Recommendations
Recent Activity
துப்பாக்கி முனையில் தொடர் கொள்ளை: வங்கிகளில் கைவரிசை காட்டியது முன்னாள் மாணவர்கள்- கேமராவில் சிக்கிய வாலிபர் பற்றி தீவிர விசாரணை
சென்னை, பிப். 22-

சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23-ந்தேதி துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது போலீசாரை மட்டுமின்றி பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக்கொள்ளை கும்பலை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் வடமாநில மாணவர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மாணவர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் சிக்கினர். இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபாடு கொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர் வங்கிகளில் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சென்னையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படாத 400-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள போலீசார் ஒரு சில வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர். தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தபோது, அதில் சந்தேகத்தக்கிடமாக மாணவர் போன்ற தோற்றத்தில் வாலிபர் ஒருவர் சுற்றிதிரிவது தெரிய வந்தது.

அந்த வாலிபருக்கும் வங்கி கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர் யார் என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் வட மாநில வாலிபர்கள் பலர் கட்டிட தொழிலாளர்களாகவும், ஓட்டல் தொழிலாளர்களாகவும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் தங்களது சொந்த மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களில் யாராவது வங்கி கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பற்றி உளவு பிரிவு போலீசாரும் கணக்கெடுத்து வருகிறார்க்ள. தங்களது பகுதியில் வசித்து வரும் வட மாநில வாலிபர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.