மேலும் தலைப்புச்செய்திகள்
Recommendations
Recent Activity
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: 72 மணி நேர உண்ணாவிரதம்- போராட்டக்குழு புதிய அறிவிப்பு
ராதாபுரம், பிப்.21-
 
கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக நிபுணர் குழுவினர், போராட்டக் குழுவினருடன் சுமார் 3 1/2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த கூட்டத்தில் போராட்டக்குழு சார்பில் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தங்கள் பகுதி மக்களிடமும், தாங்கள் அமைத்து உள்ள 29 பேர் கொண்ட குழுவுடனும் தமிழக நிபுணர் குழு பேச்சு நடத்த வேண்டும் என்பதே அந்த கோரிக்கைகள் ஆகும்.
 
ஆனால் அந்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் சிவகுமார் என்பவர் கூடங்குளம் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இதையட்டி கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் குவிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் கூடங்குளம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
 
இதற்கிடையே இடிந்தகரை பாதிரியார் பங்களாவில் நேற்று பகல் 11.30 மணிக்கு போராட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பாதிரியார் ஜெயக்குமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், முகிலன், சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டதாக கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாலை 3.30 மணி வரை ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது. கூட்டத்திற்கு பிறகு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:-
 
அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளும், சர்வதேச அணுசக்தி கழக உறுப்பினர்களும் ரகசியமாக வேலையை தொடங்கி செய்கின்றனர். ரகசியமாக வேலைகளை செய்து தமிழக அரசையும், தமிழக மக்களையும் அவமதித்து உள்ளனர்.
 
இந்திய அணுசக்தி கழகத்தையும், கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு நிபுணர்குழு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஓரிரு மணி நேரத்தில் ஆய்வு செய்து விட்டு, தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி அரசுக்கு அறிக்கை கொடுப்பதற்கு முன்பாகவே, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிவித்து உள்ளது. அது அரசை அவமதிக்கும் செயலாகும்.
 
மாநில நிபுணர் குழு எங்கள் மக்களுடைய கோரிக்கைகளையும் கேட்க வேண்டும். நாங்கள் அமைத்து உள்ள 29 பேர் கொண்ட நிபுணர் குழுவிடமும் பேச வேண்டும். இந்த 2 கோரிக்கைகளையும் தமிழக நிபுணர் குழு ஏற்கவில்லை.
 
சென்னை சென்று கூடி விவாதித்து முடிவு எடுப்பதாக கூறி உள்ளனர். அந்த கருத்து மீது நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழக அரசு கூடங்குளம் அணு மின்நிலையத்தின் மொத்த பாதுகாப்பு பற்றிய அறிக்கையை கேட்டு உள்ளது. ஆனால் இனியன் தலைமையிலான குழு மக்களை சந்திக்க முடியாது என கூறிவிட்டனர்.
 
மகா சிவராத்திரியையட்டி நள்ளிரவு முதல் 72 மணி நேர புதிய உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதே நேரத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டம் எதற்கு என்றால், நிபுணர் குழுவினர் மக்களை நேரில் சந்திக்க வேண்டும், எங்களுடைய நிபுணர் குழுவையும் சந்திக்க வேண்டும் என்று மாற்றம் கொண்டுவர கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். இந்த வழிபாடு கூட்டம் மூலமாக தமிழக அரசு மனம் இறங்கி, தமிழக நிபுணர் குழு இறங்கிவர கடவுள் துணை புரிவார் என நம்புகிறோம்.
 
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
 
போராட்ட குழுவினரின் புதிய போராட்ட அறிவிப்பு பற்றி நேற்று மாலை கூடங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. ஒருசில கிராமங்களில் ஊர் கூட்டம் நடத்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டது.