குறுவை சாகுபடிக்காக டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம்: ஜெயலலிதா அறிவிப்பு || 12 hours electric power to delta farmer jayalalitha
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
குறுவை சாகுபடிக்காக டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம்: ஜெயலலிதா அறிவிப்பு
குறுவை சாகுபடிக்காக டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜூன். 16-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
கடந்த ஆண்டு இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஜூன் 6-ஆம்தேதி காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாகவும், நவீன விவசாய யுத்திகள் பரவலாக்கப்பட்டதன் காரணமாகவும், தமிழ்நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி 75.96 லட்சம் மெட்ரிக் டன் என்ற மிக உயர்ந்த அளவை எட்டியது.
 
2010-2011 ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற அரிசி உற்பத்தியான 57.92 லட்சம் மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது, 31.15 விழுக்காடு அளவுக்கு உற்பத்தி அதிகரித்துள்ளது.
 
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட வேண்டுமென நான் பாரதப் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அது இன்னமும் அறிவிக்கை செய்யப்படாததால், கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியோ அல்லது இடைக்கால தீர்ப்பின்படியோ தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதில்லை.
 
கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பிய பின்னர்தான் தண்ணீரை திறந்து விடுகிறது. காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு 10.16 டி.எம்.சி. அடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால், இதுவரை கர்நாடகத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட இந்த மாதம் பெறப்படவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க காவேரி நதிநீர் ஆணையத்தை கூட்டுமாறு நான் பாரதப்பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கும் இதுவரை எந்தப் பதிலும் பெறப்படவில்லை.
 
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, 41.11 டி.எம்.சி. அடி தண்ணீரே உள்ளதால் குறுவைப் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதற்கு தற்போது வழிவகை இல்லை. காவேரி டெல்டா பாசனப்பகுதியில் கடந்த ஆண்டு 3.45 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் நடவுக்குத் தயாராக நாற்றங்கால் உள்ளது. இதன் மூலம் 20,000 ஏக்கர் அளவுக்கு நெல் சாகுபடி மேற்கொள்ள இயலும். இது தவிர, 11,000 ஏக்கர் பரப்பில் ஏற்கெனவே நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராத காரணத்தால், பெரும்பாலான விவசாயிகள் நாற்று விடும் பணியை இன்னமும் மேற்கொள்ளவில்லை.
 
காவேரி டெல்டா பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்;
 
திருச்சி மாவட்டத்தில் குளித்தலை, முசிறி மற்றும் லால்குடி தாலுகாக்கள்; மற்றும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் காட்டு மன்னார்கோயில் தாலுகாக்கள் ஆகியவற்றில் 80,000 பம்ப் செட்டுகள் உள்ளன. இந்த பம்ப் செட்டுகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்பட்டால், நிலத்தடி நீரை பயன்படுத்தி ஓரளவு குறுவை சாகுபடியை மேற்கொள்ள இயலும். மேட்டூர் நீர்ப்பாசனத்திலிருந்து சாகுபடி செய்யக்கூடிய 3.45 லட்சம் ஏக்கர் அளவுக்கு இல்லாவிட்டாலும், சுமார் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள இயலும். எனவே, குறுவை சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது தொடர்பாக, நான் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலாளர்கள் ஆகியோருடன் 15.6.2012 அன்று விரிவான ஆலோ சனை நடத்தினேன். தற்போது டெல்டா விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங் கப்பட்டு வருகிறது. 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டால் தான் பயிர்களுக்குப் போதிய நீர் கிடைக்கும்.
 
எனவே, உணவு உற்பத்தியை பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என் பதை மகிழ்ச்சியுடன் தெரி வித்துக் கொள்கிறேன்.
 
இதன்படி, 17.6.2012 முதல் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், திருச்சி யிலுள்ள குளித்தலை, முசிறி, லால்குடி தாலுகாக்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களுக்கு பகலில் 8 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமும், ஆக மொத்தம் 12 மணி நேரமும் முனை மின்சாரம் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
 
இந்தக் கூடுதல் மின்சாரத் தேவையை ஈடு செய்யும் பொருட்டு, இதற்கென தேவைக்கேற்ப வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படும். இந்தக் கூடுதல் மின்சாரம் பெறுவதற்கு தேவையான செலவினத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி யாக 125 கோடி ரூபாயை அரசு வழங்கும்.
 
இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு வழங்க வேண்டிய மானியத் தொகையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட தொகை போக மீதமுள்ள 2,000 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும்.
 
எனது இந்த முடிவால் ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் பயிர் காப்பாற்றப்படுவதுடன், மேலும் கூடுதலாக வாய்ப்புள்ள இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு இது வழி வகுக்கும். கர்நாடகத்திலிருந்து காவேரி நீர் கிடைக்காத நிலையிலும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள நான் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை விவசாயிகள் பாராட்டி வரவேற்பார்கள் என நான் நம்புகிறேன்.
 
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif