ஆந்திர மாநிலம் உதயம்: தமிழ்நாட்டுக்கு சென்னை மாகாணம் என்ற பெயர் நீடிப்பு || andhra pradesh start chennai mahanam name stay in tamilnadu
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
ஆந்திர மாநிலம் உதயம்: தமிழ்நாட்டுக்கு சென்னை மாகாணம் என்ற பெயர் நீடிப்பு
ஆந்திர மாநிலம் உதயம்: தமிழ்நாட்டுக்கு சென்னை மாகாணம் என்ற பெயர் நீடிப்பு


1953 அக்டோபர் 1 ந்தேதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு சென்னை மாகாணம் என்ற பெயரே நீடித்தது. ஆந்திர முதல் மந்திரியாக ஆந்திரகேசரி பிரகாசம் பதவி ஏற்றார். சென்னை மாகாண முதல் மந்திரியாக ராஜாஜி நீடித்தார். தனி ஆந்திர மாநில கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டதால், ஆந்திரா அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் எல்லையை மீட்பதற்காக "சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். ம.பொ.சிவஞானம் அப்போது காங்கிரசில் இருந்தார். எனினும் காங்கிரசின் உள்அமைப்பாக "தமிழரசு கழக"த்தை நிறுவி தமிழர் உரிமைகளுக்காகப் போராடினார்.

சங்க கால இலக்கியங்களில், தமிழ்நாட்டின் வட எல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில்கூட, 1911 ஏப்ரல் வரை, திருப்பதி மலை வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்து வந்தது. ஆனால், தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் எல்லைச் சிக்கலைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங்குந்திக்குப்பம், திருத்தணி, புத்தூர், பல்லவனேரி, காளத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலுகாக்களையும், தெலுங்கு பேசப்படும் கர்நூல் மாவட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் இரு மொழி மாவட்டத்தை உருவாக்கினார்கள்.

சித்தூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும் பல ஆண்டு காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக இருந்தது. திருப்பதி வைணவத் திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு அதுவே பிரதானக் கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின் ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது.

இதையெல்லாம் உணர்ந்திருந்த ம.பொ.சி., இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறு நாள் (16.8.1947) திருப்பதிக்குத் தொண்டர் படையுடன் சென்று, "திருப்பதி தமிழர்களுக்கே உரியது" என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். "கிராமணியே, திரும்பிப்போ" என்று ஆந்திரர்கள் எதிர்ப்போராட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, "திருப்பதி யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?" என்று விவாதம் எழுந்தது. "திருப்பதி தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று ம.பொ.சி. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். "தமிழர்களுக்குத் திருப்பதி கிடைக்காது. தமிழர்களிடமிருந்து சென்னையையும் பறிப்போம்" என்றார், ஆந்திரத் தலைவர், என்.ஜி.ரங்கா.

அவர் சொன்னது உண்மையாயிற்று. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திரர்கள் கோரினர். இதற்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார், ம.பொ.சி. "சென்னை நகரம் தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திராவுக்கு போய்விடக்கூடிய நிலைமை உருவாயிற்று. அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் போராட்டம் நடத்தினார். மறியல் செய்தவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். எல்லையை மீட்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று, ம.பொ.சி. அறிவித்திருந்தார். ராஜாஜி விடுத்த வேண்டுகோளின்படி, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif