Recommendations
Recent Activity
விளாத்திகுளம் அருகே குடும்ப தகராறில் மனைவி வெட்டிக் கொலை: தப்பி ஓடிய கணவருக்கு வலைவீச்சு
விளாத்திகுளம், பிப்.22
 
விளாத்திகுளம் அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்து தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 
விளாத்திகுளம் புதூரை அடுத்துள்ள பூதலபுரத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். அவருடைய மகன் காரல் மார்க்ஸ் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி (23). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
 
காரல்மாரக்ஸ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நாகலட்சுமி, கணவருடன் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று விட்டார்.
 
இந்த நிலையில் மனைவியை அழைத்து செல்வதற்காக நாகலட்சுமியின் பெற்றோர் வீட்டுக்கு காரல்மார்க்ஸ் சென்றார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காரல்மார்க்ஸ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகலட்சுமியை மனைவி என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார்.
 
பலத்த காயம் அடைந்த நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து காரல்மார்க்ஸ் தப்பி ஓடி விட்டார்.
 
தகவல் தெரிந்ததும் காடல்குடி போலீசார் இறந்த நாகலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய காரல்மார்க்சை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
 இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.