`கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா': கருணாநிதிக்கு விவசாயிகள் , முஸ்லிம் அமைப்பு கண்டனம் || farmer union muslim condemn karunanidhi kalam kalakam
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
`கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா': கருணாநிதிக்கு விவசாயிகள் , முஸ்லிம் அமைப்பு கண்டனம்
`கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா':
கருணாநிதிக்கு விவசாயிகள் , முஸ்லிம் அமைப்பு கண்டனம்
சென்னை, ஜுன்.17-

கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா? பலராலும் மதிக்கப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாமை விமர்சித்து, பெயருக்கு களங்கம் கற்பித்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அப்துல் கலாம் என்ற பெயர் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர் அல்ல. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தபோது அவரது பெற்றோரும், பெரியோர்களும் வைத்த பெயர். அவர் முன்னாள் ஜனாதிபதி, மனித மாதிரியாக (ரோல் மாடல்) வாழ்ந்து வருபவர், எளிமைக்கு வலிமை சேர்த்தவர், பன்னாட்டு அளவில் நன்மதிப்பு பெற்றவர், பலராலும் மதிக்கப்படுபவர். இப்படிப்பட்டவரை `கலாம்' என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா!

தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளின் பெயர் பொதுவாக `கழகம்' என்றே முடிகிறது. அப்படி என்றால் `கழகம்' என்பதற்கு என்ன பொருள்? ``பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்'' என்ற திருக்குறளின்படி பார்த்தால், கழகத்திற்குள் (சூதாடும் இடம்) காலை வைத்துவிட்டால் பழமையால் வழி வழிவந்த பாரம்பரிய செல்வமும், பண்பாடும் கெட்டுப் போகும் என்று பொருளாகும்.

`கழகம்' என்பது சூதாடும் இடத்தைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. திமுக தலைவரும், வாழும் வள்ளுவர் என்று அழைக்கப்படுபவருமான கருணாநிதி இதை ஏற்றுக் கொள்வாரா? அப்துல்கலாமிற்கும் கலகத்திற்கும் என்ன தொடர்பு? அவர் வன்முறையை விரும்புபவரா? குற்றப்பின்னணி உள்ளவரா? ஜனாதிபதி வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல்கலாமை ஏற்று ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கருணாநிதியின் முடிவு.

இது அவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டது. அல்லது அவரது கட்சியின் முடிவாகவும் இருக்கலாம். பெற்றோரால் வைக்கப்பட்ட பெயரைக் கொண்டு அப்துல்கலாமை விமர்சிப்பதும், பெயருக்கு களங்கம் கற்பிப்பதும் நியாயமாகப்படவில்லை. இதிலுமா சொல் விளையாட்டு? இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.இக்பால் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதியிடம் வருங்கால குடியரசு தலைவர் சம்பந்தமாக ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இஸ்லாமியர்களின் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தவண்ணம் உள்ளது.

ஊடகங்கள் அப்துல்கலாமை சம்பந்தப்படுத்தி கேட்டதற்கு, கலாம் என்றால் `கலகம்'தான் என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த வார்த்தையை எந்த அகராதியில் இருந்து அறிந்து சொன்னார் என்று தெரியவில்லை.

ஒரு வார்த்தையின் பொருள் தெரியாமல் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பதில் கூறியுள்ளார். அரபி மொழியில் `கலாம்' என்றால் திருகுரானை குறிப்பிடுவார்கள். அப்துல் கலாம் என்றால் அப்துல் இறைசேவகன்.

கலாம் இறை வார்த்தை. இதற்கு இறை போதகர் என்ற பொருளாகும். இவ்வளவு புனிதமான வார்த்தையை கொச்சைப்படுத்த வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் தவம் இருந்தாரோ என்று தெரியவில்லை. இதற்கு உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும். இதை திராவிட முஸ்லீம் முன்னேற்றக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தவறும் பட்சத்தில் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக என்.டி.மோகன் மீண்டும் தேர்வு

சென்னை, நவ. 25–தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சோழிங்கநல்லூர் ....»