நித்யானந்தா தமிழ்நாட்டில் பதுங்கலா?: வளைத்து பிடிக்க கர்நாடக தனிப்படை போலீசார் தீவிரம் || karnataka police search nithiyananda
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
நித்யானந்தா தமிழ்நாட்டில் பதுங்கலா?: வளைத்து பிடிக்க கர்நாடக தனிப்படை போலீசார் தீவிரம்
நித்யானந்தா தமிழ்நாட்டில் பதுங்கலா?: வளைத்து பிடிக்க கர்நாடக தனிப்படை போலீசார் தீவிரம்
சென்னை, ஜூன். 12-
 
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. நாடெங்கும் இந்த பீடத்துக்கு கிளைகள் உள்ளது. அதன் மூலம் தியான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நித்யானந்தா சமீபத்தில் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றார்.
 
கடந்த 2010-ம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியானதால் அவர் கைது செய்து பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றதன் மூலம் தன் மீதான 'இமேஜை' மாற்ற முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் அதற்கு மாறாக நித்யானந்தாவுக்கு மீண்டும் சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது.
 
நித்யானந்தாவின் பெண் சீடர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த ஆர்த்திராவ், கன்னட டி.வி. சானலுக்கு அளித்த பேட்டியில், நித்யானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து மதுரையில் இருந்து பெங்களூர் விரைந்த நித்யானந்தா, கடந்த 7-ந்தேதி தன் மீதான பாலியல் புகாருக்கு பதில் அளிக்க நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார். நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் நித்யானந்தா சீடர்களுக்கும், நிருபர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
 
இதையடுத்து கன்னட நிருபர்களுக்கு ஆதரவாக பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. நித்யானந்தாவின் பீடங்கள் தாக்கப்பட்டன. நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து அதை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
 
இதற்கு பணிந்த கர்நாடக முதல்-மந்திரி சதானந்தகவுடா, பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். நித்யானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்தகவுடா அறிவித்தார்.
 
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. பிடதி சரக போலீசார் இந்திய தண்டனை சட்டம் 323, 506, 504, 324, 149 ஆகிய பிரிவுகளில் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இதற்கிடையே இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா பெற்றுள்ள ஜாமீனை ரத்து செய்ய கர்நாடக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. கர்நாடக மாநில அரசு தன் மீது பல்வேறு வழிகளில் 'கிடுக்கி பிடி' போட்டுள்ளதால், நித்யானந்தா ஓசையின்றி தமிழ் நாட்டுக்குள் வந்து விட்டார். வழக்கமாக அவர் 2 கார்களை பயன்படுத்துவார். அந்த 2 கார்களையும் விடுத்து அவர் வேறு கார்களில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது செல்போனும், அவருக்கு நெருக்கமான சீடர்களின் செல்போன்களும் 'சுவிச்ஆப்' செய்யப்பட்டுள்ளன.
 
கடந்த 2010-ம் ஆண்டு செல்போன் சிக்னல் மூலம் தான் நித்யானந்தா பிடிபட்டார். எனவே இந்த தடவை இந்த விஷயத்தில் நித்யானந்தா உஷாராக உள்ளார். நித்யானந்தாவை கைது செய்ய கர்நாடக மாநில போலீசார் பல தனிப்படைகளை உருவாக்கி உள்ளனர். அவர்கள் பல கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 
பிடதி ஆசிரமத்தில் இருந்த எல்லா சீடர்களையும் வெளியேற்றி சீல் வைத்த போலீசார் இன்று காலை ஆசிரமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். தியான பீடத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை அவர்கள் திரட்டினார்கள்.
 
பிடதி ஆசிரமத்தில் இருந்து ஏராளமான ஆவணங்களை கர்நாடக போலீசார் கைப்பற்றியுள்ளனர். நித்யானந்தா மீது பதிவு செய்யப்பட்டுள்ள கற்பழிப்பு, மிரட்டல், சதி திட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்களை நிரூபிக்க இந்த ஆவணங்கள் ஆதாரங்களாக மாற்றப்படும் என்று தெரிகிறது.
 
பிடதியில் உள்ள தியான பீடத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீசாருக்கும், வருவாய் அதிகாரிகளுக்கும் அடுத்து நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே முதல்-மந்திரி சதானந்த கவுடா உத்தரவுப்படி 2 நாட்களுக்குள் நித்யானந்தாவை கைது செய்து விட வேண்டும் என்பதில் கர்நாடக போலீசார் தீவிரமாக உள்ளனர்.
 
இதற்காக கர்நாடக தனிப்படை போலீசார் தமிழகம் வந்துள்ளனர். நித்யானந்தா பதுங்கி இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து விட்டோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்.
 
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கர்நாடக போலீசார் ஓசையின்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நித்யானந்தா சென்னை, மதுரையில் இல்லை என்பது உறுதியாகி விட்டது. சேலத்தில் அவர் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இதை அறிந்த கர்நாடக போலீசார் சேலம் செல்வதற்குள் நித்யானந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது தெரிய வந்தது.
 
இந்த நிலையில் நித்யானந்தா ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் அவருக்கு நெருக்கமான நண்பரின் பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது. பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தில் நித்யானந்தாவின் முக்கிய சீடர்களில் ஒரு சீடரின் நண்பர் வீடு அங்கு இருப்பதாகவும் அந்த வீட்டில் நித்யானந்தா ரகசிய அறையில் தங்கி இருப்பதாகவும் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது, இங்கு 3 கார்கள் வந்தன. அந்த கார்களில் ஒரு சாமியாரும் மற்றும் அவரை தொடர்ந்து நீண்ட முடியுடன் சீடர்களும் இறங்கி சென்றதை பார்த்தோம் என்றனர்.
 
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் இன்று மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கூறியதாவது:-
 
கர்நாடக போலீசில் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. அவர்களும் இங்கு வரவில்லை. கர்நாடக போலீசார் இங்கு வந்தால் அங்குள்ள போலீஸ் சூப்பிரண்டு என்னிடம் தகவல் தெரிவிப்பார். அவர்கள் கேட்டுக் கொண்டால் கர்நாடக போலீசாருக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
 
இவ்வாறு சூப்பிரண்டு பொன்னி கூறினார்.
 
இதற்கிடையே பெரிய புதூர் பெருமாள் கோவில் அருகில் 7 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோட்டம் உள்ளது. அங்கு நித்யானந்தா இருக்கலாம் என்று தகவல் வெளியானது. அங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதற்கிடையே ஊட்டி, மைசூருக்கும் கர்நாடக போலீசார் சென்றுள்ளனர். வட மாநிலத்துக்கும் கர்நாடக தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இதனால் நித்யானந்தா விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான அவரது சீடர்கள் அடுத்து என்ன செய்வது என்பது அறியாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - ஈரோடு

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif