லக்னோ, பிப். 22-
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 5-வது கட்டமாக 49 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
யாதவர்கள் அதிகம் வசிக்கும் பந்தல்காண்ட், மத்திய உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கி உள்ளன. 49 தொகுதியிலும் மொத்தம் 829 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் மெயின்புரி, அவரது மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் பைரோசா மாத் தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.இதேபோல் உமாபாரதி போட்டியிடும் மற்றொரு வி.ஐ.பி. தொகுதியான சர்காரி தொகுதியில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி உ.பி. தேர்தலில் பாரதீய ஜனதாவின் முக்கிய வி.ஐ.பி.யாக களம் இறக்கப்பட்டுள்ளார். பிரசாரத்தின் போது அவரை வெளி மாநிலத்தவர் என்று ராகுல் காந்தி விமர்சித்தார். பதிலுக்கு சோனியா வெளிநாட்டவர் என்று உமாபாரதி விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உமாபாரதியை எதிர்த்து மாயாவதி கட்சி சார்பில் முன்னாள் மந்திரி பாபுசிங் போட்டியிடுகிறார். இவர் தேசிய ஊரக சுகாதார திட்ட ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவி இழந்தவர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு அவரது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. இங்கு ஊழலை மையமாக வைத்து பிரசாரம் நடந்தது. ஓட்டுப் பதிவையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
6-வது கட்ட தேர்தல் 28-ந்தேதியும், 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் மார்ச் 3-ந்தேதியும் நடக்கிறது. மார்ச் 6-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.