பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா? வாகன ஓட்டிகள் குமுறல் || petrol price increase public sad
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா?- வாகன ஓட்டிகள் குமுறல்
பெட்ரோல் விலை ரூ. 7.50 உயர்வு: மக்கள் ஏமாந்தவர்களா?- வாகன ஓட்டிகள் குமுறல்
பெட்ரோல் விலை நேற்று இரவு அதிரடியாக லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தப்பட்டது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லிட்டருக்கு ரூ.1, ரூ. 2 என்று உயர்த்தப்பட்ட நிலை மாறி தற்போது வரலாறு காணாத வகையில் ரூ. 7.50 உயர்த்தப்பட்டு உள்ளது.

சாதாரண நடுத்தர மக்கள் தலையில் விழுந்த இடியாக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிய நிலையில் நடுத்தர வர்த்தகத்தினர் உள்ளனர்.

மத்திய அரசு மக்களை ஏமாந்தவர்களாக நினைக்கிறது என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். அவர்களின் சிலரது குமுறல்கள் இதோ.....

ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (அயனாவரம்):- இப்படி பெட்ரோல் விலை உயர்த்தியது கடும் கஷ்டத்தை தருகிறது. இந்த உயர்வால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இப்போது வாங்கும் கட்டணத்தை விட கூடுதலாக 10 ரூபாய் கேட்பேன்.

சீனிவாசன் (தனியார் நிறுவன ஊழியர், புரசைவாக்கம்):- மக்களால் இந்தவிலை உயர்வை தாங்கி கொள்ள முடியாது. வாங்கும் சக்தி அதிகரித்தால் விலை உயர்வு பெரிதாக தெரியாது. இதனால் மிகவும் பாதிக்கப்படுவது மாத சம்பளக் காரர்கள்தான்.

ஆட்டோ டிரைவர் கதிரவன் (புரசைவாக்கம்):- மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி கேட்டால் பயணிகளுக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனால் சவாரிகள் கைவிட்டு போகிறது. இப்படியே விலையை உயர்த்தி கொண்டே போனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஷபி (தோல் கம்பெனி ஊழியர்):- பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். மாத பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு கணிசமான அளவு ஒரு தொகை செலவாகிறது. இதனால் மாத பட்ஜெட்டில் துண்டு விழும்.

கந்தன் (நுங்கம்பாக்கம்):- பொதுமக்களை ஏமாந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். சிலநாள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அமைதியாகி விடுவார்கள் என்று கருதுகிறார்கள். அதனால்தான் இப்படி ஒரேடியாக ரூ. 7.50 உயர்த்தி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இப்படி எல்லா சுமையையும் மக்கள் தலையிலேயே சுமத்துவது என்ன நியாயம்.

மோட்டார் சைக்கிளை எடுக்கவே பயமாக இருக்கிறது. வண்டியை வீட்டில் விட்டு விட்டு பஸ்சிலோ அல்லது நடந்தோ தான் செல்ல வேண்டும். உடனே பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif