தி.மு.க. இளைஞரணி நேர்காணலில் சிபாரிசு மூலம் யாரும் பதவி பெற முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு || dmk youth interview post mk stalin
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
தி.மு.க. இளைஞரணி நேர்காணலில் சிபாரிசு மூலம் யாரும் பதவி பெற முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. இளைஞரணி நேர்காணலில் சிபாரிசு மூலம் யாரும் பதவி பெற முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுச்சேரி, ஜூன்.11-
 
புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் மாநில இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் இன்று நடந்தது. நேர்காணலுக்காக கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
இந்த நேர்காணல் ஏற்கனவே நடைபெறுவதாக தேதி அறிவிக்கப்பட்டு எனது உடல்நிலை காரணமாக தவிர்க்க முடியாமல் இன்று மீண்டும் நடக்கிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  
 
புதுவை, கடலூரில் நேர்காணல் முடித்தால் 100-க்கு 100 சதவீதம் நேர்காணல் முடித்துவிட்டதாக பெருமையுடன் கூறமுடியும். இளைஞரணிக்கு பொதுவாக அந்தந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் பரிந்துரையின்பேரில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.
 
தலைமையிலிருந்து நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் விண்ணப்பித்தவர்களை நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறோம். இதில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது. இதற்காக தலைமை நிர்வாகிகளை புறக்கணிக்கிறோம் என்று கருதக்கூடாது. கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் வலுப்படுத்த இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்பத்தில் நேர்காணலை அச்சத்துடன்தான் துவக்கினோம். தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. ஆட்சியில் இல்லை. இத்தகைய சூழலில் நேர்காணல் நடத்தினால் இளைஞர்கள் கட்சியில் சேர முன்வருவார்களா? என்ற அச்சம் எழுந்தது. ஆனால் ஆட்சியில் இல்லாத இந்த சூழலில்தான் நேர்காணலுக்கு இளைஞர்கள் திரண்டு வந்துள்ளனர்.  
 
ஆட்சியிலிருந்திருந்தால் ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என பலர் வந்திருப்பர். ஆனால் எந்த பலனையும் எதிர்பாராமல் கழகத்தை காக்க வேண்டும் என்பதற்காகவே நீங்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளீர்கள்.
 
கட்சியில் இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு உட்பட்டவர்கள்தான் இளைஞரணி பொறுப்புகளில் இருக்க வேண்டும் என தலைவரும், பொதுச்செயலாளரும் உத்தரவிட்டுள்ளனர்.
 
புதுவை மாநில அமைப்பாளர் ஜானகிராமன் தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் கழகம்தான் மூச்சு என தலைவர் வழியில் செயல்பட்டு வருகிறார். அவர் புதுவையில் கழகம் எந்த நிலையில் உள்ளது? ஒற்றுமை வெற்றியை தரும் என கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதன்படி கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள்போல இளைஞரணியினருக்கும் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
 
தற்போது கட்சியை தொடங்கியவுடனேயே முதலமைச்சராக வேண்டும் என எண்ணத்துடன்தான் கட்சியையே தொடங்குகின்றனர். ஆனால் 1949ம் ஆண்டு தி.மு.க.வை அண்ணா தொடங்கியபோது நாட்டு மக்களுக்காகவும், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். உடனடியாக தேர்தலிலும் போட்டியிடவில்லை.
 
1956ம் ஆண்டு நடத்திய மாநாட்டில் கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு சீட்டு கொடுத்து தேர்தலில் போட்டியிடலாமா? என கருத்து கேட்டார். இதில் 99 சதவீதத்தினர் தேர்தலில் போட்டியிடலாம் என கருத்து தெரிவித்தனர். இதனால்தான் 1957ல் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் 15 இடத்தில் வெற்றிபெற்றது.
 
1962ல் 50 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. இதன்பின்னர் 1967ல் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சி அமைந்தது. ஜனநாயக முறைப்படி கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்தது. தி.மு.க.தான். நம்மைப்போல வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை. வெற்றியை கண்டு வீறு கொள்ளக்கூடாது, தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது என அண்ணா கூறினார். அதன்படி வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
 
அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தி.மு.க.விற்கு பக்கபலமாக இருந்தனர். ஆனால் தற்போதைய இளைஞர்களின் நிலை அப்படி இல்லை. காலம் மாறி கம்ப்யூட்டர் காலமாகிவிட்டது. முன்பு கூத்து நடக்கும், அதன்பின் நாடகம் வந்தது, அதன்பின் திரைப்படம் வந்தது.
 
தற்போது திருட்டு வி.சி.டி.யால் திரைப்படமும் அழிந்து வருகிறது. காலத்தின் சூழல் மாறி வருகிறது. செல்போன் மூலம் பலவித வசதிகள் பெற்றுள்ளோம். கர்நாடகா மாநிலத்தில் செல்போன் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு என்ன என்பது உங்களுக்கு தெரியும்? இதற்காக வளர்ச்சியை தவறென்று கூற முடியுமா? இளைஞர்களிடம் தமிழ் உணர்வு மங்கிவிடக்கூடாது. இதற்காக தி.மு.க. தலைவர் தொடர்ந்து போராடி வருகிறார்.
 
புதுவையில் உள்ள 23 தொகுதிக்காக 446 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஒரு தொகுதிக்கு ஒரு அமைப்பாளர், 4 துணை அமைப்பாளர் என 5 பேர் தேர்வு செய்யப்படுவர். 23 தொகுதிக்கு 115 பேர்தான் நிர்வாகிகளாக வர முடியும். அதற்காக மற்றவர்களை ஒதுக்கிவிட்டதாக நினைக்கக்கூடாது. யாரையும் புறக்கணிக்கும் எண்ணம் கழகத்திற்கு இல்லை. புறக்கணிக்கப்படுகிறோம் என நினைக்கவும் கூடாது.
 
பொறுப்பு என்பது அடையாளம்தான். இதில் யாருக்கும் பாகுபாடு கிடையாது. மீதமிருப்பவர்கள் தொண்டரணி, மாணவரணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி என பல்வேறு கட்சி பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும். விண்ணப்பித்த 446 பேரும் பொறுப்பிற்கு செல்வார்கள். இதை கட்சித்தலைமையும், மாநில தலைமையும் பேசி வழங்கும். புதுவை மாநிலத்தில் எத்தனையோ சோதனைகளை கழகம் சந்தித்தாலும் கம்பீரமாக உள்ளது என்பதையே இங்கு திரண்டிருக்கும் இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி