எதிர்பாராத திருப்பம் ராஜாஜி முதல் மந்திரி ஆனார்: காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்பு || rajaji minister congress cabinet post sworn
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
எதிர்பாராத திருப்பம் ராஜாஜி முதல்-மந்திரி ஆனார்: காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்பு
எதிர்பாராத திருப்பம் ராஜாஜி முதல்-மந்திரி ஆனார்: காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்பு
தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்திருந்த "சென்னை மாகாணம்", இந்தியாவின் பெரிய மாகாணங்களில் ஒன்று. அரசியல் ரீதியாக முக்கியமானது. சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட தலைவர்களையும், தியாகிகளையும் தந்த மாநிலம். அங்கு காங்கிரஸ் தோல்வி அடைந்தது. நேருவுக்கும், மற்ற தலைவர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது.

சுதந்திரத்துக்குப்பின், ஒரு பெரிய மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத மந்திரிசபை அமைக்கப்பட்டால், வெளிநாடுகளில் தன் கவுரவம் பாதிக்கப்படும் என்று நேரு நினைத்தார். எனவே, இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன செய்வது என்று மற்ற தலைவர்களுடன் ஆலோசித்தார்.

"ராஜாஜி சிறந்த ராஜதந்திரி. அவர் மனம் வைத்தால், நிலைமையை எப்படியாவது சமாளித்து, மந்திரிசபை அமைத்துவிடுவார்" என்று பல தலைவர்கள் கூறினார்கள். அதை நேரு ஏற்றுக்கொண்டார். ராஜாஜியை சந்தித்துப் பேச காமராஜர், சஞ்சீவரெட்டி, குமாரசாமிராஜா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக, மவுண்ட்பேட்டன் பிரபுவுக்குப்பின் பதவி வகித்தவர் ராஜாஜி. "கவர்னர் ஜெனரல் பதவி" ஜனாதிபதி பதவிக்கு சமமானது. 1950-ல் இந்தியா குடியரசு நாடாகியது. கவர்னர் ஜெனரல் பதவி ஒழிக்கப்பட்டு, ஜனாதிபதி பதவி உரு வாக்கப்பட்டது. குறுகிய காலமே கவர்னர் ஜெனரல் பதவியை வகித்த ராஜாஜி, இந்தியாவின் முதல் ஜனாதி பதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் எதிர் பார்த்தனர்.

ஆனால், வடநாட்டுத் தலைவர்களில் பெரும்பாலோர் ராஜேந்திரபிரசாத்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினர். அதன் விளைவாக, கவர்னர் ஜெனரல் பதவி 1950 ஜனவரி 26-ந்தேதி முடிவடைந்ததும், ஜனாதிபதியாக ராஜேந்திரபிரசாத் பதவி ஏற்றார்.

சென்னை திரும்பிய ராஜாஜி, அரசியலை விட்டு ஒதுங்கி, இலக்கியப்பணியில் ஈடுபட்டிருந்தார். "பஜகோவிந்தம்" என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் எழுதி வந்தார். சென்னை மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க, முதல்-மந்திரி பதவியை ஏற்குமாறு ராஜாஜியை கேட்டுக்கொள்ள, டெல்லியில் "தூதுக்குழு" அமைக்கப்பட்ட போது, ராஜாஜி குற்றாலத்தில் தமது நண்பர் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

ராஜாஜியுடன் எவ்வளவோ கருத்து வேற்றுமை இருந்தாலும், இந்த சமயத்தில் அவருடைய ஆதரவு தேவை என்பதை காமராஜர் உணர்ந்திருந்தார். எனவே, தூதுக்குழுவின் இதர தலைவர்களுடன் குற்றாலம் சென்று ராஜாஜியை சந்தித்தார். முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று காங்கிரஸ் மந்திரிசபை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ராஜாஜி உடனடியாக பதில் சொல்லவில்லை. யோசித்து சொல்வதாகக் கூறிவிட்டு, சென்னைக்குத் திரும்பினார். தோல்வி அடைந்த முதல்-மந்திரி குமாரசாமிராஜா, சென்னை தியாகராயநகர் பசுல்லா ரோட்டில் உள்ள ராஜாஜி வீட்டுக்குச் சென்றார். "இந்த மாகாணத்தில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை உங்களால்தான் தீர்க்க முடியும். முதல்- அமைச்சர் பொறுப்பை ஏற்று, காங்கிரஸ் மானத்தை காப்பாற்றுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேருவுடன் ராஜாஜி டெலிபோனில் பேசினார். "நான் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தவன். மீண்டும் முதல்-மந்திரி ஆவது சரியல்ல. என்றாலும் எல்லோரும் வற்புறுத்துவதால் அதற்கு சம்மதிக்கிறேன். முதல்- மந்திரி பதவி ஏற்பது என்றால், நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

கவர்னர் ஜெனரலாக இருந்துவிட்டு சட்டசபை தேர்தலில் நிற்பது சரியல்ல. எனவே, என்னை மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி.யாக) நியமிப்பதற்கு ஒப்புக்கொண்டால் மந்திரிசபை அமைக்கிறேன்" என்றார். அதற்கு நேரு சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ராஜாஜியை மேல்-சபை உறுப்பினராக கவர்னர் பிரகாசா நியமித்தார்.

மந்திரிசபை அமைக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு "மெஜா ரிட்டி" வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று ராஜாஜி யோசித்தார். மாணிக்க வேலரின் பொதுநல ("காமன்வீல்") கட்சி சார்பில், 9 பேர் வெற்றி பெற்று இருந்தனர். மாணிக்கவேலரை, தனது மந்திரிசபையில் சேருமாறு ராஜாஜி அழைத்தார். அதை மாணிக்கவேலர் ஏற்றுக்கொண்டு, எட்டு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இணைந்தார்.

ராமசாமி படையாச்சியின் "உழைப்பாளர் கட்சி" 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அவருடைய ஆதரவையும், சில சுயேச்சைகளின் ஆதரவையும் ராஜாஜி பெற்றார். போதுமான மெஜாரிட்டி பலம் கிடைத்ததும், கவர்னரை ராஜாஜி சந்தித்தார். "மந்திரிசபை அமைக்க போதிய மெஜாரிட்டி பலம் கிடைத்துவிட்டது" என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்கு மாறு ராஜாஜியை கவர்னர் கேட்டுக் கொண்டார். 1952 ஏப்ரல் 10-ந்தேதி ராஜாஜி மந்திரிசபை பதவி ஏற்றது. சி.சுப்பிரமணியம் நிதி மற்றும் உணவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாணிக்கவேலர், வருவாய்த்துறை அமைச்சரானார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜாஜி பல நல்ல திட்டங்களை அமுல் நடத்தினார்.

காங்கிரசுக்கு கெட்ட பெயர் சம்பாதித்துத்தந்த உணவு "ரேஷன்" முறையை, துணிந்து ரத்து செய்தார். அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர்களுக்கு முதன் முதலாக 8 சதவீதம் இடஒதுக்கீட்டை அமுலுக்கு கொண்டு வந்தார். அவர்கள் அரசுப் பணிகளில் சேர, வயது வரம்பை 27 ஆக உயர்த்தினார்.

தஞ்சையில் விவசாயிகளுக்கு உதவ "பண்ணையாள் பாதுகாப்பு சட்டத்தை" கொண்டு வந்தார். எனினும், தேர்தலில் நிற்காமல் மேல்-சபை உறுப்பினராகி முதல்-மந்திரியானதை எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர். "கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்துவிட்டார்" என்று ஏளனம் செய்தனர்.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif