Recommendations
Recent Activity
சென்னையை கலக்கிய 'என்கவுண்டர்' கொள்ளையர் தங்கிய வீட்டை பார்க்க ஆர்வம்
சென்னை, பிப் 23-
 
5 கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை நேற்று இரவு முதல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இன்று காலையில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் என் கவுண்டர் நடைபெற்ற வீட்டு முன்பு குவிக்கப்பட்டு இருந்தனர்.
 
அந்த வீட்டின் அருகில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி ஏராளமான பொது மக்கள் வந்து அந்த வீட்டை அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். அவர்களை போலீசார் அப்புறப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 
தொடர்ந்து பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்ததால் சாலையின் இரு புறமும் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். திரண்டு வந்த பெண்களை கட்டுப்படுத்த பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
 
தங்கள் பகுதிலா இவ்வளவு பெரிய கொள்ளையர்கள் தங்கி இருந்தார்கள்? என்று மிரட்டியுடன் பேசிக் கொண்டதை பார்க்க முடிந்தது. இந்த காலத்தில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பேசிக் கொண்டார்கள்.
 
கொள்ளையர்களை சுட்டுக் கொன்ற போலீசாருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பொது மக்கள் சிலர் கூறிய கருத்துக்கள் வருமாறு:-
 
ஜேசுபிரகாஷ் (ஆசிரியர்)
 
வாடகைக்கு வீடு கொடுக்கும் போது வீட்டு உரிமையாளர்கள் நன்றாக விசாரித்து கொடுக்க வேண்டும். வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் வாடகைக்கு விடாமல் இருப்பது நல்லது. அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு சிலர் வட மாநிலத்தவர்களை குடி வைக்கிறார்கள். நேற்று நடந்த சம்பவத்தை பார்க்கும் போது சரியான நேரத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
 
ராணி (குடும்பத் தலைவி)
 
எங்கள் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரின் டயரை கூட கழட்டி சென்று விட்டார்கள். இந்த பகுதியில் கொள்ளை சம்பவம் அதிகமாக நடக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய கொள்ளயைர்கள் இந்த பகுதியில் தங்கி இருந்ததை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
 
ரகுபதி (டிரைவர்)
 
கடந்த 20 நாட்களாகவே இந்த பகுதியில் போலீசார் ரோந்து தீவிரமாக இருந்தது. இந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக அமர்ந்து பேசுவார்கள். அந்த கூட்டத்தில் இவர்களும் இருந்தார்களோ என்பது சந்தேகமாக உள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.