Recommendations
Recent Activity
தூக்கத்தை தொலைத்து தேடுதல் வேட்டை: வங்கி கொள்ளையர்களை பிடிக்க ரெயில்களில் அதிரடி சோதனை- சென்ட்ரலில் போலீஸ் குவிப்பு
பெருங்குடி பரோடா வங்கி..., கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி... என துப்பாக்கி கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டிய சம்பவம் சென்னை மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், ஆகியோரது மேற்பார்வையில் தென் சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 தனிப்படைகளும், சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 30 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக 2 வங்கிகளில் மிகவும் துணிச்சலுடன் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது போலீசுக்கு சவால் விடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை போலீசார் தூக்கத்தை தொலைத்து இரவு- பகல் பாராமல் கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

சிவப்பு நிற மாருதி வேனில் சென்ற கொள்ளையர்கள் பலத்த போலீஸ் சோதனையையும் தாண்டி தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். பெருங்குடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களின் வரை படத்தை வெளியிட்ட போலீசார் அவர்கள் பற்றி துப்பு துலங்குவதற்காக, 98842-03821 என்ற செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளனர்.

24 மணி நேரமும் இந்த எண்ணில் கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. பொதுமக்கள் பலர் தங்களின் தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக்கொள்வதற்கு அந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக் கொண்டனர். தங்களுக்கு பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரர்களை மாட்டி விடுவதற்காகவே பலர் போன் செய்து பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் போலீசாரின் முயற்சிகளுக்கு தடைக்கற்களாகவே அமைந்துள்ளன. இதற்கிடையே வங்கி கொள்ளையர்களை பிடிக்க ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகளின் உடமைகளும் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது.