வெளிநாட்டு வேலை தருவதாக மோசடி: ஊட்டி போலீஸ் நிலையத்தில் வாலிபரிடம் தீவிர விசாரணை
Nilgiris
வியாழக்கிழமை,
பெப்ரவரி 23,
10:58 AM IST
1
கருத்துக்கள்
ஊட்டி, பிப். 23-
ஊட்டியை சேர்ந்தவர் விக்கி என்ற விவேக்(வயது24). பட்டதாரியான இவரை கடந்த 21-ந் தேதி சிலர் காரில் கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்கள் பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் காரை சிறிது நேரம் நிறுத்தியிருந்தனர். அந்த சமயத்தில் விவேக் காரில் இருந்து இறங்கி தப்பி விட்டார்.
நேராக பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர் தன்னை சிலர் காரில் கடத்தியதாக புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது விவேக் பிரபல மோசடி பேர்வழி என்பது தெரிய வந்தது. அவர் கோவை, திருப்பூர், காரைக்குடி, சத்தியமங்கலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை சுருட்டிய விவரம் வெளியானது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் போலீசார் விவேக்கை நேற்று மதியம் ஊட்டிக்கு அழைத்துச் சென்றனர். ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
இன்று விவேக்கை ஊட்டி குருத்துக்குளியில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அவரது வீட்டில் சோதனையும் நடத்துகிறார்கள். விவேக்கிடம் நடந்த விசாரணையில் மோசடியில் மேலும் 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் தனிப்படை போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். விவேக் மீது தொடர்ந்து போலீசில் புகார்கள் குவந்த வண்ணம் உள்ளது. விவேக்கை கடத்தியவர்கள் யார்? என்பதை அறியவும் விசாரணை நடந்து வருகிறது.
1
கருத்துக்கள்