Recommendations
Recent Activity
சந்தேக போட்டோ கைக்கொடுத்தது: கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் வகுத்த 'சூப்பர் பிளான்'
வங்கி கொள்ளையர்களை வீழ்த்த போலீசார் 'சூப்பர் பிளான்' திட்டம் வகுத்து செயல்பட்டனர்.
 
கொள்ளை நடந்த 2 வங்கிகளும் சென்னை புற நகர்ப்பகுதியில் உள்ளது. நகருக்குள் கொள்ளையடித்தால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வோம் என்பதால் போக்குவரத்து நெருக்கடியில்லாத புறநகர்ப் பகுதியை தேர்வு செய்துள்ளனர்.
 
ஒரு மாதமாக பல வங்கிகளுக்கு சென்று நோட்டமிட்டுள்ளனர். பணப்புழக்கம் அதிகம் உள்ள, காவலாளி, கண்காணிப்பு காமிரா இல்லாத வங்கிகளை தேர்வு செய்து கொள்ளையடித்துள்ளனர். ஆனால் கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் 'சூப்பர் பிளான்' திட்டம் வகுத்து செயல்பட்டனர்.
 
போலீசின் தொழில் நுட்ப பிரிவும் பெரும் பங்கு வகித்தது. அவர்கள் தான் புறநகர்ப் பகுதியில் கண்காணிப்பு காமிரா உள்ள வங்கிகளுக்கு சென்று அதில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மர்ம மனிதன் ஒருவன் வங்கியை நோட்டமிடும் காட்சி தெரியவந்தது.
 
அவன் பாங்கிக்கு சாதாரண வாடிக்கையாளர் போல் வந்து நோட்டமிட்டு சென்றான். அங்கு கண்காணிப்பு காமிரா இருப்பதை தெரிந்து கொண்டு அந்த வங்கியை கொள்ளையன் தேர்வு செய்யாமல் விட்டு விட்டான்.
 
இதை தெரிந்து கொண்ட போலீசார் அந்த மர்ம மனிதனின் போட்டோவை சந்தேகத்தின் பேரில் வீடியோவாகவும், போட்டோவாகவும், பதிவு செய்து பத்திரிகைகளில் வெளியிட்டனர்.
 
கொள்ளையன் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அறிவித்து செல்போன் எண்களையும் வெளியிட்டனர். போலீஸ் திட்டத்துக்கு கை மேல் பலன் கிடைத்தது. கொள்ளையன் படம் வெளியானதைப் பார்த்த வேளச்சேரி வாசி ஒருவர் போலீசுக்கு பயனுள்ள தகவலை தெரிவித்தார். உடனே போலீஸ் படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
 
உயர்அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் விசேஷ போலீஸ் படை சென்று வீட்டை சுற்றி வளைத்தது. 5 பேரையும் உயிருடன் பிடிக்க திட்டம் போட்டனர். ஆனால் கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. அத்துடன் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டனர்.
 
இதனால் எதிர் தாக்குதலில் ஈடுபடவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் 5 பேரையும் சுட்டு வீழ்த்தி வெற்றிகரமாக திட்டத்தை முடித்து விட்டனர்.
 
தாக்குதலின் போது பொது மக்களுக்கு சேதம்,தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நள்ளிரவு நேரத்தை போலீசார் தேர்வு செய்தனர். கொள்ளையர்கள் காலையில் வெளியில் சென்றால் இரவு தாமதமாக வருவதை தெரிந்து கொண்ட பின்பு அந்தப் பகுதிக்குள் புகுந்தனர். இதனால் தான் என்கவுண்டர் நடந்த தகவல் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.
 
துப்பாக்கி சுடும் சத்தம் கூட தூங்கிக் கொண்டு இருந்த மக்களுக்கு கேட்காதவாறு கச்சிதமாக தாக்குதலை போலீசார் முடித்து விட்டார்கள்.
 
கடந்த சில மாதங்களாகவே தொடர் கொள்ளை சம்பவங்களால் போலீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகள் விழுந்தது. அதை துடைத்து எரிவது போல் வங்கி கொள்ளையர்களை வீழ்த்தி சென்னை போலீஸ் 'சபாஷ்' பெற்றுக் கொண்டது. இதற்காக சென்னை நகர போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மீண்டும் தனது பெயரை நிலை நாட்டி விட்டது.