சென்னை, பிப். 22-
44-வது இந்திய தொழிலாளர் மாநாடு மத்திய மந்திரி மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் தொ.மு.ச. பேரவை சார்பில் பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் சிங்கார ரத்தினசபாபதி, இணைப்பொதுச் செயலாளர் பேச்சிமுத்து உள்பட ஏராளமான தொழிற் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதில் பொதுச் செயலாளர் சண்முகம் பேசும்போது கூறியதாவது:-
மத்திய மாநில அரசின் ஆலோசனைக் குழுக்களில் தொழிற்சங்ககளுக்கு விகிதா சாரப்படி இடம் அளிக்க வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு உரிய விகிதம் பயற்சியாளர் சட்டத்தில் உள்ளது போல் தொழில் நுட்ப இல்லாதவர்களுக்கும் பயிற்சி காலம் 6 மாதத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் என கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கலைஞரால் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்ததை மத்திய அரசு ஏற்று செயல் படவேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் ரூ.1000 கோடி நிதி போதாது. சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு தொழிலாளர்கள் பங்களிப்பு இல்லாமல் தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் வழங்கியதுபோல் அனைத்து வாரியங்களுக்கும் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.
அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாட்டில் உள்ளதுபோல் காப்புறுதி திட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும். மத்திய அரசில் மக்கள் பயன்பாட்டுக்கு சேவை செய்யும் துறைகளை லாபநோக்கில் பார்க்காமல் அந்ததுறை ஊழியர்களுக்கும் ஊதியம், போனஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு சண்முகம் வலியுறுத்தினார்.
அங்கு தொ.மு.க. பொருளாளர் சிங்கார ரத்தினசபாபதி கூறுகையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகள், காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தினால் தொழிலாளர்கள் முன்னேற வாய்ப்பு ஏற்படும் என்றார்.