ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || IL season 5 play off game chennai vs Delhi
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
சென்னை, மே. 25 -  


ஐ.பி.எல். சீஸன் - 5  கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சந்திக்கும்.  

இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.  

இந்த சீஸனில் இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் சென்னை அணி ஒரு வெற்றியும், டெல்லி அணி ஒரு வெற்றியும் பெற்றிருந்தது. சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோற்றுப் போனது. 

சென்னை அணியில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் விளையாடினார்கள்  ஆனால் டெல்லி அணியோ இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இப்போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மோர்னே மோர்கெலும், ஆல்ரவுண்டரான இர்பான் பதானும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு  பதிலாக ஆந்த்ரே ரஸ்ஸலும், புதிய சுழற்பந்து வீச்சாளர் சன்னி குப்தா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.  

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை துவக்கியது. சென்னை அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜயும் மைக் ஹஸ்ஸியும் களமிறங்கினர். 

ஹசி 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் ஒருபக்கம் விஜய் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். ரெய்னா தன் பங்குக்கு 17 பந்துகளில் 27 ரன்களும், கேப்டன் டோனி 10 பந்துகளில் 23 ரன்களும் சேர்த்து விஜய்க்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்தனர்.

தொடர்ந்து பவுண்டரி, சிக்சர்கள் விளாசிய விஜய் 51 பந்துகளில் சதம் அடித்ததுடன், ஐ.பி.எல் போட்டிகளில் 2 சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ மின்னல் வேகத்தில் ஆடி 12 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக ஆடிய விஜய் 58 பந்துகளில் 15 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 113 ரன்கள் விளாசி இன்னிங்சின் கடைசி பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வார்னர் 3 ரன்னிலும், கேப்டன் சேவாக் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் டெல்லி அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.

இறுதியில் டெல்லி அணி 16.5 ஓவர்களில் 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் சென்னை அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சதம் அடித்த சென்னை வீரர் முரளி விஜய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

4வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ள சென்னை அணி, இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை சந்திக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்