புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வினர் 54 பேர் விருப்ப மனு || pudukkottai by election dmdk interested 54 persons apply Petition
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வினர் 54 பேர் விருப்ப மனு
புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வினர் 54 பேர் விருப்ப மனு
புதுக்கோட்டை,மே.4-
 
இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மரணம் அடைந்ததால் புதுக்கோட்டை தொகுதி காலியாக உள்ளது. அங்கு வருகிற ஜூன் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கார்த்திக் தொண்டைமான் கடந்த வாரமே பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.
 
அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அமைச்சர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைத்துள்ளார். அ.தி.மு.க. முழு வேகத்துடன் புதுக்கோட்டை தொகுதி முழுவதும் பிரசார பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் தி.மு.க. வேட்பாளரை களம் இறக்குமா? என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் ஏற்பட்டது. மே 17-ந்தேதி தி.மு.க. தன் முடிவை அறிவிக்கும் என்று கூறிய கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடாது என்று அறிவித்தார்.
 
புதுக்கோட்டை தொகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தி.மு.க. தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேர்தலை தி.மு.க. புறக்கணித்துள்ளதால் காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலருக்கு புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடலாம் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொகுதியில் காங்கிரசுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.
 
இந்த தொகுதியில் 1967, 1971, 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் நடந்த 6 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது தி.மு.க. கூட்டணி வேட்பாளர் மிக, மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனவே தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் ஆதரவுடன் நின்றால் ஓரளவு வாக்குகள் பெற்று செல்வாக்கை நிரூபிக்க முடியும் என்று புதுக்கோட்டை தொகுதி காங்கிரசார் கருதுகிறார்கள்.
 
ஆனால் காங்கிரஸ் மேலிடம் இடைத் தேர்தலில் களம் இறங்க விரும்புமா? என்று உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே புதுக்கோட்டை தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் புதுக்கோட்டை தேர்தலை பெரிதாக கண்டு கொள்ளாததால், எல்லோரது கவனமும் தே.மு.தி.க. பக்கம் திரும்பியுள்ளது. தே.மு.தி.க. போட்டியிடும் பட்சத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே நேரடி போட்டி என்ற சூழ்நிலை உருவாகும். எனவேதான் தே.மு.தி.க. முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
 
இதுபற்றி சமீபத்தில் விஜயகாந்த் கூறுகையில், தே.மு.தி.க. போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தே.மு.தி.க. சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரி வித்து 54 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஜாகீர், அவைத் தலைவர் சீனி வாசமூர்த்தி, கேப்டன் மன்ற செயலாளர் கருப்பையா, புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கருணாநிதி, நகரச் செயலாளர் சிங்கமுத்து, கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், திருமயம் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் விருப்ப மனு கொடுத்திருப்பவர்களில் முக்கியமானவர்கள்.
 
இந்த 54 மனுக்களும் சமீபத்தில் சென்னையில் உள்ள தே.மு.தி.க. கட்சி தலைமையகத்துக்கு அனுப்பப் பட்டன. தற்போது அந்த மனுக்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தீவிரமாக பரிசீலித்து வருகிறார். எனவே விரைவில் விஜயகாந்த் முடிவை அறிவிப் பார் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளரை நிறுத்தினால், தி.மு.க. மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் காங்கிரஸ் ஓட்டுக்களும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சாதக, பாதகம் குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் தன் முடிவை அறிவித்த பிறகே, புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பை எட்டுமா? என்பது தெரிய வரும். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - புதுக்கோட்டை

MudaliyarMatrimony_300x100px.gif