சென்னை, பிப். 22-
சென்னை ஐகோர்ட்டு எதிரே உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த 9-ந்தேதி ஆசிரியை உமா மகேஸ்வரியை அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப் பறையில் கத்தியால் குத்தி கொலை செய்தான்.
இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.
பின்னர் அவன் புரசைவாக்கத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
இந்த நிலையில் ஆசிரியை உமாமகேஸ்வரி கொலையில் மாணவன் மட்டும் ஈடுபட்டானா? இதில் வேறு யாருடைய தூண்டுதலும் உள்ளதா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். கோர்ட்டு உத்தரவுப்படி அவனை இன்ஸ்பெக்டர் செல்லப்பா காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்.
காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை 3 மணி வரை நீடித்தது. 5 மணி நேரம் நடந்த தீவிர விசாரணையின்போது அவன் ஏற்கனவே கூறியது போல் படிக்காததை கண்டித்தால் கொலை செய்ததாகவும், இது நானே எடுத்த முடிவு என்று கூறியதாக தெரிகிறது.
அப்போது கொலை செய்தது எப்படி என்றும், நடித்து காட்டி உள்ளான்.
ஆசிரியை உமாமகேஸ்வரியை கொலை செய்ததற்கான முழு காரணத்தையும் அவனிடம் இருந்து போலீசார் பதிவு செய்தனர்.
பின்னர் அவன் மீண்டும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.