சென்னை, பிப். 20-
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஊர்வசியின் திருட்டு பாட்டியாக வரும் கேரக்டரும்... மகாநதி படத்தில் கமலின் மாமியாராக குணசித்திர வேடத்தில் நடித்த கேரக்டரும் முக்கியத்துவம் ஆனவை.
பாக்தாத் திருடன் படத்தில் டூப் போடாமல் புலியுடன் சண்டை போட்டு எம்.ஜி.ஆரிடம் பாராட்டு பெற்றார். இதய வீணை, விவசாயி, பாபு, சங்கே முழங்கு, உதயகீதம், சிறை, ஜீன்ஸ், மாட்டுக்கார வேலன், பட்டிக்காடா பட்டணமா, ராமன் எத்தனை ராமனடி, சர்வர் சுந்தரம், படையப்பா, சினேகிதியே, ரிதம், தேவர் மகன், விருமாண்டி உள்பட 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முந்தானை முடிச்சு, தென்றல், சரவணன் மீனாட்சி போன்ற டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் எஸ்.என்.லட்சுமி கீழே தவறி விழுந்து இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டார். வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இரு தினங்களுக்கு முன் ஆபரேஷன் நடந்தது. ஆஸ்பத்திரியிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு எஸ்.என்.லட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 84. எஸ்.என்.லட்சுமிக்கு திருமணம் ஆகவில்லை. சாலி கிராமம், சாந்தி காலனியில் உள்ள வீட்டில் அண்ணன் பேரன்கள் மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. எஸ்.என். லட்சுமி உடலுக்கு நடிகர்-நடிகைகள் உள் ளிட்ட திரையுலக பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான விருது நகர் அருகே உள்ள சென்ன குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது. எஸ்.என்.லட்சுமி மறை வுக்கு நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.