுக்கும், பதவியைவிட அவனது சுயமரியாதைதான் முக்கியமானதாகும்" என்று பதிலளித்தார். நிலைமையை ஆராய மறுநாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. சி.சுப்பிரமணியத்தை தற்காலிக முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று ராஜாஜி யோசனை தெரிவித்தார்.

அதை காமராஜர் ஏற்கவில்லை. "தற்காலிக முதல் மந்திரி தேவை இல்லை. அடுத்த தேர்தல் வரை பதவி வகிப்பதற்கான முதல் மந்திரியை தேர்ந்தெடுப்போம்" என்றார், காமராஜர். புதிய முதல் மந்திரி தேர்தலை மார்ச் 30 ந்தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. "முதல் மந்திரி பதவியை நீங்களே ஏற்க வேண்டும்" என்று வரத ராஜீலு நாயுடுவும், பல எம்.எல்.ஏ.க்களும் காமராஜரிடம் வற்புறுத்தினார்கள்.

கட்சியை நடத்துவதில் கை தேர்ந்தவரான காமராஜர், முதல்வர் பதவியை ஏற்கத் தயங்கினார். காமராஜர் ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொள்வார் என்றாலும், காந்தி, நேரு, பட்டேல், சத்தியமூர்த்தி போன்றவர்களின் ஆங்கில உரையாடல்களை எல்லாம் நேரில் பார்த்திருந்த காரணத்தால், "ஐ.ஏ.எஸ். படித்த பெரிய அதிகாரிகளை எப்படி சமாளித்து வேலை வாங்குவது?" என்று யோசித்தார். வரதராஜீலு நாயுடுவின் வீட்டில்

காமராஜரும், பெரியாரும் சந்தித்தனர். முதல்வர் பொறுப்பை ஏற்கும்படி காமராஜரிடம் பெரியார் கேட்டுக்கொண்டார். காமராஜர் ஆட்சிக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். தினமும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டமாக வந்து காமராஜரை சந்தித்தனர். "முதல்அமைச்சர் பொறுப்பை நீங்கள்தான் ஏற்கவேண்டும்" என்று மன்றாடினார்கள்.

தீர ஆலோசனை செய்த பிறகு, முதல் அமைச்சர் பதவியை ஏற்பது என்று காமராஜர் முடிவு செய்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஒரு நிபந்தனையையும் விதித்தார். "மந்திரி பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து யாரும் கேட்கக்கூடாது. அரசாங்க நிர்வாகத்தில் தலையிடக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் முதல் அமைச்சர் பதவியை ஏற்கிறேன்" என்று கூறினார்.

இதற்கு எம்.எல்.ஏ.க்கள் சம்மதித்தனர்.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif