கிரிஷ்நகர் (மே.வங்கம்), பிப், 22-
'வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்திருக்கிறாயே சோம்பேறி' என திட்டியதால் பெற்ற தாயையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்திலுள்ள கோவாலியா கிராமத்தை சேர்ந்தவர் ரமணி மோண்டல் (58). இவரது மகன் தீபக். தீபக்கின் மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகிறாள். அச்சிறுமியை அவளது பள்ளியில் கொண்டுபோய் விடச் சொல்லி இருக்கிறார் ரமணி. இதற்கு தீபக் மறுத்துவிடவே ரமணி அவரை திட்டியுள்ளார்.
'வேலைக்கும் செல்வதில்லை, வீட்டிற்கும் ஒத்தாசை செய்வதில்லை. இப்படி சோம்பேறியாக இருக்கிறாயே' என தன் மகனை கண்டித்தார் ரமணி. இதனால் கோபமடைந்த தீபக் மூங்கில் கழியால் ரமணியின் மண்டையில் தாக்கி விட்டு தலைமறைவாகிவிட்டார்.
ரத்தவெள்ளத்தில் சரிந்த ரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமணி உயரிழந்தார். இதுகுறித்து சாந்திப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.