Recommendations
Recent Activity
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ரிக்கி பாண்டிங் அறிவிப்பு
சிட்னி, பிப். 21-
3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 9-வது, 10-வது போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மோசமான ஆட்டம் காரணமாக முன்னாள் கேப்டன் பாண்டிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
ஆஸ்திரேலிய தேர்வு குழுவினரின் இந்த அதிரடி முடிவால் பாண்டிங் அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாண்டிங் இன்று அறிவித்துள்ளார்.
 
டெஸ்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக 37 வயதான பாண்டிங் சிட்னியில் இன்று நிருபர்களிடம் கூறிய தாவது:-
 
ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 5 ஆட்டத்தில் எனது ஆட்டம் மோசமாக இருந்ததால் எந்த வித உத்தரவாதமும் இருக்காது என்றே நினைத்தேன்.
 
தேர்வு குழு தலைவர் என்னிடம் தெளிவாக கூறிவிட்டார். ஒருநாள் போட்டியில் இனி விளையாடுவேன் என்று எதிர்பார்ப்பு இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இதனால் ஓய்வு பெறுகிறேன்.
 
ஆனால் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன். டாஸ் மேனியா அணிக்காக தொடர்ந்து ஆடுவேன். இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.
 
பாண்டிங் 1995-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 375 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,704 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.03 ஆகும். 30 சதமும், 82 அரை சதமும் அடித்து உள்ளார்.