ராஜாஜி கொண்டு வந்த புதுக்கல்வி திட்டம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு || Rajaji came with the new education plan opposite party abjection
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
ராஜாஜி கொண்டு வந்த புதுக்கல்வி திட்டம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
ராஜாஜி கொண்டு வந்த புதுக்கல்வி திட்டம்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு


நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த ராஜாஜியின் ஆட்சிக்கு, அவர் கொண்டு வந்த "புதுக்கல்வித் திட்டம்" பெரும் சோதனையாக அமைந்தது. "மாணவ மாணவிகளுக்கு தினம் அரை வேளைதான் படிப்பு. மீதி அரை நேரம், ஏதாவது கைத்தொழில் கற்க வேண்டும்" என்பதே ராஜாஜியின் கல்வித்திட்டம்.

2 ஷிப்டுகளில் பள்ளிக்கூடம் நடத்தி, அதிகமானவர்களை சேர்க்கலாம் என்று ராஜாஜி நினைத்தார். "என்ன தொழில் கற்பது? அரசாங்கமே தொழில் கல்விக்கு ஏற்பாடு செய்யுமா?" என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். "அப்பா செய்யும் தொழிலுக்கு மகன் உதவியாக இருந்து அந்த தொழிலை கற்றுக்கொள்ளலாம்" என்று ராஜாஜி பதிலளித்தார்.

அவ்வளவுதான். ராஜாஜி கல்வித் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. "இந்த புதிய கல்வித் திட்டம், குலத்தொழிலை வளர்க்கத்தான் உதவும்; உழவன் மகன் உழவுத்தொழில் செய்யவேண்டும்; வண்டி இழுப்பவர் மகன் வண்டி இழுக்க வேண்டும்; சவரத் தொழிலாளியின் மகன் சவரம் செய்யவேண்டும்.

இது நல்ல கல்வித் திட்டம் அல்ல; குலக்கல்வித் திட்டம்" என்று எதிர்க்கட்சியினர் கண்டனக்குரல் எழுப்பினர். திராவிடர் கழகம், இந்தக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. "மூன்று மாத காலத்துக்குள் இந்த கல்வித்திட்டத்தை கைவிடவேண்டும்.

இல்லாவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம்" என்று பெரியார் எச்சரித்தார். தி.மு.கழக செயற்குழு, 1953 ஜுலை 13 ந்தேதி சென்னையில் கூடி "மும்முனைப் போராட்டம்" நடத்த முடிவு செய்தது. போராட்டத் திட்டம் வருமாறு:-

1. முதல் அமைச்சர் ராஜாஜி கொண்டு வந்துள்ள அரை நேரப்படிப்பு என்பது குலக்கல்வித் திட்டமாகும். அதை எதிர்த்து ஜுலை 14 ந்தேதி ராஜாஜி வீட்டு முன் ஈ.வெ.கி. சம்பத் மறியல் செய்யவேண்டும்.

2. திருச்சி அருகே உள்ள கல்லக்குடியில், டால்மியா என்ற வடநாட்டுக்காரர் சிமெண்ட் தொழிற்சாலை அமைத்ததால், அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு "டால்மியாபுரம்" என்று பெயர் வைத்துள்ளனர். அதை "கல்லக்குடி" என்று மாற்றவேண்டும். இதற்கான போராட்டத்தை ஜுலை 15 ந்தேதி மு.கருணாநிதி தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

3. தி.மு.க.வின் போராட்டங்களைப் பிரதமர் நேரு "நான்சென்ஸ்" என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜுலை 15ல் ரெயில் நிறுத்தப்போராட்டம் நடத்த வேண்டும்.

இந்தப் போராட்டம் பற்றிய தீர்மானங்களைச் செயற்குழு நிறைவேற்றிக்கொண்டிருந்தபோதே அங்கு துணை போலீஸ் கமிஷனர் எப்.வி.அருள், ஒரு போலீஸ் படையுடன் வந்தார். அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், எஸ்.வி.நடராசன் ஆகியோரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

"நான்கு தம்பிமார்களுடன் நான் சிறை சென்றாலும், போராட்டத்தை நடத்த ஆயிரக்கணக்கான தம்பிமார்கள் இருக்கிறார்கள்" என்றார், அண்ணா. ஜுலை 14 ந்தேதி, ராஜாஜி வீட்டு முன் மறியல் செய்ய இருந்த ஈ.வெ.கி.சம்பத் கைது செய்யப்பட்டு விட்டதால் அவருக்குப் பதிலாக சத்தியவாணிமுத்து மறியல் நடத்தச் சென்றார்.

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி. டெல்லியில் இருந்து வெளிவரும் "இந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகையின் ஆசிரியர். இவருக்கும், ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் காதல் ஏற்பட்டது.

திருமணம் செய்து கொள்ள விரும்பினர். திருமணத்துக்கு காந்தியடிகள் உடனடியாக சம்மதிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். "ஐந்து வருட காலம் நீங்கள் சந்திக்கக்கூடாது; கடிதமும் எழுதிக்கொள்ளக்கூடாது. அதன் பிறகும் நீங்கள் இதே உறுதியுடன் காதலித்தால், உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்" என்றார்.

அதன்படியே தேவதாசும், லட்சுமியும் ஐந்தாண்டுகள் காத்திருந்தனர். அதன் பின்னரே, 1933 ஜுன் 16 ந்தேதி புனா நகரில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திய காந்திஜி, தாமே நூற்ற நூல் மாலை, ஒரு தேங்காய், பகவத் கீதை, பக்திப்பாடல் புத்தகங்கள் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

மணமக்களுக்கு சிலர் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களையும், பட்டுப்புடவைகளையும் வழங்கியிருந்தனர். அவற்றைத் திருப்பித் தந்துவிடும்படி, மருமகளுக்குக் கட்டளையிட்டார், காந்தி.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif